பணவியல் பொருளியல் - பணத்தின் பரிணாம வளர்ச்சி | 12th Economics : Chapter 5 : Monetary Economics
பணத்தின் பரிணாம வளர்ச்சி (Evaluation of Money)
பண்டமாற்று முறை (Barter System)
பணத்தினை ஒரு பரிமாற்றக் கருவியாக அறிமுகப்படுத்தியது மனிதகுலத்தின் கண்டுபிடிப்புகளில் உயரிய ஒன்றாகும். பணம் அறிமுகமாவதற்கு முன் பண்டங்கள் மற்றும் பணிகளை நேரடியாக பரிமாறிக்கொள்ளும் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்து வந்தது. பிறரிடம் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறும்பொருட்டு, தங்களிடம் உள்ள பொருட்களை அல்லது பணிகளை மாற்றாக வழங்குவது பண்டமாற்று முறையாகும். ஆனால், காலப்போக்கில் பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குபவர்களும் விற்பவர்களும் நிறைய சிக்கல்களை சந்தித்து வந்தனர். பண்டமாற்று முறையின் தோல்விக்குப்பின், தேவைபோக உபரியாக இருந்த பொருட்களை பரிமாறிக்கொள்ள பணம் என்ற இடையீட்டுக் கருவி தேவைப்பட்டது. அந்நிலையில் பொது இடையீட்டுக் கருவிகளாக விலங்கின் தோல், உரோமம், உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள், போன்ற பொருட்கள் பணமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறு பொருட்களை பொருட்களுக்கு மாற்றிக் கொள்ளும் முறையே பண்டமாற்று முறை என அழைக்கப்பட்டது.
பண்டமாற்று முறையின் வரலாறு 6000 BCயில் துவங்கியது.
* மெசபடேமியா பழங்குடியினரால் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது.
* ஃபொனீஷியர்களால் (Phoenicians) கடல் கடந்து பல்வேறு நகரங்களில் இம்முறை பயன்படுத்தப்பட்டது.
* பாபிலோனியர்கள் பொருட்களுக்குப் பொருட்களை மாற்றும் பண்டமாற்று முறையை பயன்படுத்தினர்.
உலோகத் திட்டம் (Metalic Standard)
பண்டமாற்று முறை மற்றும் பண்டப் பணமுறைக்குப் பின் நவீன பண முறைகள் தோன்ற ஆரம்பித்தது. அதில் முதன்மையானது உலோகப் பணத்திட்டம் ஆகும். உலோகத்திட்டத்தில் தங்கம், வெள்ளி போன்ற ஏதாவது ஒரு உலோகம் பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்டது. உலோகத் திட்டத்தின் கீழ் உலோக நாணயங்கள் பணமாக உருவாக்கப்பட்டன. இந்த நாணயங்கள் முழு மதிப்பு பணமாக அல்லது முழு நிறையுடைய சட்டமுறை பணமாக இருந்து வந்தன. அதாவது அந்நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமாக இருந்தன.
பொன் திட்டம் (Gold Standard)
பொன்திட்டத்தின் கீழ் ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு பண அலகின் வாங்குதிறன் அப்பொன் பணத்தின் எடை அளவுக்கு சமமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
வெள்ளித் திட்டம் (Silver Standard)
வெள்ளித் திட்டத்தில் ஒரு பணத்தின் அலகு குறிப்பிட்ட அளவிலான வெள்ளி உலோகத்தின் மதிப்பிற்கு ஈடானதாக இருந்தது. இம்முறையில் ஒரு நாட்டின் அரசு அதன் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளியாக மாற்றிக்கொள்ளும் அனுமதியினை வழங்கியிருந்தது.
காகிதப் பணத் திட்டம் (Currency Standard)
காகிதப் பணத்திட்டம் என்பது நாட்டின் கருவூலமோ, மைய வங்கியோ அல்லது இரண்டுமோ வரையறையற்ற சட்டமுறை பணமாக காகித பணத்தினை புழக்கத்திற்கு வழங்கும் ஓர் பண முறையாகும். காகித பண முறையில், பணத்திற்கு ஈடான மதிப்பினை உலோகமாக மாற்ற முடியாது. காகிதப்பண மதிப்பு நிர்ணயம் பொன் மற்றும் வெள்ளி போன்ற உலோக மதிப்புகளை சார்ந்து இருப்பதில்லை . காகிதப் பணதிட்டம் நிர்வகிக்கப்படும் காகிதப் பணத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. விலைவாசியை நிலைப்படுத்தும் நோக்கில் புழக்கத்திலுள்ள பண அளவினை நாட்டின் உச்ச நிலை அதிகார அமைப்பான மையவங்கி கட்டுப்படுத்துகிறது. பண மதிப்பிற்கான அரசின் கட்டளையைத் தாங்கி வருவதால் காகிதப் பணத்திட்டம் கட்டளைப் பணத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
நெகிழிப் பணம் (Plastic Money)
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் நெகிழிப் பணமாகும். இது நிதிப் பொருட்களின் வரிசையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தோற்றமாகும். நெகிழிப் பணம் நடைமுறையிலுள்ள காகிதப் பணத்திற்கு ஒரு மாற்றாகும். தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழி அட்டையால் (Plastic Money) உருவாக்கப்பட்டிருப்பதால் இது நெகிழி பணம் என்றழைக்கப்படுகிறது. ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை, முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட அட்டை, வணிக நிறுவன அட்டை (Store Card), அந்நிய செலாவணி அட்டை (Forex Card) மற்றும் சூட்டிகை அட்டை (Smart Card) என்று நெகிழிப் பணம் பல்வேறு வடிவங்களில் வந்துகொண்டிருக்கிறது. பரிவர்த்தனைக்காக ரொக்கப் பணம் கையில்கொண்டு வருவதை தவிர்ப்பதுதான் இவ்வகைப் பணத்தின் நோக்கம் ஆகும்.
மெய்நிகர் பணம் (Crypto Currency)
மைய வங்கியைச் சாராமல் பண பெருக்கத்தை சீர் செய்தல் மற்றும் நிதி மாற்றத்தை சரிபார்த்தல் போன்ற சுதந்திரம் கொண்ட டிஜிட்டல் நாணயங்கள் மெய்நிகர் பணமாகும்.
பிட்காயின் (Bitcoin) போன்ற பரவலாக்கப்பட்ட பணம் தனிநபர் சொத்துக்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் கையகப்படுத்துதலுக்குள்ளும் உட்படாமல் இருக்க ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றது.