பணவியல் பொருளியல் - பண அளிப்பு | 12th Economics : Chapter 5 : Monetary Economics
பண அளிப்பு
ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பண அளவே பணஅளிப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பாகும். வட்டி விகிதம், விலைவாசி போன்றவற்றை நிர்ணயிப்பதில் பணஅளிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது. குறிப்பிட்ட காலத்தில் பண அளிப்பு நிலைக் (stock) கருத்தாகவும் ஒரு கால இடைவெளியில் ஓட்டக் (flow) கருத்தாகவும் உள்ளது.
பண அளிப்பின் பொருள்
இந்தியாவில் காகிதப் பணங்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவாலும் நாணயங்கள் மத்திய அரசின் நிதித்துறையாலும் வெளியிடப்படுகின்றது. இது தவிர பொது மக்களால் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறுவிதகணக்குகளில் உள்ள இருப்புத் தொகைகளும் பணமாக கருதப்படுகின்றது. காகிதபணங்கள் அதிகாரம் பெற்ற சட்ட பூர்வமான செலாவணியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் M1, M2, M3 மற்றும் M4 என நான்கு வகையிலான அளவீடுகளை செய்கின்றது:
M1 = காகிதப்பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்
M2 = M1+ அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
M3 = M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்
M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள்.
இதில் M1 மற்றும் M2 குறுகிய பணம் என்றழைக்கப்படுகிறது. மேலும் M3 மற்றும் M4 பரந்தநிலை பணம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கூறிய M1 முதல் M4 வரையிலான வகைப்பாட்டு வரிசையில் பணத்தின் நீர்மைத்தன்மை தொடர்ச்சியாக குறைந்து வருவதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பணக் குறியீடு
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மும்பையில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு. D. உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட புதிய பணக் குறியீடு ஜுலை 15, 2010ம் ஆண்டில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேவநாகரி எழுத்து 'ரா'வும் ரோமன் எழுத்து 'R' இல் செங்குத்துக்கோடு இல்லாமலும் உள்ள வடிவமைப்பாகும். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப்பின் இந்தியா தனிப் பணக் குறியீடு கொண்ட நாடாக விளங்குகின்றது.
பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள்
1. ரொக்க வைப்பு விகிதம் (Cash Deposit Ratio - CDR). இது பொது மக்கள் கையில் வைத்திருக்கும் பணம் வங்கி வைப்புக்களில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிக்கும்.
2. ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (Reserve Deposit Ratio - RDR). "வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு/மொத்த வைப்புகள்" என்ற விகிதம்.
3. ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio - CRR). வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மையவங்கியில் வைக்க வேண்டிய அளவு வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புக்கள்" என்ற விகிதம்.
4. சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio - SLR). “வணிக வங்கிகளில் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பு மற்றும் கால வைப்புகள்" என்ற விகிதம்.