Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி

அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை

இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி

அ) பண்டைய காலத்தில் நீதித்துறை ஆ) இடைக்கால இந்தியாவில் நீதித்துறை இ) நவீன இந்தியாவில் நீதித்துறை

இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி


அ) பண்டைய காலத்தில் நீதித்துறை

பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது. அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார். பெரும்பாலான அரசர்களின் அவைகளில் தர்மத்தின் அடிப்படையில் (நன்னடத்தை, கடமை) நீதி வழங்கப்பட்டது. இவை மரபார்ந்த சட்டத் தொகுப்புகளாகும். தர்மத்தின் சட்டங்கள் தனி மனிதனை மட்டுமல்லாது சமூகத்தையும் நிர்வகித்தது.


ஸ்மிருதி இலக்கியங்கள்

பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன. அவை மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவையாகும்.

கனங்களின் குடியரசுகள் தங்களுக்கென சட்ட அமைப்பைக் கொண்டிருந்தன. இதில் குலிகா எனும் நீதிமன்றத்தை நாம் காணலாம். வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் எட்டு குலிகாக்களைக் கொண்ட வாரியம் இருந்தது. மேல்முறையீடானது குல நீதிமன்றத்திலிருந்து கன நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.


ஆ) இடைக்கால இந்தியாவில் நீதித்துறை

துக்ளக் ஆட்சிகாலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டதைக் காண முடிகிறது. இது ஃபைகா-இ-பெரோஸ்ஷாகி என அழைக்கப்பட்டது. இச்சட்டம் பல்வேறு விவகாரங்களில் சட்டம் மற்றும் நடைமுறை விவரங்களைப் வழங்கியது. இது அரபு மொழியில் எழுதப்பட்டுப் பின்னர் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இது ஔரங்கசீப் காலத்தில் 1670ஆம் ஆண்டு ஃபட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத் தொகுப்பின்படி மாற்றி அமைக்கப்பட்டது.


இ) நவீன இந்தியாவில் நீதித்துறை

இன்று நம் நாட்டில் உள்ள நீதித்துறை அமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மேயர் நீதிமன்றங்களின் காலத்தில் 1727ஆம் ஆண்டுகளில் இந்த பொது சட்டத்தின் (1726ஆம் ஆண்டு சாசனச் சட்டத்தின் கீழ்) வரலாறு தொடங்குகிறது. ஒழுங்கு முறைச் சட்டம், 1773 உச்ச நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது. உச்ச நீதிமன்றம் முதன் முதலாக கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் நிறுவப்பட்டது. சர் எலிஜா இம்ஃபே என்பவர் அந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1801 மற்றும் 1824ஆம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இம்மூன்று இடங்களிலும் 1862ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்கள் மேற்படி இடங்களில் நிறுவப்படும் வரையில் உச்சநீதிமன்றங்களாக செயல்பட்டன.

சிவில் வழக்குகளை தீர்ப்பதற்காக ஊரக குடிமையியல் நீதிமன்றத்தையும் (Mofussil Diwani Adalat) குற்றவியல் வழக்குகளைத் தீர்ப்பதற்காக ஊரக குற்றவியல் நீதிமன்றத்தையும் (Mofussil Fauzdari Adalat) வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார். மேற்கண்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டை விசாரிக்க சதர் திவானி அதாலத் (குடிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம்) சதர் நிசாமத் அதாலத் (குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்) ஆகியவை இருந்தன. காரன்வாலிஸ் பிரபு உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி முறையை மறுசீரமைத்தார். காரன்வாலிஸ் ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு, கல்கத்தா, டாக்கா, மூர்ஷிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. வில்லியம் பெண்டிங் கால ஆட்சியில் மேற்கண்ட நான்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் நீக்கப்பட்டன.

கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப்பழமையான உயர் நீதிமன்றமாகும். இது 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே சமயம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பெரிய நீதிமன்றமாகும்.

சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியன அலகாபாத்தில் நிறுவப்பட்டன. மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது. இந்த ஆணையத்தின் அடிப்படையில் 1859ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டம், 1860ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் 1861ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது. இது இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்ல. சில நேர்வுகளில் மேல்முறையீடு இங்கிலாந்தில் உள்ள பிரிவி கவுன்சில் நீதிகுழுவிடம் கொண்டு செல்லப்பட்டது. 1949ஆம் ஆண்டு பிரிவி கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டத்தின் மூலம் பிரிவி கவுன்சில் நீதிவரையறை நீக்கப்பட்டது. இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் தொடங்கப்பட்டது.

Tags : Chapter 7 | Civics | 8th Social Science அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary : Evolution of Indian Judiciary Chapter 7 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை : இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி - அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை