வரலாறு | சமூக அறிவியல் - ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த
தொடக்ககால கிளர்ச்சிகள்
கீழ்க் காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• பாளையக்காரர் அமைப்பும், ஆங்கிலேயர்களுக்கு
எதிரான பாளையக்காரர்களின் புரட்சியும்
• வேலுநாச்சியார், பூலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள்
போன்றோரின் ஆங்கிலேய எதிர்ப்புக் கிளர்ச்சிகள்
• தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின்
அடக்குமுறைக்கு பதிலடியாக அமைந்த வேலூர் புரட்சி
பிரெஞ்சுப்
படைகளையும், அதோடு தோழமை கொண்டிருந்த இந்திய
ஆட்சியாளர்களையும் மூன்று கர்நாடகப் போர்களில் தோற்கடித்திருந்த கிழக்கிந்திய
கம்பெனி தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் விரிவாக்கி ஒருங்கிணைக்கத்
தொடங்கியது. எனினும் உள்ளூர் ஆட்சியாளர்களும் நிலக்கிழார்களும் இதனை எதிர்த்தனர்.
நாடுபிடிக்கும் அவர்களின் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை திருநெல்வேலிப் பகுதியின்
நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்த பூலித்தேவரிடமிருந்து வெளிப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன்,
மருது
சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற தமிழகத்தின் பிற பகுதிகளை
ஆட்சிபுரிந்து வந்தோரும் எதிர்த்தனர். பாளையக்காரர் போர் என அறியப்படும் இது 1806இல்
நிகழ்ந்த வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றது. தமிழ்நாட்டில் பிரிட்டிஷாருக்கு
எதிராகத் தோன்றிய இத்தொடக்ககால எதிர்ப்புப் பற்றி இப்பாடத்தில் காணலாம்.