அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நீதித்துறை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary
நீதித்துறை
மற்றும் அரசியலமைப்புச் சட்டம்
இந்தியா,
தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்
உன்னதமான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களில் அதனை உருவாக்கியவர்கள் நீதிக்கு உயரிய
இடத்தை அளித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களுக்கென தனிச் சட்டமோ,
நீதிமன்றமோ இல்லை. சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் இரண்டும் காலனி ஆதிக்கத்திற்கு ஏற்றவாறு
வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் நீதிமன்ற மறு ஆய்வுக்கான
முழு அதிகாரத்துடன் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில்
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முனைந்தனர். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145ன்படி
1966ஆம் ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் IVவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-(யூனியன்)ன்படி
ஒன்றிய நீதித்துறை என்ற பெயரிலும், அத்தியாயம் VI-ன் கீழ் பகுதி VI-ன்படி (மாநிலம்)
துணை நீதிமன்றங்கள் என்ற பெயரிலும் நிறுவ வழிவகை செய்கிறது. சட்டப்பிரிவுகள் 124 முதல்
147 வரையிலான அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு மற்றும்
அதிகார வரம்பினை வகுத்துக் கூறுகிறது.
ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல்
தத்துவ ஞானி மாண்டெஸ்கியூ ஆவார். இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவ ஞானி ஆவார். சட்டமன்றம்,
நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளாக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்ற
அதிகாரப்பகிர்வு கோட்பாட்டில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.