அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நீதித்துறையின் சுதந்திரமான மற்றும் நடுநிலைமை செயல்பாடு | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary
நீதித்துறையின்
சுதந்திரமான மற்றும் நடுநிலைமை செயல்பாடு
அரசியலமைப்புச்
சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவில் நீதித்துறையினைச் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மையுடன்
நிறுவினர். நியாயமான நீதி கிடைப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானதாகும்.
இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் நீதித்துறை குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக
உள்ளது. நம் நாட்டிற்கு எவ்வகையான நீதித்துறை வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசியலமைப்பை
உருவாக்கியவர்கள் நீதித்துறையை வடிவமைத்துள்ளனர். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின்
இவ்வெண்ணத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பின்வருமாறு பதில் அளித்தார்.
"நமது
நீதித்துறை நிர்வாகத்திடமிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் அதே வேளையில் திறமை மிக்கதாகவும்
இருக்க வேண்டும் என்பதில் அவையில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. மேலும் வினா என்னவென்றால்
எப்படி இந்த இரண்டு நோக்கங்களையும் பாதுகாக்கமுடியும் என்பதே ஆகும்"
ஒரு திறன்மிக்க
நீதித்துறை சுதந்திரமாகவும், பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நீதித்துறையின் சுதந்திரம்
என்பது நீதிபதிகள் பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக செயல்படுவதைக் குறிப்பதாகும்.
எடுத்துக்காட்டாக எந்தவொரு வெளிப்புற செல்வாக்கிலிருந்தும் விடுபடுதல்.
பொது நலவழக்கு (Public
Interest Litigation): இது பொதுநலனைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யும் வழக்கு ஆகும். உச்சநீதிமன்றம் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நபர்
தனது வழக்கு தொடர்பான நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் மீறல்,
சமய உரிமைகள், மாசுபாடு, மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொது நல வழக்கை
எவரும் தாக்கல் செய்யலாம். இது தொடர்பான எழுதப்பட்ட புகார் கடிதம் மூலம் இவ்வழக்கினைப்
பதியலாம். பொது நல வழக்கு என்ற கருத்து இந்திய நீதித்துறைக்குப் புதிதான ஒன்றாகும்.