பொருளாதாரம் - பணவியல் பொருளியல் | 12th Economics : Chapter 5 : Monetary Economics
பணவியல் பொருளியல்
பண வீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு.
- மில்டன் பிரெடுமேன்.
புரிதலின் நோக்கங்கள்
1. பணத்தின் பரிமாணவளர்ச்சி, வகைகள், பணிகள், பணவீக்கத்தின் வகைகள், காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை புரிந்து கொள்ளல்.
2. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களைத் தெரிந்து கொள்ளல்.
அறிமுகம்
பொருளியலின் ஒரு பகுதியாக பணவியல் பொருளியல் பாடம் அமைந்துள்ளது. இதில் பணம், அவற்றின் பணிகளான பரிவர்த்தனை, மதிப்புகளின் இருப்பு வைத்தல், மதிப்பீட்டு அலகு ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி தருகின்றது. மேலும், இது பணம் மற்றும் பணத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களை உள்ளடக்கிய பண அமைப்பு முறையின் செயல் விளைவுகளையும் ஆராய்கிறது.
பணம்
1. பொருள்
பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திரும்பச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவியே பணம் ஆகும். பொது இடையீட்டுக் கருவி என்பது மேற்கண்ட பரிமாணங்களில் அனைவராலும் தயக்கமின்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று ஆகும். உலகநாடுகளில் அண்மைக்காலமாக கடனின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. காசோலைகள், மாற்றுச் சீட்டுகள் போன்ற கடன்கருவிகள் அதற்காக பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இருந்தபோதிலும், பணமே அனைத்து கடன்களுக்கான அடிப்படை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
2. இலக்கணங்கள்
பணத்திற்கு பல பொருளியல் அறிஞர்கள் இலக்கணம் வகுத்துள்ளனர் அவைகளில் வாக்கர் மற்றும் கிரௌதர் ஆகிய இரு அறிஞர்களின் இலக்கணம் கீழே தரப்பட்டுள்ளது.
“பணம் எதைச் செய்கிறதோ, அதுவே பணம்" ("Money is what money does")
- வாக்கர்.
“பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக்கருவியாகவும், மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்"
- கிரௌதர்.