அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வரையறை, வரலாறு, பொதுத்துறையின் நோக்கங்கள் | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors
பொதுத்துறையின்
வரையறை
அரசு,
பொது மக்களுக்குப் பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள
துறை பொதுத்துறை ஆகும். நிறுவனங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் அமைப்புகள் என முழுவதும்
சொந்தமானவையாகவும் அரசாங்கத்தால் நடத்தப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் மத்திய அரசு,
மாநில அரசு அல்லது உள்ளூர் அரசாங்கமாகவும் இருக்கும்.
பொதுத்துறையின் வரலாறு
1947இல்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில் துறை தளத்தைக் கொண்ட வேளாண்மையை
முதன்மையாக கொண்ட நாடாகும். ஆங்கிலேயர்கள் நிறுவிய பதினெட்டு இந்திய போர் தளவாட
(Ordnance) தொழிற்சாலைகள் மட்டுமே நாட்டில் இருந்தன. தங்கள் சொந்த பொருளாதார நலனுக்காகவும்,
துணைக் கண்டத்தை முரட்டுத்தனமாக படைகளைக் கொண்டு ஆளவும், தேசிய ஒருமித்த கருத்து பொருளாதாரத்தின்
விரைவான தொழில்மயமாதலுக்கு ஆதரவாக இருந்தது, மற்றும் இது பொருளாதார வளர்ச்சிக்கு திறவுகோலாக
கருதப்பட்டது. அது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி பொருளாதார இறையாண்மையையும் மேம்படுத்தியது.
பம்பாய்
திட்டத்தை (1940) கட்டமைப்பதற்கு, அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஒழுங்கு முறைகளின்
தேவையை நோக்கமாகக் கொண்டு 1948ஆம் ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் அறிவிப்பில்
தொழில் துறை வளர்ச்சியின் யுக்திகளைப் பரந்த வரையறைகளைக் கொண்டு வகுத்தது. அதைத் தொடர்ந்து,
மார்ச் 1950இல் அமைச்சரவை தீர்மானத்தால் திட்டக் குழு அமைக்கப்பட்டது மேலும், தொழில்துறை
வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம்
அளிக்கும் நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது.
பிரதமர்
ஜவகர்லால் நேரு இறக்குமதிக்கு மாற்று தொழில்மயமாக்கலின் அடிப்படையில் ஒருபொருளாதாரக்
கொள்கையை ஊக்குவித்து, கலப்பு பொருளாதாரத்தை ஆதரித்தார். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி
நவீனமயமாக்கலுக்கு , அடிப்படை மற்றும் கனரக தொழில்களை நிறுவுவது என்று அவர் நம்பினார்.
இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் (1956-60), 1956ஆம் ஆண்டு தொழில்துறை
கொள்கை தீர்மானமும் நேருவின் தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையைப் பூர்த்தி செய்ய பொதுத்துறை
நிறுவனங்களின் வளர்ச்சியை வலியுறுத்தியது. அவரது பார்வையை "இந்தியாவின் பொதுத்துறை
நிறுவனங்களின் தந்தை" என்று அழைக்கப்படும் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி முன்னெடுத்துச்
சென்றார். இந்திய புள்ளிவிவர நிபுணர் பேரா. பி.சி. மஹலானோபிஸ் அதன் உருவாக்கத்திற்குச்
கருவியாக இருந்தார். இது பின்னர் ப்ரீட்மேன்- மஹலானோபிஸ் (Friedman -Mahalanobis
Model) மாதிரி என்று அழைக்கப்பட்டது.
1991ஆம்
ஆண்டின் தொழில்துறை கொள்கை முந்தைய அனைத்துக் கொள்கைகளிலிருந்தும் தீவிரமாக வேறுபட்டது,
அங்கு அரசாங்கம் பொதுத்துறை முதலீடு செய்ய திட்டமிட்டுத் தனியார் துறைக்கு அதிக சுதந்திரத்தை
அனுமதித்தது. அதே நேரத்தில், இந்தியாவுக்கு வெளியே உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து அந்நிய
நேரடி முதலீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வாறு, ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில்
செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் நுழைந்தன. இவ்வாறு, இந்தியப்
பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு
நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
பொதுத்துறையின் நோக்கங்கள்
•உள்கட்டமைப்பை
உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்வதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
•வளர்ச்சிக்கான
நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
•வருமானம்
மற்றும் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்.
• வேலைவாய்ப்புகளை
உருவாக்குதல்.
•சமச்சீர்
வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்.
•சிறிய
அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
•ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதிக்கு மாற்றீடை துரிதப்படுத்துதல்.