Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

அரசியல் அறிவியல் - நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary

   Posted On :  13.05.2022 06:34 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை

நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

கிழக்கிந்திய கம்பெனி 1600 ஆண்டு முதலாம் ராணி எலிசபெத்தின் சாசன சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது.

நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு

கிழக்கிந்திய கம்பெனி 1600 ஆண்டு முதலாம் ராணி எலிசபெத்தின் சாசன சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் மேற்கொள்ளத் தேவையான ஒழுங்கு முறைகள் மற்றும் அங்கீகாரத்தை அரசு அளித்தது. மதராஸ் நிர்வாகத்தைப் பொருத்தவரை 1661-ஆம் ஆண்டு சாசன சட்டம் ஒரு ஆளுநர் அவருடன் தலா ஒரு குடியேற்றப்பகுதிக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு குழுநியமிக்க வழி வகுத்தது. இக்குழுவே வழக்குகளை விசாரித்தது. கிழக்கிந்திய கம்பெனி குறிப்பாக மதராஸ் பகுதியில் ஒரு ஆளுகை சக்தியாக உருவானது. இங்கு ஏற்கெனவே இயங்கிய உள்ளூர் நீதி நிர்வாக முறையைப் பின்பற்றும் வகையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இங்கிலாந்து சட்டத்தின்படி ஆளுநரும் அவருடைய ஆட்சிகுழுவும் குடிமையியல், குற்ற வழக்குகளைத் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டன. எனினும் உள்நாட்டு வழக்குகளில் உள்ளூர் பாரம்பரிய முறைகளே பின்பற்றப்பட்டன. இங்கிலாந்து அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு அசென்டினா வழக்கு ஆகும்.

1665-ஆம் ஆண்டு இந்த வழக்கு நடந்தது. அப்போது, பாக்ஸ் க்ராப்ட் ஆளுநராக இருந்தார். 1678-ஆம் ஆண்டு ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர் என்பவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது, மதராஸ் நீதிமுறை அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படுவதற்குக் காரணமானது.ஆளுநரும் அவருடைய குழுவும் சேர்ந்து நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்ற ஆட்சி குழுவாக மாறியது. ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக அறிவிக்கப்பட்டது. வணிகர்கள் கடலில் மேற்கொள்ளும் குற்றங்களை விசாரிக்க ஒரு கடற்படை நீதிமன்றம் நிறுவ 1683-ஆம் ஆண்டு சாசன சட்டம் வழிவகுத்தது. 1687-ஆம் ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரமளித்தது. அதோடு மேயர் நீதிமன்றம் இணைக்கப்பட்டது. இதுவே மதராஸ் நகரத்தின் நீதிமன்றமாக (வழக்கு மன்றம்) இயங்கியது.

பம்பாயின் நீதி நிர்வாகத்தைப் பொருத்தவரை, பாம்பே மீது கிழக்கிந்திய கம்பெனி நீதிதுறை அதிகாரம் செலுத்த 1668 ஆம் ஆண்டு சாசன சட்டம் அதிகாரம் அளித்தது. 1672-ஆம் ஆண்டு பிரகடனம், ஆங்கிலேயச் சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்தியது. மேலும், பம்பாய் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட நீதித்துறை புதிய மத்திய நீதிமன்றத்தை நிறுவியது. ஆங்கில சட்டத்தின் பயன்பாடு என்பது ஜரோப்பியர்கள் மற்றும் ஜரோப்பியர்கள் நலன்கள் சார்ந்த விவகாரங்களுக்கு பொருந்தக் கூடியதாகும். இந்த நீதிமன்றமானது குடிமையியல், குற்றவியல் மற்றும் நிரூபிப்பு வழக்குகளில் அதிகாரவரம்பைச் செயற்படுத்தியது. மேலும் குற்றச் சட்டங்களை நிர்வகிக்க அமைதிக்கான நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

அதன்பிறகு சாட்சியங்களை விசாரணை செய்யவும், தொடக்கநிலை விசாரணைகள் செய்யவும், வழக்குகள் நீதிமன்றத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டன. எனினும் சித்தி யாக்கூப் எனும் முகலாய கடற்படை தளபதியின் படையெடுப்பு 1690-ஆம் ஆண்டு பம்பாயில் நீதிமன்றம் கலைக்கப்படக் காரணமாகியது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1718 ஆம் ஆண்டு மீண்டும் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு விவகாரங்கள் மீதான விசாரனை நடத்த அதிகாரம் கொண்டதாகும். இந்த நீதிமன்றமானது வாரத்திற்கு ஒரு முறை கூடினாலும், துரிதமான விசாரனைக்கும் பாகுபாடற்ற தீர்ப்புகளுக்கும் புகழ் பெற்றதாகக் கருதப்படுகிறது.

கல்கத்தா மாகாணத்தைப் பொருத்தவரை, ஆளுநருக்கும், அவருடைய ஆட்சிக் குழுவுக்கும் நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. குடிமையியல் மற்றும் குற்றவியல் விவகாரங்களைப் பொருத்தவரை, கிழக்கிந்திய கம்பெனியானது ஏற்கனவே வழக்கத்திலிருந்த முகலாய நீதித்துறை நிர்வாக முறையையே பின்பற்றியது. ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரால் மூன்றாம் நடுவர் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கப்படும் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பாஜ்தாரி நீதிமன்றம் தலைமையேற்று நடத்தியது. கல்கத்தா நீதித்துறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் மிக முக்கியப் பங்கு வகித்தார். மேலும், அவருடைய அலுவலகம் குடிமையியல், குற்றவியல் மற்றும் வருவாய் வழக்குகளை விசாரிக்கும் அலுவலகமாகவும் இருந்தது.


இதேபோல் சாசன சட்டம் 1687 மதராஸ் மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் 1726-ஆம் ஆண்டு சாசன சட்டம் மூன்று மாகாணங்களிலும் ஒவ்வொரு மேயர் நீதிமன்றங்களை அமைத்தது. 1753-ஆம் ஆண்டு சாசன சட்டம், 1726-ஆம் ஆண்டு சாசனத்தில் நீதி தொடர்பான பகுதிகளை மேலும் சீர்த்திருத்தம் செய்தது. மேலும் இந்த சாசனம் சட்டம் ஐந்து நீதிமன்றங்களை நிறுவியது. அவைகள், முறையே கோரிக்கைகள் நீதிமன்றம், மேயர் நீதிமன்றம், குடியரசுத்தலைவர் நீதிமன்றம், ஆட்சிக்குழு கொண்ட நீதிமன்றம் மற்றும் அரசர் தலைமையிலான நீதிமன்றம் ஆகியனவாகும். இந்திய நீதித்துறையின் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க பரிணாம வளர்ச்சி 1772-ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்கின் திட்டமாகும். இது நீதித்துறை நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதாக இருந்தது. 1780-ஆம் ஆண்டுகளில் அவர் மாகாண நீதிமன்றங்களைச் சீரமைத்தார்.

காலனி ஆட்சிக்காலத்தில் நீதித்துறையில் ஏற்பட்ட மிக முதன்மையான மேம்பாடு என்பது உள்ளூர் சட்டங்களை தொகுத்தது ஆகும். முதலாவது கவர்னர் ஜெனரல் பதவி வகித்த வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்து சட்டங்களைத் தொகுப்பதற்கு காரணமானவர் ஆவார். அடுத்து கார்ன் வாலிஸ் தொகுத்த சட்டத் தொகுப்பு மற்றொரு முதன்மையான பங்களிப்பாகும். அதைப்போலவே இஸ்லாமிய சட்டங்களும் தொகுக்கப்பட்டு நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கல்கத்தாவில் ஒழுங்குமுறைச் சட்டம் 1773-ஆம் ஆண்டு , ஒரு உச்ச நீதிமன்ற நீதி நிர்வாகம் அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது; சாசன சட்டம் 1774 உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விரிவாக்கம் செய்தது. எனினும் மதராஸ், பம்பாய் உச்ச நீதிமன்றங்கள் உடனடியாக நிறுவப்படவில்லை . 1801 மற்றும் 1824-ஆம் ஆண்டுகளில் முறையே மதராஸ், பம்பாய் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. 1793ஆம் ஆண்டில் காரன்வாலிஸ் பிரபு 'சட்ட விதிகள் தொகுப்பு' ஒன்றினைத் தயாரித்தார். இதுவே, காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு எனப் புகழ்பெற்றது




அது குடிமை மற்றும் குற்றவியல் என இரு விசாரணை முறைகளையும் கையாளுவதாக இருந்தது. அவர் குடிமையியல் நீதிமன்றங்களை அங்கீகரித்தார். நீதிமன்றக் கட்டணங்களை ஒழித்தார். மேலும், குற்றவியல் நீதிமன்றங்களில் சீர்திருத்தம் செய்தார். வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக 1807ஆம் ஆண்டு பதவியேற்ற மின்டோ பிரபு பல்வேறு நீதிமன்றங்களின் அதிகாரங்களையும், அதிகார வரம்பினையும் அதிகரித்தார். 1813-ஆம் ஆண்டு ஹாஸ்டிங்ஸ் பிரபு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் நாட்டின் குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நிர்வாகத்தில் மேலும் பல சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். நீதி நிர்வாகத்தில் நிலவும் சிவப்பு-நாடா முறையைத் தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து பெண்டிங் பதவியேற்றார். இவர் இந்தியாவின் நீதித்துறை நிர்வாகத்தை மறுசீரமைப்பு மற்றும் தொகுக்கும் பணியை செய்தார். அவர் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை மூடினார். அப்பணிகளை மாவட்ட நடுவர் நீதிமன்றங்களுக்கு மாற்றினார். 1834-1861 காலகட்டத்தில் இங்கிலாந்து மன்னர் நீதிமன்றமும், இந்தியாவில் கம்பெனி நீதிமன்றமும் தனித்தனி அதிகார வரம்புகளைக்கொண்ட இரட்டை நீதி அமைப்பை உருவாக்கி இருந்தது.

இந்திய உயர் நீதிமன்ற சட்டம் 1861, கல்கத்தா, மதராஸ், பாம்பாய் ஆகிய நகரங்களில் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்றங்களை அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது; இது உச்ச நீதிமன்றமுறை ஒழிப்புக்கு இட்டுச் சென்றது. இதுவே இந்தியாவில் உயர் நீதிமன்றங்கள் தோன்றுவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. பின்னர், இந்திய அரசாங்கச் சட்டம் 1935, இந்திய உயர் நீதிமன்றங்களின் தன்மை , அதிகார வரம்பில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்தது. இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்கப்பட்ட காலகட்டத்தில் பஞ்சாப், அசாம், ஒடிசா, ராஜஸ்தான், திருவாங்கூர், மைசூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் என ஏழு உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன. பிற உயர் நீதிமன்றங்கள் பின்னர் உருவாயின. இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர், ஏற்கெனவே இயங்கிய உயர் நீதிமன்றங்கள் அங்கீகரிக்கப்பட்டன. மேலும், அனைத்து மாநிலங்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்டப் பகுதிகளும் உயர் நீதிமன்றம் பெறும் வகையில் ஒவ்வொரு மாநிலம் அல்லது இரண்டு, மூன்று பகுதிகள் இணைத்து உயர் நீதிமன்றங்களை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு 42-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தினை கொண்டு வந்தது.

இவ்வாறாக, தொடக்கக் காலத்தில், கல்கத்தா, சென்னை, பம்பாய் என மூன்று உயர் நீதிமன்றங்களே அன்று இருந்தன. சுதந்திரத்திற்கு முன் இருந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றங்கள் அமைப்பு மற்றும் அதிகாரவரம்பிலும் பெயரளவில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. இதன் மூலம் அவற்றின் சுதந்திரத் தன்மை , பாகுபாடற்றத் தன்மை போன்றவை உறுதி செய்யப்பட்டன. அரசமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்த பின்பே உயர் நீதிமன்றங்களின் நிலையானது வலிமையடைந்தது மேலும் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் அசல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற என்ற நிலையைக் கடந்து, அரசமைப்பின் பாதுகாவலனாகவும், அரசமைப்பு குறித்து விளக்கமளிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் வலுவடைந்தது.

இந்திய உச்ச நீதிமன்றத்தை பொருத்தவரை, இந்திய அரசாங்கச் சட்டம் 1935ல் ஒர் மைல்கல் சட்டமாகும். இந்திய அரசாங்கத்தின் அமைப்பை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இச்சட்டம், ஒற்றையாட்சி முறையில் இருந்து கூட்டாட்சி முறைக்கு மாறிக் கொண்டிருந்த அத்தருணத்தில் ஒரு கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் தேவை அதிகரித்தது. எனவே, இது தொடர்பாக, அச்சட்டத்தில் ஒரு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி, 1937-ஆம் ஆண்டு கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் ஆறு நீதிபதிகளையும் கொண்டிருந்தது. 1950-ஆம் ஆண்டு இந்நீதிமன்றம் இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக ஆனது.

செயல்பாடு

ஒரு மைல்கல் தீர்ப்பு

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்களை தடுக்க 'கோயா கமாண்டோஸ்' சல்வாஜுடும் அல்லது விகரப் பெயர்களில் அங்குள்ள பழங்குடி இளைஞர்களை சிறப்பு காவல்படை அலுவலர்களாக நியமித்து அரசமைப்பிற்கு விரோதமானது, செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கும் சட்டீஸ்கர் மாநில அரசுக்கும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பில் இப்படைகள் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.


சமூக மானுடவியல் பேராசிரியர் நந்தினி சுந்தர் மற்றும் இதர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் 5ஆம் வகுப்புகூட நிறைவு செய்யாத இளைஞர்கள் கரங்களில் ஆயுதங்களை அளித்து அவர்களுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கியது அரசமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானதாகும் என்று மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தீர்ப்பில் இந்த ஆயுதப்படையை உடனடியாக கலைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி சுதர்சன் ரெட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் / நக்சலைட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, எதிர்கொள்வது, குறைப்பது அல்லது ஒழிப்பது என எப்பெயரிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த வடிவிலோ அல்லது வேறு எந்த வடிவிலோ சிறப்பு காவல் அலுவலர்களை பயன்படுத்துவதற்கு தடைவிதித்தார். சல்வாஜுடும், கோயா கமாண்டோக்கள் உள்ளிட்ட எந்தவொருக் குழுவும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது போன்று அரசமைப்பிற்கு எதிராகவும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் தனிநபர்கள் கைகளில் சட்டத்தைக் கொடுக்கும் நடவடிக்கைகளை எந்த வடிவிலும் எந்த வகையிலும் அது கூடாது என்று அமர்வு தெளிவாகக் கூறியது. "அரசமைப்பால் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நான்கு முனைகளின் கீழும் செயல்பட வேண்டியது அரசின் ஒவ்வொரு அங்கத்தின் பொறுப்பு என்பது நமது பண்டைய மாண்பாகும். இதுவே, சட்டத்தின் உச்சபட்ச ஆட்சியாகும்." என்று அமர்வு கூறியது.

நன்றி : தி இந்து நாளிதழ், 3.8.2011 

குழு விவாதம்

உச்ச நீதிமன்றம் அளித்த இந்த மைல்கல் தீர்ப்பு குறித்து 20 நிமிடங்கள் குழுவிவாதம் மேற்கொள்ள ஆசிரியர் ஏற்பாடு செய்யலாம்.

இடைப்பட்ட 12 ஆண்டுகள் எனும் குறுகிய காலத்தில் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் இந்திய சட்ட வரலாற்றில் அழியாத விளைவுகளை விட்டுச் சென்றது. தேசிய அதிகார வரம்பு கொண்ட முதல் நீதிமன்றமும் இதுவே ஆகும். இந்த கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றத்தில் இருந்துதான் அதன் நீதிபதிகள் சுதந்திரம், நேர்மை, பாகுபாடற்ற விசாரணை என்ற மரபைப் பெற்றெடுத்தனர். மேலும், 1726 மற்றும் 1883-ஆம் ஆண்டுகளுக்கிடையே பிரபுக்களின் நீதிமன்ற மேலவை (Privy Council) ஆற்றிய பங்கு குறித்தும் இங்கு சிறப்பாக குறிப்பிட்ட வேண்டியது தேவையாகிறது. இது இந்திய நீதித்துறை முறைக்கு இன்றியமையாத அளவிற்கு பங்களித்தது, இன்றளவும் நீதிமன்றங்களில் ஒளிவிளக்காக உள்ள அடிப்படையான இந்திய சட்டக் கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்தது இதுவே ஆகும்.

செயல்பாடு

பிரபுக்கள் நீதிமன்ற மேலவை (Privy Council) குறித்து நிறைய வாசிக்கவும், இந்திய நீதித்துறை நிர்வாகத்தின் தோற்றத்திற்க்கு அதன் இன்றியமையாமைப் பற்றி வகுப்பறையில் விவாதிக்கவும்.


சர் ஹரி சிங் கோர்

இறுதிக்கட்ட மேல்முறையீட்டுக்காக பிரிந்து செல்லாமல் இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் ஒரு அனைந்திந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை 1921ல் உணர்ந்தவர்.


இந்திய சுதந்திரச் சட்டம், 1947-ஆம் ஆண்டு மூலம் அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டது. இந்தியாவில் தனித்த, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு நிறுவுவதன் தேவையை ஏற்படுத்தியது. இந்த நோக்கத்துடன் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பு இது விரிவாக்கப்பட்டது. இதையொட்டி, பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்ற அதிகார விரிவாக்கம் சட்டம் 1949 இயற்றப்பட்டது. இதன்படி, இந்தியக் கூட்டாட்சிமுறை சார்ந்த நீதிமன்றம் நாட்டின் உயர்ந்தபட்ச நீதி அதிகார வரம்பு கொண்டதாக வலுவடைந்தது. ஜனவரி 26, 1950-ஆம் ஆண்டு அரசமைப்பு அமலாக்கத்துடன், அரசமைப்பு உறுப்பு 124 இந்திய உச்ச நீதி மன்றத்தை நிறுவ வழி செய்தது. இவ்வாறு, மெதுவாகவும், சீராகவும் படிப்படியாகவும் இந்திய நீதி அமைப்பு பரிணாமம் அடைந்தது. இது காலத்தோடு பொருந்தி சிறப்பாக வளர்ந்து தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது.


Tags : Political Science அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 4 : Indian Judiciary : Judicial System in Modern India Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை : நவீன இந்தியாவில் நீதித்துறை அமைப்பு - அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை