மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மின்னோட்டம் | 7th Science : Term 2 Unit 2 : Electricity
மின்னோட்டம்
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும், மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில், அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும், ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது, மின்னோட்டத்தின் குறியீடு “I” (ஐ) ஆகும்.
மின்னோட்டத்தின் அலகு
மின்னோட்டத்தின் S.I. அலகு ஆம்பியர் ஆகும். கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில், ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
I = q / t
இங்கு
| - மின்னோட்டம் (ஆம்பியரில் -A)
q - மின்னூட்டம் (கூலூம்களில் -C)
t - எடுத்துக் கொண்ட காலம் (விநாடிகளில் -S)
தீர்க்கப்பட்ட கணக்கு 2.1
ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
தீர்வு:
மின்னூட்டம் q = 30 கூலூம்
நேரம் t = 2 நிமிடம் × 60விநாடிகள்
= 120 விநாடிகள்
மின்னோட்டம் l = q/ t = 30C/120s = 0.25 A
1. மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான்களின் ஓட்டம்
எலக்ட்ரான்களின் கண்டுபிடிப்பிற்கு முன்னர், நகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் என அறிவியல் அறிஞர்கள் நம்பினர்,
நேர் மின்னூட்டங்களின் இந்த இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
எலக்ட்ரான்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எலக்ட்ரான்களின் ஓட்டம் உண்மையில் மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறுகிறது என அறியப்பட்டது. இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
மரபு மின்னோட்டம்
நேர் முனையில் இருந்து எதிர் முனைக்குமரபு மின்னோட்டம் செல்லுதல்
எலெக்ட்ரான்களின் ஓட்டம்
எதிர் முனையில் இருந்து நேர் முனைக்கு எலெக்ட்ரான்கள் செல்லுதல்
மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் அமையும்.
2. மின்னோட்டத்தை அளவிடுதல்
மின்னோட்டமானது அம்மீட்டர் என்ற கருவியால்அளவிடப்படுகிறது. அம்மீட்டரின் முனைகள் '+' மற்றும் '-' குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் மட்டும் இணைக்கப்பட வேண்டும்.
மில்லி ஆம்பியர் அல்லது மைக்ரோ ஆம்பியர் வரம்பில், மின்னோட்டங்களை அளவிட பயன்படும் கருவிகள், மில்லி அம்மீட்டர் அல்லது மைக்ரோ அம்மீட்டர்களாக குறிப்பிடப்படுகின்றன.
1 மில்லி ஆம்பியர் (mA) = 10-3 ஆம்பியர்
அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும்
1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர்
அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்
தீர்க்கப்பட்ட கணக்குகள் 2.2
ஓர் சுற்றின் வழியே 0.002A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?
தீர்வு
மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் = 0.002A
1 A = 106µA
0.002A = 0.002 × 106µA
= 2 × 10-3 × 106µA
= 2 × 103µA
0.002A = 2000 µA