நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவின் நீதிமன்றங்கள் அமைப்பு | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary
மாவட்ட நீதிமன்றங்கள்: மாவட்ட
அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.
அமர்வு நீதிமன்றங்கள்: குற்றவியல்
வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சாயத்து நீதிமன்றங்கள்: கிராம
அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளைப் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் கையாளுகிறது.
வருவாய் நீதிமன்றங்கள்: வருவாய்
நீதிமன்றங்கள் நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது. இது நில வருவாயை நிர்ணயம்
செய்து நில உரிமையாளர்களிடமிருந்து அதனை வசூலிக்கிறது.
லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்): விரைவான
நீதியை வழங்க லோக் அதாலத் அமைக்கப்பட்டது. இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே
பிரச்சனையை விசாரித்துத் தீர்வு காண்கிறது. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு சமூக பணியாளர்,
ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்குத் தலைமை வகிக்கும். வழக்குரைஞர்கள்
இல்லாமல் வழக்குகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வழக்குகள் பரஸ்பர ஒப்புதல் மூலம் தீர்த்து
வைக்கப்படுகின்றன. முதல் லோக் அதாலத் 1982ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத்தில்
நடைபெற்றது.
விரைவு நீதிமன்றங்கள்: இந்நீதிமன்றங்கள்
2000ஆம் ஆண்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை
முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டன.
தொலைதூர சட்ட முன்னெடுப்பு (Tele Law
Initiative): கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகள்
வழங்குவதற்காக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்
கூட்டு முயற்சியுடன் இது தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப இயங்கு தளமான தொலைதூர சட்ட இணைய
வழியின் பொதுவான சேவை மையத்தில் (CSC) காணொளிக் கலந்துரையாடல் மூலம் வழக்குரைஞர்களிடமிருந்து
மக்கள் சட்ட ஆலோசனைகளைப் பெறலாம்.
குடும்ப நீதிமன்றங்கள்: குடும்பம்
தொடர்பான சட்ட விவகாரங்களைக் குடும்ப நீதிமன்றம் கையாளுகிறது. இவைகள் உரிமையியல் நீதிமன்றங்கள்
ஆகும். குழந்தையின் பாதுகாப்பு, மணமுறிவு, தத்தெடுப்பு, சிறார் பிரச்சனைகள் ஆகிய குடும்பம்
தொடர்பான பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளுக்காக இந்நீதிமன்றங்கள் பயன்படுகின்றன.
நடமாடும் நீதிமன்றங்கள் (Mobile Court): நடமாடும்
நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களுக்கு இடர்களைத் தீர்க்கும். இது கிராமப்புற மக்களிடையே
நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து, அவர்களின்
வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.
இ - நீ தி மன்ற ங்க ள் ( E - c our t s ) : இ-நீதிமன்றங்கள் திட்டம் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்படும். நீதித்துறை சேவை மையம் இ-நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியாக வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளைக் கட்டணமின்றி கேட்டறியலாம்.
தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA):
இது 1987ஆம் ஆண்டு சட்ட
சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு
இலவச சட்ட உதவிகள் வழங்குவதோடு பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு காண லோக் அதாலத்தை
ஏற்பாடு செய்கிறது.