மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - இனமேம்பாட்டியல், புறத்தோற்ற மேம்பாட்டியல் மற்றும்சூழ்நிலை மேம்பாட்டியல் | 12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation
இனமேம்பாட்டியல், புறத்தோற்ற மேம்பாட்டியல் மற்றும்சூழ்நிலை மேம்பாட்டியல் (Eugenics, Euphenics and Euthenics)
மனித இனத்தை மேம்படுத்துவதற்காக மரபியல் விதிகளை பயன்படுத்துவது இன மேம்பாட்டியல் (Eugenics) எனப்படும். பிரான்சிஸ் கால்டன் என்பவர் 1885 ஆம் ஆண்டு யூஜெனிக்ஸ் என்ற சொல்லை உருவாக்கினார். இதற்கு "நல்ல பிறப்பு" என்று பொருள். சிறந்த எதிர்கால தலைமுறைக்காக, இன மேம்பாட்டியல் விதிகளைப் பயன்படுத்தி தலைசிறந்த மக்களைக் கொண்ட இனத்தொகையை அதிகப்படுத்துதல் மற்றும் இயல்பற்ற, குறைபாடுடைய மக்களின் இனத்தொகையைக்குறைத்தல் அவசியமாகின்றது.
இன மேம்பாட்டியலில் இரண்டு முறைகள் உள்ளன வளராக்க முறை அல்லது நேர்மறை இனமேம்பாட்டியல், கட்டுப்படுத்தப்பட்ட முறை அல்லது எதிர்மறை இனமேம்பாட்டியல்.
(i) நேர்மறை இன மேம்பாட்டியல்
நேர்மறை இன மேம்பாட்டியல், சிறந்த அல்லது விரும்பத்தக்க வளர்கரு பிளாசத்தினை தொடர்ந்து நிலையாக அதிகரிக்கவும் சமூகத்தின் சிறந்த வளர்கரு பிளாசத்தினை பாதுகாக்கவும் முயல்கின்றது. கீழ்காணும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் விரும்பத்தகுந்த பண்புகளை அதிகரிக்க முடியும்.
i. விரும்பத்தகுந்த பண்புகளைப் பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதிலேயே திருமணம் செய்து வைத்தல்
ii. சிறந்த வளர்கரு பிளாசத்தை பெறும் பொருட்டு விந்து மற்றும் அண்ட வங்கிகளை நிறுவ மானியம் அளித்தல்
iii. மரபியல் மற்றும் இன மேம்பாட்டியல் பற்றிய அடிப்படை கொள்கைகளை போதித்தல்
iv. சுற்றுச்சூழல் நிலைகளை மேம்படுத்துதல்
V. மரபிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லல்
(ii) எதிர்மறை இன மேம்பாட்டியல்
குறைபாடுடைய வளர்கரு பிளாசத்தினை சமூகத்திலிருந்து வெளியேற்றும் நிகழ்வே எதிர்மறை இன மேம்பாட்டியல் எனப்படும். இதற்கு கீழ்காணும் நடவடிக்கைகள் அவசியமாகிறது.
i. குறைபாடுடையவர்களை பாலின ரீதியில் தனிமைப்படுத்துதல்
ii. குறைபாடுடையவர்களை மலடாக்குதல்
iii. உள் வருகையை (Immigration) கட்டுக்குள் வைத்தல்
iv. திருமணங்களை முறைப்படுத்துதல்
மனித மரபிய நோய்களை, நோய் அறிகுறி சார்ந்து குணப்படுத்துவது புறத்தோற்ற மேம்பாட்டியல் அல்லது மருத்துவ பொறியியல் எனப்படும். யூபெனிக்ஸ் என்ற சொல், 1960 ஆம் ஆண்டு ஜோஸ்வா லெடர்பெர்க் (Joshua Lederberg) என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் பொருள் "இயல்பான தோற்றம்” என்பதாகும். இது பல்வேறு மனித பாரம்பரிய நோய்கள் குறிப்பாக பிறப்பு வழி வளர்சிதை மாற்றக் குறைபாடு நோயினை கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது. (எ.கா.) பினைல்கீட்டோனூரியா (PKU)
சுற்றுச்சூழல் நிலைகளை மேம்படுத்துவதன் மூலம், தற்போதான மனித இனத்தை மேம்படுத்தும் அறிவியல் சூழ்நிலை மேம்பாட்டியல் எனப்படும். அவர்களுக்கு நல்ல உணவூட்டம், மாசற்ற சுற்றுச்சூழல் நிலைகள், சிறந்த கல்வி மற்றும் போதுமான மருத்துவ மேம்பாட்டினை அடைய முடியும்.