இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு - அரசியல் மாற்றங்கள் கி.பி. (பொ.ஆ.) 1000-1700 | 9th Social Science : History: State and Society in Medieval India
அரசியல் மாற்றங்கள் கி.பி. (பொ.ஆ.) 1000-1700
முஸ்லிம்கள் ஆட்சி, 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகமது கோரியால் டெல்லியில் நிறுவப்பட்டது. கி.பி.
(பொ.ஆ.) 9ஆம் நூற்றாண்டிலேயே அராபிய வணிகர்கள் மேலைக் கடற்கரைத் துறைமுகங்களில் குறிப்பாகக் கேரளத் துறைமுகங்களில் வணிகம் செய்தனர். அதைப்போலவே கி.பி.
(பொ.ஆ.) 8ஆம் நூற்றாண்டு முதலாகவே மேற்காசியாவைச் சேர்ந்த முஸ்லிம் படையெடுப்பாளர்கள் குஜராத்திலும் சிந்துவிலும் தங்கள் சுல்தானியங்களை நிறுவி ஆட்சிபுரிந்து வந்தனர்.
முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் அலாவுதீன் கில்ஜியின் (கி.பி.
(பொ .ஆ.) 1296-1316) ஆட்சியின்போது உணரப்பட்டது. ஆட்சியை விரிவுபடுத்துதல் என்பதைக்காட்டிலும் செல்வங்களைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடனே தென்னிந்தியாவின் மீது பல படையெடுப்புகளை அவர் மேற்கொண்டார்.
தேவகிரி (அவுரங்காபாத்திற்கு அருகில்) அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டது. 'தௌலதாபாத்' என மறுபெயர் சூட்டப்பெற்ற இந்நகரம் வளர்ந்து வரும் அவருடைய நாட்டின் இரண்டாவது வலிமைமிகுந்த தளமாயிற்று. கி.பி. (பொ.ஆ) 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத் தளபதியுமான மாலிக்கபூரின் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற துக்ளக் வம்ச அரசர்களும் தங்கள் படைகளைத் தெற்கு நோக்கி அனுப்பினர். இதன் விளைவாகப் பொதுவாக தனிமைப்பட்டிருந்த நாட்டின் தென்பகுதி வடஇந்திய முஸ்லிம் அரசர்களின் சுற்று வட்டத்திற்குள் வந்து சேர்ந்தது. தக்காணத்தின் பலபகுதிகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மதுரையில் ஒரு சுல்தானிய ஆட்சியே நிறுவப்பட்டது.
முகமதுபின் துக்ளக்கின் ஆட்சியின்போது, தௌலதாபாத்தில் கலகம் வெடித்தது. அதன் விளைவாக அலாவுதீன் பாமான்ஷா கி.பி.
(பொ.ஆ.) 1347இல் பாமினி சுல்தானியத்தை உருவாக்கினார்.பிடார் அவ்வரசின்தலைநகரானது. பாமினி சுல்தானியம் சுமார் நூற்றைம்பது ஆண்டு காலம் நிலைத்திருந்தது. அதற்குக் காரணம் மக்களிடையே மதிப்புப் பெற்றிருந்த அரசியல் மேதையும் விசுவாசமிக்க அமைச்சருமான மகமுத் கவான் என்பவரின் சிறந்த நிர்வாகமாகும். அவருடைய இறப்பிற்குப் பின்னர் பல ஆளுநர்கள் தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தக்காணத்தில் ஐந்து சுல்தானியங்கள் உதயமாயின. அவை பீஜப்பூர்,
கோல்கொண்டா, அகமதுநகர், பிரார், பிடார் ஆகியனவாகும். இவற்றில் அளவில் பெரியதான பீஜப்பூரும் கோல்கொண்டாவும் பெருமளவு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றன. வணிகமும் பெருமளவில் விரிவடைந்தது. கி.பி.
(பொ.ஆ) 1660களில் இத் தக்காணச் சுல்தானியங்களை ஔரங்கசீப் கைப்பற்றினார். தெற்கே மெட்ராஸ் (சென்னை) உட்பட அனைத்துப் பகுதிகளும் மொகலாயப் பேரரசின் பகுதிகளாயின.
சோழப் பேரரசின் விரிவாக்கம் முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கியது. பல்லவ அரசு ஏற்கனவே சோழ அரசோடு இணைக்கப்பட்டு விட்டது. பாண்டிய அரசு சுதந்திர அரசாக இருந்தபோதிலும் சோழர்களுக்குக் கட்டுப்பட்டதாகவே இருந்தது. முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் விரிவடைந்தது. தனது படைகளை வடகிழக்கு இந்தியாவில் கங்கை நதிவரை நடத்திச் சென்றார். மேலும் தனது கப்பற்படைகளை ஸ்ரீவிஜய சைலேந்திர அரசுக்கு எதிராகவும் கடாரம் (கேடா) (இந்தோனேசியாவில் ஒரு பகுதி) மற்றும் ஸ்ரீலங்காவிற்கு எதிராகவும் அனுப்பிவைத்தார். இதனால் "கங்கையும்,
கடாரமும் கொண்ட சோழன்"
எனும் பட்டத்தைப் பெற்றார். ஸ்ரீலங்கா சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக சில பத்தாண்டுகள் இருந்தது. இராஜேந்திர சோழனின் பேரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கீழைச் சாளுக்கிய அரசோடு மேற்கொள்ளப்பட்ட திருமண உறவுகள் மூலம் பேரரசு மேலும் வலுப்படுத்தப்பட்டு ஒடிசாவின் எல்லைவரை பரவியது.
சோழர்கள் காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா உடனான வணிகம் பெருமளவில் விரிவடைந்தது. தமிழ் வணிகர்களோடு ஏற்பட்ட இடைவிடாத தொடர்பினால் இந்தியப் பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியாவில் பரவியது. அதை கம்போடியாவிலுள்ள நேர்த்திமிக்க,
மிகப்பிரமாண்டமான அங்கோர்-வாட் கோவில்களில் நாம் பார்க்கலாம்.
சோழப்பேரரசின் சரிவு13ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொடங்கியது. கடைசி சோழப் பேரரசர் மூன்றாம் இராஜேந்திரனுக்குப் பின்னர் கி.பி. (பொ.ஆ.) 1279இல் சோழப் பேரரசு முற்றிலும் வீழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் பல அதிகார மையங்கள் உருவாயின. இதற்கும் தெற்கே பாண்டிய அரசர்கள் சோழர்கள் காலத்தில் தாங்கள் இழந்த செல்வாக்கையும் புகழையும் மீண்டும் நிலைநிறுத்தும், முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப் போன்ற அறிவுக் கூர்மையுடைய மன்னர்களால்
பாண்டிய நாடு ஆளப்பட்டது. வடக்கே பேலூரையும் பின்னர் ஹளபேடுவையும் தலைநகராகக் கொண்ட ஹொய்சாள அரசு அமைந்திருந்தது. இவ்வரசு இன்றைய கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாய் இருந்தது. காகத்தியர்கள் வாராங்கல்லிலிருந்து (தெலுங்கானா) ஆட்சி செய்தனர். தேவகிரியில் யாதவர்கள் ஆட்சி புரிந்தனர். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவகிரி அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் வீழ்ந்தது. தென்னிந்திய அரசுகள் தங்களிடையே அமைதியான ஒத்துழைப்பைக் கொண்டிராத காரணத்தினாலும் அவர்களிடையே ஏற்பட்ட உட்பூசல்களும்,
போர்களும் மோதல்களும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
விஜயநகர அரசு (பின்னர் பேரரசு) உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின் இடைக்கால வரலாற்றின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும். சங்கம வம்சத்தின் ஹரிஹரர் மற்றும்புக்கர் ஆகிய இருசகோதரர்களால் இவ்வரசு நிறுவப்பட்டது. இவர்களே சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள் ஆவர். துங்கபத்ரா நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கி அதற்கு விஜயநகரம் (வெற்றியின் நகரம்) எனப் பெயர் சூட்டினர். கி.பி. (பொ.ஆ) 1336ல் ஹரிஹரர் அரசராக முடிசூட்டப்பெற்றார். சங்கம வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் 150 வருடங்கள் ஆட்சி செய்தனர். பின்னர் வந்த சாளுவ வம்ச அரசர்கள் குறுகிய காலமே ஆட்சி புரிந்தனர். இதன் பின்னர் ஆட்சி செய்தவர்கள் துளுவ வம்ச அரசர்களாவர். விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் இவ்வம்சத்தைச் சேர்ந்தவராவார்.
அரசு: ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் ஒரு நாடு.
பேரரசு: ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் பல நாடுகளை கொண்ட பெரும் நிலப்பரப்பு.
பேரரசாக விரிவடைந்தபோது தெற்கேயிருந்த ஹொய்சாள அரசும் தமிழகப்பகுதியில் இருந்த அரசுகளும் விஜயநகர அரசோடு இணைத்துக் கொள்ளப்பட்டன. விஜயநகர அரசர்கள் தொடர்ந்து பாமினி அரசுகளோடும் சமயம் சார்ந்த அரசுகளான கொண்டவீடு மற்றும் ஒடிசாவோடும் தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தனர். இறுதியில் கி.பி. (பொ.ஆ.) 1565 இல் தலைக்கோட்டைப் போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படையினர் விஜயநகரைத் தோற்கடித்தனர். விஜயநகரப் பேரரசர்கள் இதன் பின்னர் தங்கள் தலைநகரைத் தெற்கேயுள்ள பெனுகொண்டாவிற்கும் இறுதியில் திருப்பதி அருகேயுள்ள சந்திரகிரிக்கும் மாற்றினர். இறுதியாக இப்பேரரசு (அல்லது அதில் மீதிமிருந்த பகுதிகள்) பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வீழ்ச்சியுற்றது.
மொகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர் ஆவார். கி.பி.
(பொ.ஆ.) 1526ஆம் ஆண்டு பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்ட பின்னர் பாபர் இவ்வரசை நிறுவினார். முதல் ஆறு மொகலாயப் பேரரசர்கள் 'மாபெரும் மொகலாயர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் கடைசி மாபெரும் மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஆவார். நாடுகளைப் கைப்பற்றியதன் மூலமும்,
இராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணியதின் மூலமும் அக்பர் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார். ஔரங்கசீப்பிற்குப் பின்னர் முகலாயப் பேரரசு சிதையத் தொடங்கியிருந்தாலும் கி.பி. (பொ.ஆ.) 1857 இல் ஆங்கிலேயர்கள் இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வரை கிட்டத்தட்ட மறைந்துபோன ஒன்றாக இருந்து வந்தது.
மகாராஷ்டிராவில் பதினேழாம் நூற்றாண்டில் ஒரு அதிகார மையம் எழுச்சி பெற்றது. சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் மேற்கு இந்தியப் பகுதிகளில் மொகலாயரின் அதிகாரத்தைப் பெருமளவில் மதிப்பிழக்கச் செய்தனர். மொகலாயப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. கேரளத்தின் தென்மேற்குப்பகுதி,
தென் தமிழகப் பகுதிகள் ஆகியவை மட்டுமே மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக இருந்தன.
பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஒரு நேரடி கடல் வழியைக் கண்டறிவதில் ஐரோப்பியர்கள் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர். முன்னர் பயன்பாட்டிலிருந்த மேற்காசியா மற்றும் மத்தியதரைக்கடல் பகுதிகள் வழியாகச் செல்கிற நிலவழிக்கு மாற்றாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலிருந்து நடைபெறும் நறுமணப் பொருட்களின் வணிகம் அலெக்ஸாண்டிரியா நகர்வரை முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. இந்தியாவுடன் நேரடித்தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்களின் வணிகத்தை தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்துவிடலாம். மேலும் அப்பொருள்களைத் தங்களுக்குச் சாதகமான விலையிலும் கொள்முதல் செய்யலாம் என எண்ணினர். கி.பி. (பொ.ஆ.) 1498இல் வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கைமுனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. (பொ.ஆ.) 1503இல் போர்ச்சுக்கீசியர்கள் கொச்சியில் தங்கள் முதல் கோட்டையைக் கட்டினர். கி.பி. (பொ.ஆ.) 1510இல் கோவா கைப்பற்றப்பட்டு இந்தியாவில் போர்ச்சுகீசிய அரசின் மையமாக மாறியது. தங்களுடையகப் பற்படை வலிமையின் காரணமாகப் போர்ச்சுகீசியர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் மலாக்காவுக்கும் இடைப்பட்ட பல துறைமுகங்களைக் கைப்பற்ற முடிந்தது. மேலும் இப்பகுதி முழுவதிலும் நடைபெற்ற கடல்சார் வணிகத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தவும் முடிந்தது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளும் போர்ச்சுகீசியரைப் பின்தொடர்ந்து குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கிழக்கிந்தியக் கம்பெனிகள் மூலம் மேற்கொண்டனர். இந்நிறுவனங்கள், தனியார் வர்த்தக நிறுவனங்களாக இருந்தபோதிலும் வலுவான அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தன. 17ஆம் நூற்றாண்டில் மொகலாய அரசு வலுவாக இருந்த வரையிலும், இந்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் மொகலாயப் பேரரசில் வணிகம் செய்தன. ஆனால் மொகலாயப் பேரரசின் எல்லைக்குள் தங்களுக்கெனச் சொந்தமான பகுதிகளைப் பெற அவற்றால் இயலவில்லை . இருந்தபோதிலும் தென்னிந்தியாவில் வலுவான அரசுகள் இல்லாததால் ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென்று சொந்தமான வணிகத்தலங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றில் முழு அதிகாரம் செலுத்தின. (எ.கா.) புலிகாட் (பழவேற்காடு) மற்றும் நாகப்பட்டினத்தில் டச்சுக்காரர்களும், மெட்ராஸ்-ல் (சென்னை ) ஆங்கிலேயர்களும், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களும், தரங்கம்பாடியில் டேனியர்களும் நிலை கொண்டனர்.