ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் - ஆங்கிலேயருக்கு எதிரான மண்டல சக்திகளின் எதிர்ப்பு | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu
ஆங்கிலேயருக்கு எதிரான மண்டல சக்திகளின் எதிர்ப்பு
பாளையம்
என்ற சொல் ஒரு பகுதியையோ, ஒரு இராணுவ முகாமையோ அல்லது ஒரு சிற்றரசையோ குறிப்பதாகும். பாளையக்காரர்கள்
(இவர்களை ஆங்கிலேயர்கள் 'போலிகார் (Poligar)
என்று
குறிப்பிட்டனர்) என்ற தமிழ்ச்சொல் இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம்
கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது. இவ்வமைப்பின் கீழ் தனிநபர் ஒருவர் ஆற்றிய
சீரிய இராணுவ சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின் கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது.
வாரங்கல்லை சார்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சிக்காலத்தில் காகதீய அரசில்
இப்பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுரை நாயக்கராக 1529இல்
பதவியேற்ற விஸ்வநாத நாயக்கர் அவர்தம் அமைச்சரான அரியநாதரின் உதவியோடு தமிழகத்தில்
இம்முறையை அறிமுகப்படுத்தினார். பரம்பரை பரம்பரையாக 72
பாளையக்காரர்கள்
இருந்திருக்கக்கூடும்.
பாளையக்காரர்களால்
வரி வசூலிப்பதிலும், நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும்,
வழக்குகளை
விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் தன்னிச்சையாகச்
செயல்பட முடிந்தது. அவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல்
என்றும் அழைக்கப்பட்டது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள்
அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாளையக்காரர்கள் உதவிபுரிந்தனர்.
பாளையக்காரர்களுக்கும், அரசர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட உறவு
மற்றும் புரிதல் மதுரை நாயக்கர்களால் இம்முறை நிறுவப்பட்டதிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கும்
மேலாக அதாவது ஆங்கிலேயர் இந்நிலப்பகுதிகளைத் தங்கள் வசம் கொண்டு வரும்வரை
நீடித்திருந்தது.
நாயக்க
மன்னர்களால் உருவாக்கப்பட்ட 72 பாளையங்களுள் கிழக்கு
மற்றும் மேற்கு என்ற இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த பாளையங்களே
முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்பட்டன. கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள்
சாத்தூர், நாகலாபுரம்,
எட்டையபுரம்
மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவும் மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள்
ஊத்துமலை, தலைவன் கோட்டை,
நடுவக்குறிச்சி,
சிங்கம்பட்டி,
சேத்தூர்
ஆகியனவாகும்.