பொருளியல் - இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பு | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu
இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பு
இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும், ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.
முதன்மைத் துறை அல்லது விவசாயத் துறை, இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை சார்புத் துறை அல்லது சேவைத் துறை எனப் பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளியல் அமைப்பின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு அமைப்பு குறிக்கிறது. வேலைப் வாய்ப்பு முறைகள் நாட்டுக்கு நாடு மாறுகின்ற போதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். நன்கு வளர்ந்த நாடுகளில்,
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் குழுவின் பங்கு சிறியதாகவும், தொழில்மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் குழுவின் பங்கு பெரிதாகவும் இருக்கும்.
இந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு எப்போதுமே இடம்பெற்றுள்ளது.
1972-73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பு வளர்ச்சி,
சராசரியாக 2% அளவுக்கு உயர்ந்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
இடைக்கால வரலாற்றுக் காலத்தில் இந்தியாவின் டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக், வேலைவாய்ப்பின்மைச்சிக்கலைத் தீர்ப்பதற்காக "வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்.