Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மனித இரத்த வகைகள்

மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - மனித இரத்த வகைகள் | 12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation

   Posted On :  13.05.2022 05:12 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்

மனித இரத்த வகைகள்

மனிதனிலும் பல்கூட்டு அல்லீல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு இரத்த வகைகளின் மரபுக் கடத்தலைக் கூறலாம்.

மனித இரத்த வகைகள் (Human Blood Groups) 

மனிதனிலும் பல்கூட்டு அல்லீல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு இரத்த வகைகளின் மரபுக் கடத்தலைக் கூறலாம். எதிர்பொருள் தூண்டிகள் (Antigen) மற்றும் எதிர்பொருள்கள் (Antibody) பற்றி அறிந்துகொள்வதன் மூலம் இரத்தவகையின் மரபுக்கடத்தலை அறிந்து கொள்ள முடியும். இரத்தத்தில் காணப்படும் பகுதி பொருட்கள், அதன் வகைகள் (ABO), இரத்த எதிர்பொருள் தூண்டிகள் மற்றும் எதிர்பொருள்கள் பற்றி நாம் ஏற்கனவே பதினோராம் வகுப்பின் 7ஆம் பாடத்தில் பயின்றுள்ளோம்.


1. ABO இரத்த வகைகள்

பல்கூட்டு அல்லீல்களான ABO இரத்த வகைகளின் மரபுக் கடத்தல் :

ஒரு மனிதனின் இரத்தம் இன்னொரு மனிதனின் இரத்தத்திலிருந்து வேதிப்பொருட்களின் அடிப்படையில் வேறுபடுகிறது. பொருத்தமில்லாத இரண்டு இரத்த வகைகளை ஒன்றாக கலக்கும் போது அதிலுள்ள இரத்த சிவப்பு செல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இரத்த செல் திரட்சியை ஏற்படுத்துகின்றன. இரத்த சிவப்பு செல்லின் மேற்புறச்சவ்வு மற்றும் எபிதீலியல் செல்களில் காணப்படும் எதிர்ப்பொருள் தூண்டியின் காரணமாக வேதிப்பொருட்களின் வேறுபட்ட தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. டாக்டர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர் மனித இரத்தத்தில் உள்ள RBC யின் புறப்பரப்பில் ‘எதிர்ப்பொருள் தூண்டி A’ மற்றும் ‘எதிர்ப்பொருள் தூண்டி B' என்ற இரண்டு வகையான எதிர்பொருள் தூண்டிகள் இருப்பதைக் கண்டறிந்தார். எதிர்ப்பொருள் தூண்டிகள் இருத்தல் அல்லது இல்லாமலிருத்தலின் அடிப்படையில், A இரத்த வகை, B இரத்த வகை மற்றும் O இரத்தவகை என்ற மூன்று வகையான இரத்த வகைகளை (ABO) அவர் கண்டறிந்தார். இதில் 'O' வகை கொண்டோரை ‘பொதுக் கொடையாளர்கள்’ என்பர். 1902 ஆம் ஆண்டு லேண்ட்ஸ்டெய்னருடைய மாணவர்களாகிய வான் டி காஸ்டெல் மற்றும் ஸ்டூர்லி என்பவர்கள் மிகவும் அரிதான AB என்ற நான்காவது இரத்த (பொதுப் பெறுநர்) கண்டுபிடித்தனர்.

1925 இல் பெர்னஸ்டின் என்பவர் மனிதனின் பல்வேறு இரத்த வகைகளின் மரபுக் கடத்தல் பல்கூட்டு அல்லீல்களால் நிர்ணயிக்கப்படுகிறது என கண்டறிந்தார். எந்த ஒரு நபரின் இரத்த வகைகயையும் நிர்ணயிப்பது குரேமோசோம் 9-ல் உள்ள மூன்று அல்லீல்கள் ஆகும். இரத்த வகையை கட்டுப்படுத்தும் மரபணு L அல்லது I என குறிப்பிடப்படுகிறது. (L என்பது கண்டுபிடிப்பாளரான லேண்ட்ஸ்டெய்னர்ரையும் I-என்பது ஐஸோஅக்ளுட்டினேசனையும் குறிக்கும்) மரபணு I ஆனது IA, IB, Io என்ற மூன்று அல்லீல் வடிவங்களைக் கொண்டுள்ளது. IA அல்லீல் எதிர்பொருள் தூண்டி -A யையும், IB அல்லீல் எதிர்பொருள் தூண்டி B யையும் குறிக்கிறது. ஆனால், Io அல்லீல் எந்த ஒரு எதிர்ப்பொருள் தூண்டியையும் குறிக்கவில்லை. சிலரின் கண்ணீர் மற்றும் உமிழ்நீர் போன்ற உடல் திரவத்தில் எதிர்ப்பொருள் தூண்டிகள் காணப்படும். அவர்கள் சுரப்பாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு IA மற்றும் IB அல்லீலும் டிரான்ஸ்பெரேஸ் நொதியினை உற்பத்தி செய்கின்றது. IA அல்லீல் N - அசிடைல் கேலக்டோஸ் டிரான்ஸ்பெரேஸ் நொதியை சுரந்து N-அசிட்டைல் கேலக்டோசமைனைச் (NAG) சேர்க்கிறது. IB அல்லீல், கேலக்டோஸ் டிரான்ஸ்பெரேஸ் நொதியை சுரந்து கேலக்டோஸை ‘H' பொருள் எனப்படும் மூலப்பொருளோடு சேர்க்கிறது.

அட்டவணை 4.1 ABO இரத்த வகைகளின் மரபியல் அடிப்படை 


I° / I° அல்லீல் டிரான்ஸ்பெரேஸ் நொதி எதையும் சுரப்பதில்லை எனவே "வெற்று அல்லீல்" (Null allele) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை NAG அல்லது கேலக்டோஸை மூலப்பொருளுடன் சேர்ப்பதில்லை.

புறத்தோற்ற விகிதத்தில் IA மற்றும் IB அல்லீல்கள் I° விற்கு ஓங்கிய தன்மையை கொண்டிருக்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

மனிதர்களிடையே காணப்படும் எதிர்பொருள் தூண்டிகள் மற்ற உயிரினங்களின் இரத்தத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிம்பான்சி மற்றும் கிப்பன் குரங்குகளில் A வகை எதிர்பொருள் தூண்டிகளும் உராங்குட்டான் குரங்குகளில் A, B மற்றும் AB வகை எதிர்ப்பொருள் தூண்டிகளும் காணப்படுகின்றன.

.• நவீன உலகத்தின் குரங்கு (பிளாட்டிரைனா) மற்றும் லெமூர் குரங்குகள் ஒரே மாதிரியான பொருளை கொண்டுள்ளன. ஆனால் மனிதனில் காணப்படுகின்ற எதிர்ப்பொருள் தூண்டி -B யோடு ஒத்து காணப்படுவதில்லை.

• பூனைகளில் மூன்று இரத்த வகைகள் அறியப்பட்டுள்ளன. இவை மனிதர்களுடைய மரபணு அமைப்புடன் ஒத்துப் போகின்றன. விலங்குகளின் கண்ணீ ர், உமிழ்நீர், சிறுநீர், விந்து திரவம் இரப்பை நீர் மற்றும் பால் போன்ற உடல் திரவங்களில் எதிர்ப்பொருள் தூண்டிகள் காணப்படுகின்றன.

ஆனால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஓங்குதன்மையுடன் (IA = IB) இருப்பதால் இது "இணை ஓங்குதன்மை" (Co-dominance) என அழைக்கப்படுகிறது. இவற்றின் ஓங்கு பண்புசார்ந்த படிநிலை IA = IB > I° (Dominance hierarchy) ஆகும். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து இந்த மூன்று அல்லீல்களில் ஏதேனும் ஒன்றைப் பெறுகின்றன. இதனால் ஆறுவகையான மரபணு வகைகளும் நான்கு வகையான இரத்த வகைகளும் (புறத்தோற்ற ஆக்கமும்) உருவாகின்றன. IAIA, IAIO, IBIO, IBIO, IAIB, IOIO என்ற ஆறுவகையான மரபு வகைகளை சேய் உயிரிகள் கொண்டுள்ளன.


ரீசஸ் அல்லது Rh காரணி

Rh காரணி அல்லது Rh எதிர்ப்பொருள் தூண்டி இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. 1940ல் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் அலெக்சாண்டர் வெய்னர் ஆகிய இருவரும் முதலில் மகாகா ரீசஸ் என்னும் ரீசஸ் குரங்குகளிலும் பிறகு மனிதனிலும் இதனை கண்டுபிடித்தனர். Rh காரணி என்ற வார்த்தை தடுப்பாற்றல் தருகின்ற D (இம்யுனோஜெனிக் D) எதிர்பொருள் தூண்டியைக் குறிக்கிறது. D எதிர்பொருள் தூண்டியை பெற்றிருப்பவர் Rh D உடையோர் (Rh+) என்றும் D எதிர்ப்பொருள் தூண்டி அற்றவர் Rh D அற்றோர் (Rh-) என்றும் அழைக்கப்படுவர். இரத்தத்தில் காணப்படும் ரீசஸ் காரணியானது ஓங்கு பண்பாக மரபுவழி கடத்தப்படுகிறது. இயற்கையாகவே அனைவரின் பிளாஸ்மாவிலும் Dக்கு எதிரான எதிர்ப்பொருள்கள் இருப்பதில்லை. Rh (Rh அற்றோர்) இரத்தம் Rh+ (Rh - D உடையோர்) இரத்தத்தோடு தொடர்பு ஏற்படுகிறபோது அவர்கள் இரத்தத்தில் மக்கு எதிரான எதிர்ப்பொருள் உருவாகின்றது. ஆனால் Rh உடையோர் Rh அற்றோரின் இரத்தத்தைப் பெறும்போது எவ்வித விளைவுகளும் உண்டாவதில்லை.



Tags : Principles of Inheritance and Variation மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்.
12th Zoology : Chapter 4 : Principles of Inheritance and Variation : Human Blood Groups Principles of Inheritance and Variation in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : மனித இரத்த வகைகள் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 4 : மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்