இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு - பொருளாதாரம் | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 01:49 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

பொருளாதாரம்

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடாக இருந்தது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வசித்து வந்தனர். வேளாண்மையைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.

பொருளாதாரம்

 

 () வேளாண்மை

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடாக இருந்தது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வசித்து  வந்தனர். வேளாண்மையைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். இந்தியாவில் வடஇந்தியா தென்னிந்தியா ஆகிய இரண்டு பகுதிகளிலும் வேளாண்மை பெருமளவில் நீர்ப்பாசன வசதிகளைச் சார்ந்திருந்தது. மழை மற்றும் நதிகளைத் தொடர்ந்து கால்வாய்களும் கிணறுகளும் நீராதாரங்களாக இருந்தன. அதிக அளவில் நீர் கிடைப்பதற்காக அரசுகள் கால்வாய் கட்டும் பணிகளைத் தீவரமாக மேற்கொண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியா அறிந்திருந்த மிகப்பெரிய வலைப்பின்னலைப் போன்ற கால்வாய்கள் பதினான்காம் நூற்றாண்டில் பெரோஸ் துக்ளக்கால் டெல்லி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்களே ஆகும். ஏரிகள் குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகள் நீரை வெளியேற்ற உதவும் மதகுகளோடு கட்டப்பட்டதாலும், தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும் வேளாண்மை செய்வதற்கு அதிக அளவில் நீர் கிடைத்தது. விவசாயிகள் கிணறுகளை வெட்டிக் கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர். நீரை மேலே கொண்டுவர நீர் இறைக்கும்முறை பயன்படுத்தப்பட்டது. வட இந்தியாவில் கிணறுகளிலிருந்து நீர் இறைக்க 'பாரசீகச் சக்கரம்' பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் சோழ அரசர்கள் நீர்ப்பாசனத்திற்காக காவேரி நதியின் கிளை ஆறுகளை இணைத்து வலைபின்னலைப் போன்ற கால்வாய்களை அமைத்தனர். நீராதாரத்தை அதிகப்படுத்த ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டன.

இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம், அதிக எண்ணிக்கையில் பல்வகைப்பட்ட பயிர்கள் பயிர் செய்யப்பட்டமைதான். இக்காலகட்டத்தில் உலகின் ஏனைய நாடுகளின் விவசாயிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்திய விவசாயிகள் அதிக எண்ணிக்கையிலான பயிர்களைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். எண்ணை வித்துக்கள், அவரை வகைகள் ஆகியவைகளோடு அரிசி, கோதுமை, திணை வகைகள் போன்ற பல்வகை உணவுதானியங்களும் விளைவிக்கப்பட்டன. மேலும் வணிகப்பயிர்களான கரும்பு, பருத்தி மற்றும் அவுரி ஆகியனவும் பயிரிடப்பட்டன.

பொதுவான உணவு தானியப் பயிர்களுக்கு மேலாக தென்னிந்தியாவில் பிராந்தியத் தனித்தன்மையோடு மிளகு, இலவங்கம், நறுமணப் பொருள்கள், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன.


பொதுவாக வெவ்வேறு பருவகாலங்களில் இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டன. இது மண்ணின் உற்பத்தி சக்தியைப் பாதுகாத்தது. ஐரோப்பியருடைய வருகைக்குப் பின்னர் சோளமும் புகையிலையும் புதிய பயிர்களாக அறிமுகமாயின. பப்பாளி, அன்னாசி, கொய்யா, முந்திரிப்பருப்பு போன்ற புதிய பழ வகைகளும் தோட்டப்பயிர்களும் அறிமுகமாயின. அவை மேலை நாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வந்தவையாகும். உருளைக்கிழங்கு, மிளகாய், தக்காளி போன்றவையும் இந்திய உணவோடு இரண்டறக் கலந்துவிட்டன.

 

 () விவசாயம் அல்லாத உற்பத்தி

இந்தியப் பொருளாதாரம் முதன்மையாக வேளாண்மை சார்ந்ததாக இருந்தபோதிலும் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை உலக அளவில் பெருமளவில் பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்துள்ளது. வேளாண்மை சாராத பொருள் உற்பத்தி என்பது பக்குவப்படுத்தப்பட்ட வேளாண் பண்டங்களையும் கைவினைப் பொருள் உற்பத்தியையும் குறிப்பதாகும். சர்க்கரை, எண்ணெய், துணிகள் ஆகியன பதப்படுத்தப்பட்ட வேளாண் பண்டங்கள் என்ற வகையின் கீழ் வருபவை. உலோகப்பொருட்கள், நவரத்தினக்கற்கள், பொன் ஆபரணங்கள், கப்பல் கட்டுமானம், அலங்கார மர , தோல் பொருட்கள் ஆகியவை கைவினை உற்பத்தி பொருள் பட்டியலில் இடம்பெறுவனவாகும். இவைகளைத் தவிர ஏராளமான சிறு பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

சந்தையின் இயல்பைப் பொறுத்தே உற்பத்தி திட்டமிடப்பட்டது. உற்பத்தியில் பெரும்பகுதி கிராம அல்லது கிராமப் பகுதிகளின் உள்ளூர் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டது. இப்பொருட்கள் அடிப்படைப் பயன்பாட்டுப் பொருட்களான மட்பாண்டங்கள், உலோகத் தட்டுக்கள், கலப்பை போன்ற கருவிகள் மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் முரட்டுத் துணிவகைகளாகவும் இருந்தன. இப்பொருட்கள் வணிகச் சுற்றுக்குள் இடம் பெறவில்லை . உற்பத்தியாளரே தனது உற்பத்திப் பொருட்களைச் சந்தையில் விற்றார். செலாவணி பெரும்பாலும் பண்ட மாற்று முறையாகவே இருந்திருக்கக் கூடும்.

பொருளாதாரரீதியாக எது முக்கியமானதாக இருந்ததென்றால் தனித்திறன் பெற்ற தொழிலாளர்களால் நகர்ப்புறம் சார்ந்த மேட்டுக்குடி மக்கள் மற்றும் கிராமப்புற செல்வந்தர்களுக்கு அதிகம் தேவைப்படும் பொருட்களைச் சிறப்புடன் உற்பத்தி செய்வதாகும். இவ்வுற்பத்தி வெளிச் சந்தையை மனதில் கொண்டு செய்யப்படுவதாகும். இவ்வகை பொருள் உற்பத்தி மையங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அல்லது நகரங்களின் அருகேயுள்ள கிராமப்புறங்களில் அமைந்திருந்தன. கைவினைஞர்கள் தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ வீட்டிலிருந்தோ அல்லது தொழிற்கூடத்திலோ வேலை செய்தனர். மொகலாய அரசில் மிகப்பெரிய தொழிற் கூடங்கள் 'கர்கானா என்ற பெயரில் பல கைவினைஞர்களை பணியிலமர்த்தி செயல்பட்டுள்ளன.

 

 () துணி உற்பத்தி


உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து வகைத் துணிகளும் பருத்தி இழைகளால் நெய்யப்பட்டவை ஆகும். வங்காளத்திலும் குஜராத்திலும் பட்டுத் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் பல எண்ணிக்கைகளில் உயர்ந்த குறிப்பிட்ட பயன்பாட்டிற்குரிய பருத்தி இழைத் துணிகளை முரடான துணிவகை முதல் மிக நேர்த்தியான துணிவகைகள் வரை உற்பத்தி செய்தன. இவை அனைத்தும் வெளிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். சாயங்களைப் பொறுத்தமட்டிலும் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சாயங்களே பயன்படுத்தப்பட்டன. பருத்தி இழை இரண்டு இயற்கையான சாதகங்களைப் பெற்றிருந்தது. பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூலப் பொருள் எளிதாகக் கிடைத்தது. இரண்டாவதாக தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது. துணிகளைப் பதனம் செய்யாவிடில் சாயங்கள் அவற்றின் மேல் ஒட்டாது. அதற்காக முதலில் துணிகளின் மேல் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு மேற்பூச்சு பூசும் நுட்பத்தை இந்தியர்கள் அறிந்திருந்தனர். இந்நுட்பத்தை வேறு உலக நாடுகள் அறிந்திருக்கவில்லை . அவுரி இந்தியாவில் பயிரிடப்பட்ட முக்கியமான சாயப் பயிராகும். இதைத் தவிர ஏனைய சாயப் பயிர்களும் (சிவப்பு வர்ணத்திற்காக பயன்படுத்தப்பட்ட சாய் என்னும் தாவரத்தின் வேர்) சாயத் தயாரிப்புக்குத் தேவையான மரங்களும் அரக்கு போன்ற பிசின்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இவைகளைத் தவிர மலர்கள், பழங்கள் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களைப் பல விகிதங்களில் கலந்து பலவகைப்பட்ட வர்ணங்கள் தயாரிக்கப்பட்டன.

 

 () வணிகம்

மிகப்பெரும் உற்பத்தித் துறையானது முக்கியமாக சொந்தப் பயன்பாட்டிற்காக அல்லாமல் பறிமாற்றத்திற்காகவே பொருட்களை உற்பத்தி செய்தது. ஆகவே பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. கிராமமே பொருள் உற்பத்தியின் அடிப்படை நிலவியல் அலகாக இருந்தது. முக்கியமாகப் பிழைப்புக்கான பொருளாதார நிலையே நிலவியது. செலாவணி என்பது பண்டமாற்றமாகவே இருந்தது.

கடைகளோடும் கடைவீதிகளோடும் நகரங்கள் எப்போதும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்டன. இந்நகரங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளோடு பல சாலைகளால் இணைக்கப்பட்டிருந்ததால் அவைகள் பிராந்தியங்களுக்கிடையே நடைபெறும் வணிகத்தில் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன. இத்தரைவழி வணிகத்தோடு நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதி வணிகத்தில் சிறு கப்பல்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டன.  ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்வோர் பொதுவாக பஞ்சாரா என்றழைக்கப்பட்ட நாடோடிச் சமூகத்தினர் படையெடுத்து சென்று போரிடும் படைகளுக்குத் தேவையான பொருட்களை சுமந்து சென்று விற்றனர். நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் (சூரத், மசூலிபட்டிணம், கோழிக்கோடு) கடல்சார் வணிக முனையங்களாகவும் பன்னாட்டு வணிக முனையங்களாகவும் செயல்பட்டன.

இந்தியப்பெருங்கடலை கடந்து, கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை விரிந்து பரந்திருந்த கடல் வணிகம் நூற்றாண்டுகளுக்கு செழித்தோங்கியது.ஆகவே மலாக்கா, கோழிக்கோடு போன்ற துறைமுகங்கள் சிறப்புவாய்ந்த இப்பிராந்திய வணிகத்தில் இடைநிலை முனையங்களாக அல்லது பொருள் வைக்கும் இடங்களாகச் செயல்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் குஜராத்தில் சூரத், கோல்கொண்டா ஆந்திராவில் மசூலிபட்டிணம் வங்காளத்தில் சிட்டகாங், சோழமண்டலக் கடற்கரையில் புலிக்காட் (பழவேற்காடு) நாகப்பட்டிணம் கேரளக் கடற்கரையில் கோழிக்கோடு ஆகியன ஆசிய வணிகத்தின் முக்கியத் துறைமுகங்களாகும்.

துணி, மிளகு, விலைமதிப்புமிக்க நவரத்தினக்கற்கள் சற்றே விலைமதிப்புக் குறைந்த நவரத்தினக் கற்கள்-முக்கியமாக வைரம் அதுவும் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய வைரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ததில் இந்தியாவும் ஒரு முக்கிய ஏற்றுமதி நாடாக இருந்தது. மேலும் ஒட்டு மொத்த ஆசியப் பகுதியில் பெருமளவில் தேவைப்பட்ட இரும்பையும் எஃகையும் ஏற்றுமதி செய்த நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்றாகும். இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 90% விழுக்காடுகள் துணியாகவே இருக்கும். சீனாவிலிருந்தும் ஏனைய கீழ்திசை நாடுகளிலிருந்தும் பட்டு, சீன செராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. பட்டு, மருந்து வகைகள், சாய மரங்கள் சர்க்கரை ஆகியன பாரசீகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியப் பொருட்களாகும். தங்கம், தந்தம் மற்றும் அடிமைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து பெறப்பட்டன.

Tags : State and Society in Medieval India | History இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு.
9th Social Science : History: State and Society in Medieval India : Economy State and Society in Medieval India | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : பொருளாதாரம் - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்