பணவியல் பொருளியல் - பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம் | 12th Economics : Chapter 5 : Monetary Economics
பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம்
பணவாட்டம் (Deflation)
விலைவாசி குறைதல், குறைந்த பண அளிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியன பணவாட்டத்தின் முக்கிய இயல்புகள் ஆகும். பணவாட்டத்தின் போது விலைவாசி குறைதல் என்பது நுகர்வோருக்கு விருமபத்தகுந்த ஒன்றாக இருந்தாலும், அக்குறைவு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் குறைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது. முழுவேலைவாய்ப்புள்ள நிலையில் விலைவாசி குறைந்தால் அது வருமானம் மற்றும் வேலைவாய்ப்பில் விரும்பத்தகாக விளைவினை ஏற்படுத்தும்.
மீள்பணவீக்கம் (Disinflation)
வேலைவாய்ப்பினை பாதிக்காத வகையில் கடன்களை (வங்கிக் கடன், தவணைமுறை கொள்முதல் முறைகளை) கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்கத்தினை குறைத்து வருவது மீள்பணவீக்கம் ஆகும். மீள் பணவீக்கம் என்பதனை பின்வருமாறு வரையறுக்கலாம்: "வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தாமலும், உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தை திருப்பும் செயல்முறையே மீள்பணவீக்கம் ஆகும்".
தேக்கவீக்கம் (Stagflation)
தேக்கவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியில் தேக்கநிலையும், வேலைவாய்ப்பின்மையும், அதிக அளவிலான பணவீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை ஆகும்.