பெரும்பாலான தாவரங்கள், பூஞ்சை மற்றும் பிற நுண்ணுணியிரிகள்
பல கரிம மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. இப்பகுதிக்கூறுகள் வளர்சிதைமாற்றப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
இவை வளர்சிதை மாற்றத்தின் இடைப்பட்ட பொருள் மற்றும் உற்பத்தி பொருட்களாக உள்ளன. சிறு
மூலக்கூறுகளைக் குறிப்பிட வளர்சிதை மாற்றப்பொருள் என்ற சொல் பொதுவாகப் பயன்படுகிறது.
வளர்சிதை மாற்றத்தில் பங்குபெறும் அடிப்படையில் முதல் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது
(படம் 8.4).
ஒரு உயிரினத்தின் அடிப்படை வளர்சிதை மாற்ற நிகழ்வுகளான ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், புரத மற்றும் லிப்பிடு வளர்சிதை மாற்றம் போன்றவற்றிற்கு தேவைப்படும் சேர்மங்கள் முதன்மை வளர்சிதை மாற்றப் பொருட்கள் எனப்படுகின்றன.
உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்காத, வளர்ச்சி மற்றும் உருவாக்கத்தில் நேரடி பங்கு வகிக்காத பல கரிமக் கூட்டுப்பொருட்களை உருவாக்குகின்றன. இவை இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் எனப்படுகின்றன.
கரிம அல்லது உயிரி மூலக்கூறுகள் சிறிய மற்றும் எளியவையாக இருக்கலாம். இந்த எளிய மூலக்கூறுகள் பல சேர்ந்து சிக்கலான மூலக்கூறுகள் உருவானால் அவை பெருமூலக்கூறுகள் எனப்படுகின்றன. இவை நான்கு வகைகளைக் கொண்டுள்ளன அவை கார்போஹைட்ரேட்டுகள், லிப்பிடுகள், புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள். லிப்பிடுகளைத் தவிர மற்ற பெரு மூலக்கூறுகள் மானோமெர்கள் என்ற பல ஒத்த அலகுகளின் இணைவால் தோன்றும் பல்வேறு நீளமுடைய சங்கிலிகலாக உருவாகின்றன. இந்த ஒத்த அலகுகளை உடைய சங்கிலிகள் பாலிமெர்கள் எனப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
மார்பின் என்ற ஆல்கலாய்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது ஓப்பியம் பாப்பி (பப்பாவர் சாம்னிஃபெரம்) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கு அதிக வலி ஏற்படும்போது வலிநிவாரணியாகவும், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.