அரசியல் அறிவியல் - இடை காலத்தில் இந்தியாவில் நீதித்துறை அமைப்பு | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary
இடை காலத்தில் இந்தியாவில் நீதித்துறை அமைப்பு
இடைக்கால இந்தியாவில் பேரரசை நிர்வகிக்கும் சுல்தான் சுல்தானா ஆகியோரே நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் கீழ்க்கண்ட தகுதி நிலைகளில் இருந்து நீதி நிர்வாகத்தை நடத்தினர். அவற்றின் பெயர்கள் பின்வருமாறு;
• திவான்-இ- குவாசா (நடுவர்),
• திவான்-இ-மசலிம் (அதிகாரத்துவத்தின் தலைவர்) மற்றும்
• திவான்-இ-ரியாசத் (தலைமை தளபதி).
இடைக்கால இந்தியாவில் நிர்வாக அமைப்புமுறைகளே நீதித்துறை அமைப்புகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றங்களின் அதிகார வரம்பானது தலைநகரம், மண்டலம், மாவட்டம், பர்கானா (வட்டம்) மற்றும் கிராமம் என நிலப்பரப்பு அடிப்படையில் தெளிவாக பிரிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, சுல்தானத்தின் தலைநகரில் கீழ்க்கண்ட ஆறு வகையான நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு இருந்தன.
• மன்னர் நீதிமன்றம்
• மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றம் (திவான் - அல் - மசாலிம்)
• குடிமையியல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் (திவான் - இ - ரிசாலட்)
• மாநிலத் தலைமை நீதிபதி நீதிமன்றம் (சத்ரே ஜகான் நீதிமன்றம்)
• தலைமை நீதிபதி நீதிமன்றம்
• தேசத்துரோக வழக்குகள் நீதிமன்றம் (திவான் - இ - ரியாசட்)
மன்னர் நீதிமன்றம் சுல்தானால் தலைமையேற்று நடத்தப்பட்டது. இந்த நீதிமன்றம் அசல் அதிகாரவரம்பு (Original Jurisdiction) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் என இரண்டும் கொண்ட அமைப்பாகச் செயல்பட்டது. நீதி நிர்வாகத்தைப் பொருத்தவரை இதுவே உச்சபட்ச மேல்முறையீட்டுத் தீர்ப்பாகும். முப்தி (சட்டவல்லுனர்) எனப்படும் சட்டவல்லுனர்கள் சுல்தானுக்கு உதவியளித்தனர்.
திவான்-அல்-மசாலிம் மற்றும் திவான்-இ-ரிசாலட் நீதிமன்றங்கள் முறையே தேச துரோக வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றங்களாகும்.
இந்த நீதிமன்றங்கள் அலுவலக ரீதியாக சுல்தானால் தலைமை தாங்கி நடத்தப்பட வேண்டும் எனினும், அவர் அதிகமாக குற்றவியல் நீதி விசாரணைகளின் போது மட்டுமே கலந்து கொண்டார். சுல்தான் இல்லாத போது குவாசி-உல்-குசாட் எனும் அரசின் நீதிமன்ற தலைமை அலுவலர் தலைமை தாங்கி நடத்துவார். ஆனால், பின்னர் சத்ரே ஜகான் எனும் அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக செயல்பட்டார். இந்த சத்ரே ஜகான் நீதிமன்றமும் மற்றும் தலைமை நீதிபதி நீதிமன்றமும் பின்னர் அலாவுதீன் கில்ஜி ஆட்சியில்
இணைக்கப்படும் வரை நீண்டகாலமாகத் தனித்தே இயங்கின. தலைமை நீதிபதியின் நீதிமன்றம் குடிமையியல் மற்றும் குற்ற வழக்குகளைக் கையாண்டது. தலைமை நீதிபதியின் கீழ் திறமையான, நேர்மையான, மதிக்கப்பட்ட உதவி நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முப்தி, பண்டிட், மொக்டாசிப் (அரசு வழக்கறிஞர் தரப்பு) தாத்பாக் (நிர்வாக அலுவலர்) போன்ற அலுவலர்கள் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டிருந்த அலுவலர்கள் ஆவர். திவான்-இ-ரியாசத் பெரும் தேச துரோக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ஆகும்.