Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | நீதித்துறைச் சீராய்வு பொது நலவழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை

இந்திய நீதித்துறை | அரசியல் அறிவியல் - நீதித்துறைச் சீராய்வு பொது நலவழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary

   Posted On :  02.04.2022 07:01 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை

நீதித்துறைச் சீராய்வு பொது நலவழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை

இந்திய உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இத்தகைய நீதித்துறைச் சீராய்வு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.சட்டம் இயற்றுவது மற்றும் அதனைச் செயல்படுத்துவது என இரண்டின் மீதும் அரசமைப்புப்படி மறு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வகையில் இந்த அதிகாரம் விரிவான வரம்புகளைக் கொண்டுள்ளது. இதே அடிப்படையில் ஒரு அரசமைப்புத் திருத்தச் சட்டம் மீதே சீராய்வு மனு தாக்கல் செய்யும் அளவுக்கு நீதித்துறைச் சீராய்வு அதிகார வரம்பு விரிவடைந்ததாகக் காணப்படுகிறது.

நீதித்துறைச் சீராய்வு பொது நலவழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை


நீதித்துறைச் சீராய்வு

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பிற்கு முரணாக இருக்குமானால் அச்சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்படலாம். இந்திய உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இத்தகைய நீதித்துறைச் சீராய்வு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்றுவது மற்றும் அதனைச் செயல்படுத்துவது என இரண்டின் மீதும் அரசமைப்புப்படி மறு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வகையில் இந்த அதிகாரம் விரிவான வரம்புகளைக் கொண்டுள்ளது.

இதே அடிப்படையில் ஒரு அரசமைப்புத் திருத்தச் சட்டம் மீதே சீராய்வு மனு தாக்கல் செய்யும் அளவுக்கு நீதித்துறைச் சீராய்வு அதிகார வரம்பு விரிவடைந்ததாகக் காணப்படுகிறது. இந்த வழக்குகள் அரசமைப்பு திருத்தச் சட்டம் ஒரு அரசமைப்பின் அடிப்படை கோட்பாட்டுக்கு பாதிப்பிற்குள்ளாகிறதா என்று மறு ஆய்வு செய்வதாகும். உதாரணமாக மதச்சார்பற்றத்தன்மை, மக்களாட்சி, கூட்டாச்சிமுறை போன்றவை மீதான திருத்தச் சட்டம், அரசமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கருதினால் அத்திருத்தச்சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது எனவே செல்லாது என்று அறிவிக்கப்படும்.


பொது நல வழக்கு

பொது மக்கள் நலன் கருதி எந்த ஒரு தனிநபரும் நீதிமன்றத்தை நாடி மனு அளிக்க முடியும். இது பொது நல மனு எனப்படுகிறது. இதன்படி, அரசமைப்பு உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திலும், அரசமைப்பு உறுப்பு 226இன் கீழ் உயர் நீதிமன்றங்களிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி நடுவர் நீதி மன்றங்களிலும் பொது நல வழக்கிற்கான மனுவைத் தாக்கல் செய்ய முடியும். மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட வகைகளில் பொது நல வழக்குகள் தொடர முடியும்;

1. கொத்தடிமை தொழிலாளர்கள் முறை தொடர்பான விவகாரங்கள் 

2. கைவிடப்பட்ட (ஆதவற்ற) குழந்தைகள் 

3. குறைந்தபட்ச கூலி வழங்காமை

4. சிறைச்சாலையில் நிகழும் மரணம், வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள்; விரைவான நீதி அடிப்படை உரிமை என்பதால் துரித விசாரணை கோருதல்

5. வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல் துறை அதிகாரிக்கு எதிராக வழக்கு மனுதாக்கல் செய்தல், வரதட்சனை கோரி பெண் வன்கொடுமை, மணப்பெண் தீவைப்பு, பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை, வதை போன்ற குற்றங்களுக்கு எதிரான புகார்கள்.

6. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை புகார்.

7. சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்புடைய புகார்கள் என வகைப்படுத்துகின்றன.

அரசமைப்பு உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பொது நல மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தமக்குள் இணைத்துக் கொண்டுள்ளது. பொது நல வழக்கு என்பது ஒரு பகைத் தன்மையில் வழக்கு தொடுக்கும் முறையல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகும் சமூகப் பிரிவினர்களுக்கு மனித உரிமைகளை அர்த்தமுள்ளதாகவும்,அவர்களுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள சமூக - பொருளாதார நீதியை உறுதிப்படுத்தவும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குவதுடன் அவ்வாறு செயல்படாத அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரிக்கிறது. மாநில அரசுகள், மத்திய அரசு, மாநகராட்சி ஆகியவற்றிக்கு எதிராக பொது நல வழக்கு தொடர முடியும். ஆனால், தனிநபருக்கு எதிராக பொது நல வழக்கு பதிவு செய்ய முடியாது.

அண்மையில் இந்தியாவில் ஏராளமான பொது நல மனுக்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படுவதைக் காணமுடிகிறது. உச்ச நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு ஒரு வழக்கை பொது நல வழக்காகத் தீர்மானித்தது. பொது நலனுக்கான சமூகம் எதிர் இந்திய அரசு (Common Cause Society Vs Union of India), என அவ்வ ழக்கு பதிவு செய்யப்பட்டது. பெருகி வரும் சாலை விபத்துகளை கருத்திற்கொண்டு சாலை பாதுகாப்பு சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவே பொது நல வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதேபோல அங்கம்மாள் பாண்டே எதிர் உத்தரபிரதேச மாநில அரசு என்றவழக்கில், உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, கன்சிராம் நினைவு அரங்கம் அருகே நடைபெறும் கட்டுமானப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்தது.

இதேபோல மக்களாட்சி உரிமைக்களுக்கான மக்கள் ஒன்றியம் எதிர் இந்திய அரசு (Peoples' Union for Democratic Rights Vs. Union of India) என்ற வழக்கினையும் உச்ச நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்துக் கொண்டது. சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுக இயலாத நிலையில் இருப்பதால் இத்தகைய தனிநபர் அல்லது குழுவினருக்கு அரசமைப்பு ரீதியான தீர்வு கோரி பொது ஆர்வம் கொண்ட குடிமக்கள்' நீதிமன்றத்தை நாடும்போது அதனை பொது நல வழக்காகக் கருதலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதனை பொது நல வழக்காக அனுமதித்தது. பொது நல வழக்குகள் என்பவை "பங்களிப்பு நீதி" எனும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்; குடிமை வழக்குகளாக இவை நீதிமன்றங்களால் தாராளமாக வரவேற்கப்படுகிறது.

பரமானந் கட்டாரா எதிர் இந்திய அரசு என்ற வழக்கு (Parmanand Katara Vs. Union of India) பொதுமக்கள் நலனுக்காகப் பாடுபடும் மனித உரிமை செயற்பாட்டாளர் தொடுத்த பொது நல வழக்கு ஆகும். இதில் மருத்துவ தொழிலில் உள்ள ஒவ்வொரு பரமானந் கடாரா நபரும், காயமடைந்த எந்த ஒரு குடிமகனுக்கும் வழக்கமான நடைமுறைகளைக் காரணங்காட்டி (Procedural Formalities) காத்திருக்க வைக்காமல் மருத்துவ உதவியினை செய்யவேண்டும் எனும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது.


நீதித்துறை செயல்பாட்டு முறை

மாறிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீதித்துறை மேற்கொள்ளும் வீரியமிக்க செயற்பாடுகள் நீதித்துறை செயல்பாட்டு முறை எனப்படுகிறது. அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர் என்பவர் "உச்ச நீதிமன்றம்" 1947 என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்றில் "Judicial Activism" (நீதித்துறை செயல்பாட்டு முறை) என்ற சொல்லினை அறிமுகப்படுத்தினார். பிளாக்ஸின் சட்ட அகராதி (Black's Laiv Dictionary) , "Judicial Activism" - என்ப து ஒரு "நீதித்துறை தத்துவம்" என்று கூறுகிறது. அது நீதிபதிகளை பழமைவாதத்திலிருந்து பிரித்து புதிய முற்போக்கான சமூக கொள்கைகளுக்கு ஆதரவாக ஊக்கப்படுத்துவதாகும்.


சட்டம் இயற்றுதல் என்பது நீதித்துறை செயல்பாட்டு முறை மூலம் (Judicial Activism) புதிய பரிணாமத்தை பெற்றிருக்கின்றது. சமூகக் கண்ணோட்டத்தில் சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் ஆரோக்கியமான போக்கு நீதித்துறையில் காணப்படுகிறது. அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் அல்லாமல் தனிநபர் அல்லது அரசியல் சக்திகளுக்கு சாதகமாக மேற்கொள்ளப்படும் நீதிமன்ற உத்தரவுகளை நீதித்துறை செயல்பாட்டு முறை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. நீதித்துறை செயல்பாட்டு முறை என்பது அரசமைப்பின் விளக்கம், சட்டப்பூர்வ அடித்தளங்கள் மற்றும் அதிகாரப் பிரிவினை ஆகியன தொடர்புடையதாகும்.

செயல்பாடு

ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் நீதிமன்றக் கருத்தின் மீது மாற்றுக் கருத்து கொள்ளும் உரிமை உங்களுக்கு உள்ளதா? அவ்வாறாயின் எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்? வகுப்பில் மூன்று மாணவர்களாகப் பிரிந்து கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் விவாதிக்கவும்.

) நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தல்

) விமர்சித்தலின் பின்விளைவுகள்

இந்திய நீதித் துறையானது, அரசின் ஒரு அங்கமாக இருக்கின்றபடியால், அதன் அமெரிக்க நீதித்துறைப் பிரிவைக் காட்டிலும் மிகுந்த செயலாக்கம் மிக்க பணியினை ஆற்றுகிறது. அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள கொள்கைகள்,கோட்பாடுகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்திய சமூகத்தை ஒரு நவீன சமூகமாக மாற்றும் தீர்ப்புகளை வழங்குகின்றன. இந்திய அரசமைப்பு உறுப்பு 21 அடிக்கடி உச்ச நீதிமன்றத்தில் எடுத்தாளப்படுகிறது. இந்த அரசமைப்பு உறுப்பின் மீதான தீர்ப்புகள் யாவும் நீதித்துறை செயல்பாட்டு முறைப் போக்கினை பிரதிபலிக்கின்றன.

. கே. கோபாலன் எதிர் மதராஸ் மாநில அரசு எனும் வழக்கில், ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள செயல்முறைகள் அடிப்படையில் மட்டுமல்லாமல் பகுத்தறிவு மற்றும் நீதியின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. எனினும், அதனைத் தொடர்ந்து மேனகா காந்தி எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், மேற்கண்ட நியாய வாதத்தினை நீதிமன்ற விளக்கம் மூலம் அரசமைப்பு உறுப்பு 21-ல் துணைப்பிரிவாகச் சேர்க்கப்பட்டது.


இது, அரசமைப்பு உருவாக்கத்தின்போது தவிர்க்கப்பட்ட பிரிவாகும். எனினும், அடுத்தடுத்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தும் இருக்கிறது. உதாரணமாக, சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக, ஆண்-பெண் இருவரை கெளரவக் கொலை செய்த பகவான் தாஸ் வழக்கில், (பகவான்தாஸ் எதிர் தில்லி மாநில அரசு) அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆஸ்திரேலியா நீதிமன்றம்

ஆஸ்திரேலியா நாட்டின் உயர்நிலை நீதியமைப்பு உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. அங்கு மாநிலத் தலைமை நீதிமன்றங்களே உச்ச நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது.


Tags : Indian Judiciary | Political Science இந்திய நீதித்துறை | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 4 : Indian Judiciary : Judicial Review, Public Interest Litigation And Judicial Activism Indian Judiciary | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை : நீதித்துறைச் சீராய்வு பொது நலவழக்கு மற்றும் நீதித்துறை செயல்பாட்டு முறை - இந்திய நீதித்துறை | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை