Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பண்பாடு : இலக்கியம், கலை, கட்டடக்கலை

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு - பண்பாடு : இலக்கியம், கலை, கட்டடக்கலை | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 01:43 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

பண்பாடு : இலக்கியம், கலை, கட்டடக்கலை

சோழர்களின் காலம் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாகும். இந்த நூற்றாண்டுகளில்தான் முக்கியமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. மிக நன்கறியப்பட்ட செவ்வியல் புலவரான கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதி, அதை முறைப்படி ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேற்றம் செய்தார். இதைப்போலவே சேக்கிழாரின் பெரியபுராணமும் சிதம்பரம் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கலிங்கத்துப் பரணியும், மூவருலாவும் ஏனைய சிறந்த படைப்புகளாகும்.

பண்பாடு

 

இலக்கியம், கலை, கட்டடக்கலை

சோழர்களின் காலம் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாகும். இந்த நூற்றாண்டுகளில்தான் முக்கியமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. மிக நன்கறியப்பட்ட செவ்வியல் புலவரான கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதி, அதை முறைப்படி ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேற்றம் செய்தார். இதைப்போலவே சேக்கிழாரின் பெரியபுராணமும் சிதம்பரம் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கலிங்கத்துப் பரணியும், மூவருலாவும் ஏனைய சிறந்த படைப்புகளாகும்.

சோழர்களின் பெரும் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையை தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும், தாராசுரத்திலும் நாம் காணலாம். இவை ஒரு சில எடுத்துக் காட்டுகளே. கோவில் சுவர்களிலும் தூண்களிலும் கல் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. பேரழகும் கலைநுட்பமும் பொருந்திய செப்புச் சிலைகள் மெழுகு அச்சு (lostwax) முறையில் வார்க்கப்பட்டன. பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் (சிவன்) சிலை சோழர்கால செப்புச்சிலைகளில் மிகவும் புகழ் பெற்றதாகும்.


இஸ்லாமியர் ஆட்சி நிறுவப்பட்டதிலிருந்து ஒரு தனித்தன்மை வாய்ந்த இஸ்லாமியப் பண்பாட்டு மரபு இந்தியாவில் வளர்ச்சி பெற்றது. முஸ்லிம் சுல்தான்கள் டெல்லியிலும் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட தென்னிந்தியப் பகுதிகளிலும் பல கோட்டைகளையும் மசூதிகளையும், கல்லறைகளையும் ஏனைய நினைவுச் சின்னங்களையும் கட்டினர். குறிப்பாக மொகலாயர் காலமானது இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் ஒளிமிக்க காலமாகும். மொகலாய மன்னர்கள் கலை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆதரவளிக்கும் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். ஷாஜகானாபாத் (டெல்லி), பதேபூர் சிக்ரி ஆகிய முழுமையான நகரங்களையும் தோட்டங்களையும் மசூதிகளையும் கோட்டைகளையும் கட்டி எழுப்பிய மொகலாயர்கள் அவற்றுடன் சேர்த்து எண்ணற்ற நினைவுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

நகர்ப்புறம் சார்ந்த செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தோரின் ஆதரவோடு அலங்காரக் கலைகளான குறிப்பாக விலைமதிப்பில்லா அரிய கற்கள், ஓரளவு அரிய நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளைச் செய்யும் கலை செழிப்புற்றது. ஓவியக்கலையும் மொகலாயர் காலத்தில் செழித்து வளர்ந்தது. நுண்ணிய ஓவியங்கள் என்றழைக்கப்படும் இவை நூல்களில் இடம் பெற்றுள்ளன. தனி ஓவியங்கள் செருகேடுகளில் (Albums) இடம் பெற்றன. பெருமளவிலான இலக்கியங்கள் இக்காலத்தில் உருவாயின. குறிப்பாகப் பாரசீக மொழியில் எழுதப்பட்டாலும், உருது, இந்தி மற்றும் ஏனைய வட்டார மொழிகளிலும் இலக்கியங்கள் எழுதப்பட்டன. குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது ஒவ்வொரு அரசரைப் பற்றிய அனைத்து விபரங்களும் அடங்கிய வரலாற்று நூல்கள் பாரசீக மொழியில் எழுதப்பட்டன. நிகழ்த்துக் கலைகளில் ஒன்றான இந்துஸ்தானி இசையில் தான்சேன் புகழ்பெற்று விளங்கினார். இதன் மூலம் இக்கலைக்கு அக்பர் அளித்த ஆதரவை அறியலாம்.


தென்னிந்தியாவில் விஜயநகர அரசர்களும் அவர்களுடைய போர்த் தளபதிகளும் கோவில் கட்டுமானங்களுக்கு பெரும் ஆதரவு நல்கினர். பல புதிய கோவில்கள் அவர்களால் கட்டப்பட்டன. ஏற்கனவே இருக்கின்ற கோவில்களில் விரிவான அளவில் கலை நுணுக்கங்களோடு செதுக்கப்பட்ட பல தூண்களைக் கொண்ட பெரிய மண்டபங்களும் ஓய்வுக் கூடங்களும் கட்டப்பட்டன. கலை வரலாற்று அறிஞர்கள் விஜயநகர காலத்து கோவில் சிற்பங்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியைச் சுட்டிக் காட்டுகின்றனர். கோவில்களின் நுழைவாயில்களில் மிக நுட்பமான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட மிக உயர்ந்த கம்பீரமான கோபுரங்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில் எழுப்பப்பட்டன. கோவில் சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.

விஜயநகர நாயக்க அரசர்களின் ஆதரவில் பெருமளவிலான இலக்கியங்கள் குறிப்பாக சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உருவாயின. அரச குடும்ப ஆதரவில் தெலுங்கு இலக்கியம் செழிப்புற்றது. சமயக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்ட பல நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டன. பிரபந்தம் எனப்படும் ஒரு புதிய வகைத் தமிழ் இலக்கியம் இக்காலத்தில் உருவானது. காப்பிய நூலான சிலப்பதிகாரத்திற்கும் திருக்குறளுக்கும் இக்காலத்தில்தான் மிகச் சிறந்த உரைநூல்கள் எழுதப்பட்டன. இக்காலத்தில் வாழ்ந்த கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கட மகி கர்நாடக இசைக்குரிய ராகங்களை வகைப்படுத்தினார்.

Tags : State and Society in Medieval India | History இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு.
9th Social Science : History: State and Society in Medieval India : Culture: Literature, Art and Architecture State and Society in Medieval India | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : பண்பாடு : இலக்கியம், கலை, கட்டடக்கலை - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்