இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மின்னோட்டவியல் | 7th Science : Term 2 Unit 2 : Electricity
அலகு 2
மின்னோட்டவியல்
கற்றல் நோக்கங்கள்
* மின்னோட்டம் பாயும் வீதம் பற்றி புரிந்து கொள்ளுதல்
* மின் சுற்றுப் படம் வரையக் கற்றுக் கொள்ளுதல்
* மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை வேறுபடுத்தி அறிதல்
* மின் சுற்றுகளின் வகைகளை, மின்னோட்டம் பாயும் வீதங்களின் அடிப்படையிலும், மின்விளக்கு இணைத்தல் அடிப்படையிலும் அறிந்துக் கொள்ளுதல்
* மின்கலன் மற்றும் மின்கல அடுக்கு - வேறுபடுத்தி அறிதல்
* மின்னோட்டத்தின் விளைவுகளையும், மின்னோட்டத்தைப் பாதிக்கும் காரணிகளையும் புரிந்து கொள்ளுதல்
* மின்சுற்றில் பயன்படுத்தப்படும் மின் பொருட்களை அடையாளம் கண்டுணர்தல்
* மின்சுற்றுக்களை வேறுபடுத்தி அறிதல்
* எண்ணியல் கணக்குகளைச் செய்யவும், மின்சுற்றுகளை வரையவும் அறிந்துக்கொள்ளுதல்
அறிமுகம்
1882 - ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் சூரியன் மேற்கில் மறையும் வேளையில் அந்த அதிசய நிகழ்வு நடைபெற்றது, 9000 வீடுகளில் 14000 மின்விளக்குகளின் சாவியை தாமஸ் ஆல்வா எடிசன் திறந்த தருணம் அனைத்து விளக்குகளும் எரியத் தொடங்கின, இது மனித இனத்திற்கு ஓர் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும், அன்றிலிருந்து இரவு நேரத்திலும் உலகமே வெளிச்சத்திற்கு வந்தது.
அந்நிகழ்விற்குப்பின் பல நாடுகள் நியூயார்க்கிற்கு அடுத்தபடியாக மின்சாரத்தை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தன, முதன் முதலாக 1899 - ஆம் ஆண்டு இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்தது, 1899 -ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் முதல் அனல் மின் நிலையத்தை கல்கத்தா மின் விநியோக கழகம் தோற்றுவித்தது.
1900 ஆம் ஆண்டு சென்னையில் பேசின் பாலத்தில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது, மேலும், அரசு அச்சகம் பொது மருத்தவமனை, மின் தண்டூர்திப்பாதை மற்றும் சென்னையின் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளிலும் மின் விநியோகம் செய்யப்பட்டது, இன்று மின்சாரமானது வீடுகளுக்கு அவசியமான ஒன்றாகும்.
உனது ஆறாம் வகுப்பில் மின்சாரத்தைப் பற்றியும் மின் மூலங்கள் பற்றியும் படித்திருப்பீர்கள், தொழிற்சாலைகள் இயங்கவும் மருத்துவச் சாதனமான செயற்கை உயிர்ப்பு அமைப்புகளிலும் , தகவல் தொடர்பு சாதனமான கைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் வேளாண் நிலங்களில் இருந்து நீர் இறைக்கவும், வீடுகளை ஒளியூட்டவும் மின்சாரம் முக்கியமானதாகும். மின்சாரம் என்றால் என்ன? அதைப்பற்றி இப்போது பார்ப்போம், வெப்ப ஆற்றல் மற்றும் காந்த ஆற்றல் போல் மின்சாரமும் ஓர் வகையான ஆற்றலாகும்.
அனைத்துப் பருப்பொருள்களும் சிறிய துகள்களான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது என அறிந்திருப்போம், அணுவின் மையப்பகுதியானது உட்கரு என அழைக்கப்படுகிறது, உட்கருவானது புரோட்டான்கள் மற்றம் நியூட்ரான்களை உள்ளடக்கியது, புரோட்டான்கள் நேர் மின்சுமை கொண்டவை, நியூட்ரான்கள் மின்சுமையற்றவை.
உட்கருவைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன, அணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்.
செயல்பாடு :1
உனது உலர்ந்த தலைமுடியைச் சீப்பால் சீவு, சீப்பால் தலையை சீவிய உடன் அதை சிறு காகிதத் துண்டின் அருகில் கொண்டு வரும் போது, நீ என்ன காண்கிறாய்?
பிளாஸ்டிக் நாற்காலியில் இருந்து நீ எழுந்தவுடன் நீ அணிந்திருக்கும் நைலான் சட்டை நாற்காலியுடன் ஒட்டிக்கொண்டு பட பட என ஒலியை எழுப்புகிறது, இவ்வொலி உருவாக காரணம் என்ன?
நமது கையில் தேய்க்கப்பட்ட பலூன் எந்த வித தொடுவிசையும் இன்றி சுவற்றில் ஒட்டிக் கொள்கிறது, இவை அனைத்திற்குமான காரணம் நீ அறிவாயா?
மேற்காண் அனைத்து செயல்பாடுகளிலும், ஓர் பொருளின் பரப்பின் மீது மற்றொரு பொருளின் பரப்பை தேய்க்கும் போது, அவை மின்சுமை அடைகிறது
மின்னூட்டம் கூலூம் என்ற அலகினால் அளவிடப்படுகிறது, ஓரலகு கூலூம் என்பது தோராயமாக 6.242 × 1018 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்.
மின்னூட்டம், பொதுவாக "q" என்ற எழுத்தால் குறிக்கப்படும்.