மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மின்சுற்று, மின்சுற்றின் வகைகள் | 7th Science : Term 2 Unit 2 : Electricity
மின்சுற்று
சாவியைப் பயன்படுத்தி நீ உருவாக்கிய சுற்று ஓர் எளிய சுற்றாகும், அச்சுற்றின் உண்மையான படம் வரைவது மிகவும் கடினமாகும், நாம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனங்களில் இதைவிட மிகக் கடினமான மின்சுற்றுகள் அமையப் பெற்றிருக்கும் அதிக மின்விளக்குகள் சாவி மற்றும் வேறு மின் உறுப்புகளைக் கொண்ட மின்சுற்றின் உண்மையான வடிவத்தினை விளக்கும் சுற்றுப்படம் உன்னால் வரைய இயலுமா? அது மிக எளிமையானதா என யோசித்துப் பார், அது எளிமையல்ல.
அறிவியலாளர்கள் அச்செயலை மிகவும் எளிமையாக்குவதற்கு முனைந்தனர், சுற்றின் பல்வேறு மின் உறுப்புகளைக் குறிப்பிட எளிய குறியீடுகளை கையாண்டனர், அக்குறியீடுகளைப் பயன்படுத்தி நாம் சுற்றுப்படம் வரைய முடியும். படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மின்விளக்கு, மின்கலன் மற்றும் மின்சாவி போன்றவை குறியீடுகள் மூலம் குறிக்கப்படும்.
செயல்பாடு : 4
மின்சாவியினை உருவாக்குவோமா
நாமே நம் மின்சுற்றினுக்கு மின்சாவியை உருவாக்குவோம். 10 செ.மீ நீளமுள்ள நீளமான இரும்புத் தகட்டை எடுத்துக் கொள், படத்தில் காட்டியுள்ள படி இருமுறை மடித்துக்கொள், மரக்கட்டையின் வளைவு வழியே ஓர் ஆணியைச் செருகு, மரக்கட்டையின் மற்றொரு முனையில் ஆணியினை பயன்படுத்தி தகட்டின் மற்றொரு முனையை அமை, இரும்புத் துண்டானது முதல் ஆணியைத் தொடாவண்ணம் அதன் மேல் பொருத்தி மரக்கட்டையின் மறுமுனையில் இரும்புத் துண்டு மற்றொரு முனையை ஆணியின் உதவியால் சொருகு, தற்போது மின்சாவியானது தயாராகிவிட்டது.
உனது மின்சாவியினை சோதிக்க நீ விரும்புகிறாயா? அவ்வாறு செய்ய முதலில் படத்தில் காட்டப்பட்டுள்ள படி மின்சுற்றை அமைக்கவும், மின்சுற்றினை திறக்கவும் மூடவும் மின்சாவியினை நீ எவ்வாறு பயன்படுத்தவாய்?
மின்சாவியின் உலோகத்துண்டானது ஆணி மீது அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்ந்தாலும் அழுத்துவது நிறுத்தப்பட்டவுடன் மின்விளக்கு ஒளிர்வது நின்றுவிட்டால் நீ உருவாக்கிய தொடுசாவியானது வேலை செய்கிறது என்பது பொருள், நீ உருவாக்கிய தொடுசாவியானது எளிய சாவியாகும், உனது வீடுகளிலும் பள்ளிகளிலும் மின்சாவிப்பலகையில் வேறுபட்ட மின்சாவிகளை நீ பார்த்திருப்பாய்.
சாவிகளானது அவற்றின் பயன்பாடு கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் அவை அனைத்தும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது, மின்சாவியானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உலோகத் தகட்டுடன் உள்ளகத்தே இணைக்கப்பட்ட ஓர் இயங்கு சாதனமாகும், பொதுவாக பயன்படுத்தப்படும் மின்சாவிகளானது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது நேர்மின்முனையையும் குறுகிய கோடானது எதிர் மின்முனையையும் குறிக்கும். நாம் வரையும் சுற்றுப்படங்களில் மின் உறுப்புகளைக் குறிப்பிட இவ்வகையான குறியீடுகளைப் பயன்படுத்தலாம், அவ்வாறான படம் சுற்றுப் படம் எனப்படும்.
மின்சுற்றின் வகைகள்
மேற்காண் சோதனையில், நாம் மின்விளக்கையும் மின்கலனையும் பயன்படுத்தி ஓர் சுற்றை உருவாக்கினோம். மின்விளக்கு மற்றும் மின்கலனைப் பயன்படுத்தி நாம் ஒரே ஒரு மின்சுற்றை மட்டும் தான் அமைக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குகள் மற்றும் மின்கலன்களைப் பயன்படுத்தி பல விதங்களில் நாம் எண்ணற்ற வகையான சுற்றுக்களை உருவாக்க இயலும்.
1. தொடர் இணைப்பு சுற்று
ஓர் மின்விளக்கையும் மின்கலனையையும் பயன்படுத்தி இரு வகையான சுற்றுக்களை உருவாக்க முடியும், இச் சோதனையில் நாம் ஒருவகையான சுற்றினை உருவாக்கி அதனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
படத்தில் காட்டியுள்ளபடி இரு மின்விளக்குகள், மின்கலன் மற்றும் சாவி ஆகியவற்றை உள்ளடக்கியச் சுற்றை கவனி. சுற்றுப் படத்தில் இருந்து, இரு மின்விளக்குகள் அடுத்தடுத்து இணைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. சுற்றுப்படமானது மின்விளக்கு மற்றும் மின்கலன் அமைந்திருக்கும் நிலையினை குறிக்கின்றது. இவ்வாறாக மின்விளக்குகள் இணைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு தொடர் இணைப்பு என்று பெயர்.
நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்
தற்போது இரு மின்விளக்குகள் மற்றும் மின்கலன் ஆகியவற்றை இணைத்து ஓர் சுற்றை உருவாக்குவோம். இரு மின்விளக்குகளும் ஒளிர்கின்றனவா? இரு மின்விளக்குகளும் ஒரே பிரகாசத்துடன் ஒளிர்கின்றனவா? ஓர் மின்விளக்கு ஒளிர்ந்தால் அம்மின்விளக்கின் இடத்தை மாற்றி அமைத்தால் அவ்விளக்கு மிகப்பிரகாசமாக எரியுமா? மின்விளக்கின் வரிசையை மாற்றி அமைத்து, உற்றுநோக்கு.
சில வேளைகளில் ஒரே அளவில் தோன்றும் மின்விளக்குகள் கூட ஒளிர்வதில் மாறுபடும்.
எனவே, தொடர் இணைப்பில் இணைக்கப்படும் ஒரே அளவில் தோன்றும் மின்விளக்குகள் எப்போதும் ஒரே அளவில் ஒளிர்வதில்லை .
2. பக்க இணைப்புச் சுற்று
இரு மின்விளக்குகள் வெவ்வேறான பாதைகளில் இணைக்கப்பட்டுள்ளதைப் படம்காட்டுகிறது. இது இரண்டாம் வகைச் சுற்றாகும். இரு மின்விளக்குகளும் சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளதால் இத்தகைய சுற்று பக்க இணைப்புச் சுற்று எனப்படும்.
பக்க மற்றும் தொடர் இணைப்புச்சுற்றுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள்
மூளையை கிளர்ச்சியூட்டும் அறிவியல்
உனது வீட்டில் மின் பழுதைச் சரி செய்யும் மின்பணியாளருக்கு திடீரென மின் அதிர்ச்சி ஏற்பட்டால் அவரை அவ்வதிர்ச்சியில் இருந்து மீட்க அவரை நீ தொடுவாயா?
மின்அதிர்ச்சியில் இருந்து அவரை மீட்க ஈரக்கட்டையால் அடிப்பாயா? மின் கம்பங்களில் மின்வேலைகள் செய்யும் போது மின் பணிபுரிவோர் ஏன் இரப்பர் கையுறைகளை அணிந்திருக்கின்றனர்?
அனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது என நாம் அறிவோம். அணுவானது மின்னூட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது, இத்துகள்களில் பெரும்பாலானவை அணுக்களில் நிலையாக அமைந்திருக்கும்,ஆனால் கடத்திகளில் (எல்லா உலோகங்களிலும்) ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கும், இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது அணுக்களின் சில எலக்ட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.
மின்னோட்டவியல்
குறுக்கு மின்சுற்று
உன் வீட்டருகில் அமைந்திருக்கும் மின்கம்பங்களில் சில நேரங்களில் உருவாகும் தீப்பொறியை நீ கண்டு இருக்கிறாயா? அந்த மின்சார தீப்பொறி உருவாக காரணம் உனக்கு தெரியுமா? இது மின் பாதையில் ஏற்படும் குறுக்கு மின்சுற்றினால் உருவாகிறது, குறுக்குச் சுற்று என்பது இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று, குறுக்கு மின்சுற்று ஆகும்.
வெல்டிங் செய்தல், குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.