நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்திய உச்சநீதிமன்றம் | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary
இந்திய உச்சநீதிமன்றம்
இது இந்தியாவின்
மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இது புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்
படி உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராகவும், இறுதி மேல்முறையீட்டு
நீதிமன்றமாகவும் உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு
அ.முதன்மை அதிகார வரம்பு: உச்சநீதிமன்றத்தில்
மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
இது மத்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான
பிரச்சினைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஆகியன
முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.
ஆ. மேல் முறையீட்டு அதிகார வரம்பு: உயர்நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை
உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்கு தகுதியுள்ளது என
உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இ. ஆலோசனை அதிகார வரம்பு: குடியரசுத்
தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும்
அதிகாரத்தினை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.
ஈ. நீதிப் பேராணை அதிகார வரம்பு: இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்சநீதிமன்றமும் சட்டப்பிரிவு
226ன் படி உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.
உ. ஆவண நீதிமன்றம்: இது
நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக்
கட்டுப்படுத்தும்.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் உள்ளது. எனினும், இரண்டு அல்லது
மூன்று மாநிலங்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக
பஞ்சாப், ஹரியானா, மற்றும் சண்டிகர் ஆகியவை ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டுள்ளன.
உயர்நீதிமன்றம் தனக்கென முதன்மை அதிகார வரம்பு, மேல் முறையீட்டு அதிகார வரம்பு , நீதிப்
பேராணை வழங்கும் அதிகார வரம்பு ஆகிய அதிகார வரம்புகளைப் பெற்றுள்ளது. மாநிலங்களில்
உயர்நீதிமன்றத்தின் கீழ் துணை நீதிமன்றங்கள் உள்ளன.