பண்புகள், சேர்க்கைச்செயல்கள், சிதைவுச் செயல்கள், வகைப்பாடு, பயன்கள் - நொதிகள் - உயிரி மூலக்கூறுகள் | 11th Botany : Chapter 8 : Biomolecules
நொதிகள் என்பவை செல்கள் மற்றும் உயிரினங்களில் பல்லாயிரக்கணக்கான வளர்சிதை மாற்ற வினைகளை ஊக்குவிக்கும் கோளப் புரதங்களாகும். இவ்வினைகளில் நொதிகளால் சிதைக்கப்படும் சேர்மங்கள் வளர்சிதைமாற்றச் சேர்மங்கள் எனப்படுகின்றன. நொதிகளால் ஊக்குவிக்கப்படும் வளர்சிதை மாற்றச்செயல்களாகச் செல்சுவாசம், ஒளிச்சேர்க்கை, புரதச்சேர்க்கை மற்றும் பிற வழித்தடங்கள் திகழ்கின்றன. இவை சூழல் நிகழ்வாக, நீள் சங்கிலித் தொடர் நிகழ்வாக நிகழும் வளர்சிதைமாற்றச் செயல்களாக உள்ளன. இந்நிகழ்வுகள் கீழ்கண்டவாறு அறியப்படுகின்றன.
சேர்க்கைச்செயல்கள்
(Anabolic): இந்நிகழ்வின்போது கரிமச் சேர்மங்கள் கட்டப்படுகின்றன.
அமினோ அமிலங்களைக்கொண்டு புரதச்சேர்க்கை நிகழ்வதும் எளிய சர்க்கரைகளில் இருந்து பாலிசாக்கரைடுகள்
உருவாவதும் சேர்க்கை செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
சிதைவுச் செயல்கள்
(Catabolic): சிக்கலான உணவுப் பொருட்களின் செரிமானம், சுவாசித்தலின்
போது சர்க்கரைகளின் சிதைவு போன்றவை சிதைவுச் செயல்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்
(படம் 8.16).
நொதிகள் செல்
வெளி நொதிகளாக இருந்தால், உருவாகிய செல்லில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் செயல்படுகின்றன.
எடுத்துக்காட்டு: செரிமான நொதிகள்; அல்லது செல்
உள் நொதிகளாக இருந்தால் உருவாக்கப்பட்ட செல்லிலேயே செயல்படுகின்றன. எடுத்துக்காட்டு:
இன்சுலின்.
• அனைத்தும் கோள வடிவப் புரதங்களாகும்.
• மிகச் சிறிய அளவிலும் செயல்படக்கூடிய வினையூக்கிகளாக உள்ளன.
• வினையின் முடிவில் மாறாமல் இருக்கும்.
• மிகவும் அதிகக் குறிப்புச் சார்பு உடையவை.
• வினை நடைபெறுவதற்குத் தேவையான ஒரு ஊக்குவிப்பு தளத்தைப் பெற்றிருக்கும்.
• இவை, ஊக்கும் வினைகளுக்குத் தேவைப்படும் ஊக்குவிப்பு ஆற்றலைக் குறைக்கின்றன.
மூலக்கூறுகள் வினைபுரியும் போது, உயர் ஆற்றல் பெற்ற
நிலையற்ற இடைப்பொருள்களாக மாறுகின்றன. இந்த இடைநிலையில் மிகக் குறுகிய காலமே நீடிக்கின்றன.
இந்த நிலையை அடைய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்தக் குறைந்தபட்ச ஆற்றல் ஊக்குவிப்பு ஆற்றல் (activation energy) எனப்படுகிறது. இந்த ஊக்குவிப்பு
ஆற்றலின் தேவையை விளக்க மலை மேல் பாறை ஏற்றப்படுவதை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்
(படம் 8.17).
உங்களுக்குத் தெரியுமா?
உயிர் மண்டலத்தின் மிக அதிக அளவில் காணப்படும் புரதம் RUBISCO ஆகும்.
நொதியால் ஊக்குவிக்கப்படும் வினையின் ஆரம்பப்பொருள் தளப்பொருள் எனப்படும். அது மாற்றமடைந்து விளைப்பொருள் ஆகிறது. தளப்பொருளானது பதப் நொதியின் மீது உள்ள ஊக்குவிப்பு தளம் என்ற பகுதியோடு பிணைத்துக் கொள்கிறது. இது பூட்டு - சாவி இயக்க முறையில் நிகழும் நொதி செயலாகும். (Lock and key mechanism) இவ்வாறு நொதி- தளப்பொருள் கூட்டுத்தொகுதி உருவாகும் போது தளப்பொருளின் ஆற்றல் உயர்ந்து இடைநிலையை அடைந்து பின்னர் விளைப்பொருட்களாக மாறுவதுடன் நொதி எந்த மாற்றமும் அடையாமல் விடுவிக்கப்படுகிறது (படம் 8.18).
பல நொதிகளுக்கு அவற்றின் திறமையான செயல்பாட்டிற்காகச் சிலபுரதமல்லாத துணைக்காரணிகள் தேவைப்படுகின்றன. துணைக்காரணிகள் எளிய கனிம அயனிகள் முதல் சிக்கலான கரிம மூலக்கூறுகள் வரை வேறுபடலாம். இவை மூன்று வகைப்படும். கனிம அயனிகள், பிராஸ்தட்டிக் தொகுதிகள் மற்றும் துணை நொதிகள் (படம் 8.19).
• முழு நொதி
- புரதம் அல்லாத பகுதிக் கூறுடன் செயல்படும் நொதி
• அப்போ என்ஸைம்
- புரதம் அல்லாத பகுதிக் கூறற்ற செயல்படாத நொதி
• கனிம அயனிகள்
நொதியால் ஊக்குவிக்கப்படும் வினைகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவுகின்றன. எடுத்துக்காட்டு.
குளோரைடு அயனிகளின் முன்னிலையில் உமிழ் நீரில் உள்ள அமைலேஸின் செயல்பாடு அதிகரிக்கிறது.
• பிராஸ்தட்டிக் தொகுதிகள் (ஒரு நொதியின் ஊக்குவிப்பு செயலில் துணைபுரியும் கரிம மூலக்கூறுகள் இவைகளாகும். ஃபிளேவின் அடினைன் டைநியூக்ளியோடைடில் (FAD) ரைபோஃபிளேவின் (வைட்டமின் B2) உள்ளது. இதன் பணி ஹைட்ரஜனை ஏற்றுக் கொள்வதாகும். ஹீம் என்ற இரும்பு கொண்ட பிராஸ்தட்டிக் தொகுதியில் இரும்பு அணு அதன் மையத்தில் உள்ளது.
• துணைநொதிகள் நொதியுடன் இணைந்திராமல் துணைக்காரணிகளாக செயல்படும் கரிமக் கூட்டுப் பொருட்கள் துணைநொதிகள் எனப்படும். பல துணை நொதிகளின் அத்தியாவசியக் கூறுகள் வைட்டமின்களாக உள்ளன. எடுத்துக்காட்டு. NAD (நிக்கோட்டினமைடு அடினைன் டைநியுக்ளியோடைடு), NADP, துணை நொதி A, ATP (அடினோசின் டிரை பாஸ்ஃபேட்).
உங்களுக்குத் தெரியுமா?
புரதமல்லாத
நொதிரைபோசைம் :
ரைபோசைம் (Ribozyme) ஊக்குவிக்கும் RNA (Catalytic RNA) என்று அழைக்கப்படுகிறது. இந்த ரிபோநியூக்ளிக் அமிலம் நொதியாகச் செயல்படுகிறது. இது ரைபோசோம்களில் காணப்படுகிறது.
நொதிகள் அவற்றின் செயல்முறையின் அடிப்படையில் ஆறு
வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.