Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுதல்
   Posted On :  03.04.2022 01:46 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்

தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுதல்

1802-ஆம் ஆண்டு வெல்லெஸ்ஸி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார்.

தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுதல்


1802-ஆம் ஆண்டு வெல்லெஸ்ஸி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார். 18ஆம் நூற்றாண்டு இரண்டாவது பகுதி வரை தென்னிந்தியாவை பல்வேறு சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். பிரிட்டிஷாரின் தென்னிந்தியப் படையெடுப்பின் விளைவாக இவைகள் ஒன்றிணைக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் ஒரு நிர்வாக அமைப்பாக சென்னை மாகாணம் இருந்தது.

இந்த நிர்வாக அமைப்பு இன்றைய தமிழகம், ஆந்திர பிரதேசம், ஒரிசாவில் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது. விடுதலைக்கு பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியது. நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பு நடவடிக்கைக்கு பின்பு தமிழர்களுக்கான தனி மாநிலமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இதன் பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


மொழி அடிப்படை தேசியவாதம் உருவாக்கம்

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேசிய உணர்வு வளர்ந்து வரும் போதே நாட்டின் பல பகுதிகளில், மாநில மொழிகள் பத்திரிகைகள் மற்றும் வட்டார அடிப்படையிலான அரசியல் இயக்கங்கள் மூலம் வட்டார விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு உருவாக்கிய 'தேசியம் என்று கருதுகோள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. இந்தி மொழிக்கு முன்னுரிமை வழங்கியது முக்கியப் பிரச்சனையானது 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் தமிழ்மொழி துணை தேசியவாதம் வளர்வதற்கு இது காரணமானது. காங்கிரசின் சாதிய கண்ணோட்டம் காரணமாக சாதிப்பிரிவினை, மொழிவாரி தேசியவாதம், வர்க்க போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய, பிராமண அல்லாதோர் இயக்கம் தொடங்கியது.


டி.மாதவன், தியாகராயர் மற்றும் பல பிராமணரல்லாதோர் தலைவர்கள் தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பினை உருவாக்கினர். பிற்காலத்தில் இவ்வியக்கம் "நீதிக்கட்சி" என்ற பெயரில் புகழ் பெற்றது. 1920-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக் கட்சி போட்டியிட்டு வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. 1920 முதல் 1937 வரை நடைபெற்ற 5 தேர்தல்களில் நான்கு முறை வென்று அமைச்சரவை அமைத்தது. பின்பு 1937 தேர்தலில் காங்கிரசு கட்சியிடம் தோல்வியுற்றது. பிறகு பெரியார் ஈ.வே.ராமசாமி தலைமையில் சுய மரியாதை இயக்கமாக மாறியது. இந்த இயக்கம் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் அரசியல் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவில் தமிழ் தேசியவாதம் வளர்வதற்கு இவ்வியக்கம் காரணமானது. 


திராவிட நாடு சிந்தனை

ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் காங்கிரசு கட்சி தமிழகத்தில் தன்னை பலப்படுத்தியது. 1937-ஆம் ஆண்டு சென்னை சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் இரண்டு அரசு கொள்கைகளை உருவாக்கினார். முதலாவதாக தீண்டாமை ஒழிப்பு, இரண்டாவது இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிப்பது. பள்ளிகளில் இந்தி கட்டாய மொழிப்பாடமாக்கப்பட்டது. இது பிராமணரல்லாத தமிழர் திராவிடர்களின் சுயமரியாதையை இழிவுபடுத்தியதாகக் கருதப்பட்டது. தந்தை பெரியார் மற்றும் பல சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பு போரட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினர்.



தமிழறிஞர்களான மறைமலை அடிகள், திரு.வி.கல்யாண சுந்தரம் மற்றும் பலர் இந்தி மொழிக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈ.வே.ரா பெரியார் இப்போராட்டத்துக்கு தனது மனப்பூர்வமான ஆதரவினை நல்கினார். "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தினை எழுப்பும் அளவுக்கு இப்போராட்டத்தை ஆதரித்தார். 1939-ஆம் ஆண்டு "திராவிட நாடு" மாநாட்டினை நடத்தி "திராவிட நாடு" கோரிக்கையை முன்வைத்தார்.


காமராஜர் மற்றும் இராஜாஜி

தமிழர், தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளர் ஆகியோரை உள்ளடக்கிய திராவிடநாடு என்கிற தனி நாடு கோரிக்கை இயக்கம் பிராமணரல்லாதோர் மத்தியில் வளரத் தொடங்கியது. 1944-ஆம் ஆண்டு ஈ.வே.ராமசாமி, நீதிக் கட்சியினை திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறை வேற்றினார். தமிழர் வாழ்வினை மேம்படுத்துவதற்காக இதைச் செய்வதாகக் கூறினார். பொதுமக்கள் பெரும் அளவில் திரண்டது மற்றும் தொண்டர்களின் போர்க்குணம் இரண்டுக்குமாக சேலம் மாநாடு புகழப்பட்டது.

திராவிட நாடு என்பது, சுய ஆட்சியும் அதிக அதிகாரங்களும், சுதந்திர இறையாண்மை உரிமையும் கொண்ட, மொழி அடிப்படையில் நான்கு அலகுகளை மாநில உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் கொண்ட கூட்டாட்சி குடியரசாக திராவிட நாடாகத் திகழும் என்று கூறப்பட்டது. இருந்தபோதிலும் திராவிட நாடு கோரிக்கை தமிழ் மொழி பேசுவோர் அல்லாத மக்களின் ஆதரவினைப் பெறவில்லை .


தட்சிண பிரதேசம் எனும் மாநிலக்கொள்கை

திராவிட கருத்தாக்கத்துக்கு எதிர்நிலையில் இருந்த தென்னந்தியாவைக் களமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் நிலைக்கருத்தினை இராஜாஜி உருவாக்கினார். தட்சிண பிரதேசம் என்பது அதன் பெயர். இது தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கியதாகும். சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்ற தனது சீடர்கள் மூலம் இக்கருத்தினைப் பரப்பினார். ராஜாஜியின் இந்த அரசியல் கருத்தினை பெரும்பாலான தென்னிந்திய அரசியல் கட்சியினர் எதிர்த்தனர்.


புரட்சிகர சோசலிச கட்சியை சார்ந்த ஸ்ரீகண்டன், கொச்சின் கம்யூனிஸ்ட் கட்சியை அச்சுதமேனன், திருவிதாங்கூர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஏ.கே.கோபாலன் ஆகியோர் "தட்சிண பிரதேச" கோரிக்கையை கடுமையாக எதிர்த்தனர். விடுதலை பத்திரிகையில் பெரியார் இது குறித்து தலையங்கம் எழுதினார். அனைத்து தமிழர்களும் தட்சிண பிரதேச அமைப்பை எதிர்த்து முதலமைச்சருக்கு தந்தி அனுப்புங்கள் என்று அறைகூவல் விடுத்தார். இதற்கிடையே கர்நாடகாவும் எதிர்த்தது. குறிப்பாக கர்நாடகா மக்கள் கட்சியை சார்ந்த சர்தார் சரனா கவுடா இதனை எதிர்த்தார். இருந்தபோதிலும் 1956-ல் அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இராஜாஜியும் அவரது ஆதரவாளர்களும் "தட்சிண பிரதேசம்" குறித்து பேசினர். ஆனால் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அந்த மாநாட்டிலேயே இக்கருத்தினை கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டிலும் தாம் கலந்து கொண்ட அனைத்து பொதுக் கூட்டங்களிலும் தட்சிண பிரதேச கருத்தினை எதிர்த்து முழங்கினார். இது தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. இக்கருத்திற்கு எதிராக போராடவும் தயாரானார். மக்களும் தட்சின பிரதேசம் உருவாவதற்கு எதிராகப் போராடத் தயாராகினர்.


விடுதலைக்கு பின்பு மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு

விடுதலைக்கு முன்பே பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கைகள் எழுந்தன. விடுதலைக்கு பின்பு முதல் பத்தாண்டுகளில் (1947-1956) தேச கட்டமைப்பு குறித்து இரண்டு விதமான கொள்கை வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று அலுவல் மொழி பற்றியது. மற்றொன்று மாநிலங்கள் மறு சீரமைப்பு பற்றியது. அதாவது கூட்டாட்சி மறு கட்டமைப்பு. தேச கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சியில் மொழி அடைப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பு செய்வது விடுதலைக்கு பின் முதல் பணியாக ஆனது. இருநூறு ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில், 1947-க்கு முன்பு மாகாணங்களில் எல்லைகள் சரிவர நிர்ணயிக்கவில்லை . மொழி மற்றும் பண்பாட்டுக்குக் கவனம் செலுத்தப்படாததால் மாகாணங்கள் பலமொழிகள் பேசக் கூடியதாகவும், பல பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இருந்தன.

மொழி என்பது மக்களின் பண்பாடு மரபுகள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது. மட்டுமல்லாமல் பெருமளவிலான கல்வி வளர்ச்சி மற்றும் அதிகளவிலான எழுத்தறிவித்தல் தாய்மொழி கல்வி மூலம் மட்டுமே நிகழ்ந்தன. அதிக மக்கள் பேசும் மொழி அடிப்படையில் மாநிலம் அமைக்கப்பட்டு, அரசியல் மற்றும் ஆட்சித்துறை அல்லது நீதித்துறை செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்போது மட்டுமே மக்களாட்சி உண்மையிலேயே அடித்தட்டு மக்களுக்கானதாக இருக்கும்.


தமிழ்நாடு மாநிலம் உருவாக்கம்

தமிழ்நாடு மாநிலம் அமைக்கப்பட்டது முக்கியமாக அப்போதைய அரசியல் நிகழ்ச்சி போக்கும் மொழிவழி அடிப்படையில் அமைந்த மறுசீரமைப்பும் ஆகும். மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனது இறுதி அறிக்கையை 1955ஆம் ஆண்டு சமர்பித்தது. அதில் சென்னை , மைசூர் மற்றும் கேரளா மாநிலங்கள் அமைய பரிந்துரை செய்தது. புதிய சென்னை மாநிலம் நவம்பர் 1, 1956-ல் உருவாக்கப்பட்டது.

ஆனால் மறு சீரமைப்பு ஆணையம் இதை ஏற்கவில்லை . பொதுவாக, ஒரு பகுதி வட்டத்தில் எந்த மொழி பேசுபவர்கள் அதிக விழுக்காட்டில் வாழ்கிறார்களோ அந்த மொழி மாநிலத்துடன் அப்பகுதி இணைக்கப்பட வேண்டும் என்பதை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், தேவிகுளம் உள்ளிட்ட நான்கு வட்டங்களைப் பொறுத்து வேறு அளவீட்டினைப் பயன்படுத்தியது. நிலப்பரப்பு காரணம் காட்டி அவை திருவிதாங்கூருடனே நீடித்தல் என அறிவித்தது. ஆனால் திருவிதாங்கூர் பகுதியில் தமிழ்மொழி பேசுவோர் சதவீத அடிப்படையில் நான்கு வட்டங்களான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு சென்னை மாநிலத்தோடு சேர்க்க வேண்டுமென கோரினர். அதே அளவீடு செங்கோட்டை வட்டம் சென்னை மாநிலத்தில் அமைய கோரப்பட்டது. அதிக தமிழ் மொழி பேசும் மக்களிருந்தும் அந்தப் பகுதி சட்டமன்ற பிரதிநிதிகள் தமிழர்களாக இருந்தபோதிலும் புவியியல் காரணங்களுக்காக திருவிதாங்கூர் பகுதிகள் கொச்சின் மாநிலத்தோடு இணைக்கப்பட்டு விட்டன.



தமிழ்நாடு என பெயர் மாற்றப் போராட்டம்

தமிழர்களுக்கென தனிமாநிலம் அமைந்த பிறகும் அவர்கள் முழுவதுமாக திருப்தி அடையவில்லை . அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு சென்னை மாநிலம் என்றிருக்கும் பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற விரும்பினர். இந்த பெயர் மாற்றத்திற்கான போராட்டம் பத்தாண்டுகளாக நடைபெற்றது. மாநில மறுசீரமைப்பு ஆணையம் இந்த பெயர் மாற்றத்திற்கு பரிந்துரைக்கவில்லை. ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் முற்றுகை போராட்டங்கள் சென்னை மாநிலத்தில் நடத்தப்பட்டன. மகாத்மா காந்தியின் சீடரும், சுதந்திர போராட்ட வீரருமான விருதுநகர் சங்கரலிங்கனார் இந்த பெயர் மாற்றக் கோரிக்கைக்காக சாகும் வரை உண்ணா நோன்பினை ஜூலை 27, 1956 அன்று ஆரம்பித்தார் அக்டோபர் 13, 1956 அன்று 76வது நாள் காலமானார். சங்கரலிங்கனாரின் தியாகம் சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும் எழுச்சியை உருவாக்கியது.

கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வெளிப்படையாக இந்த எழுச்சி இயக்கங்களில் பங்கு பெற்றனர். இது சென்னை மாநில அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரசு கட்சி மக்களிடம் செல்வாக்கினை இழந்தது. இறுதியில் 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது. திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.

செயல்பாடு 

தமிழ்நாடு உருவாக்கத்திற்காக தமிழ்நாட்டின் உள்பகுதியில் நடந்த பல்வேறு இயக்கங்களை ஆராய்க. பாடத்தில் குறிப்பிட்டதை தவிர, நடந்தேறிய வேறு பல எதிர்ப்பு இயக்கங்கள், ஊர்வலங்கள் யாவை?


பன்முக கலாச்சாரம், வேற்றுமை மற்றும் தேசக் கட்டமைப்பு செயல்பாடுகள்

புதிய இந்திய தேசம், முதல் சுதந்திரப் போருக்கு பிறகான காலனி ஆட்சியில் எழுந்த தேசிய எழுச்சி இயக்கத்தின் மூலம் உருவாகியது. இந்த தேசிய இயக்கமானது கடந்து வந்த பாதைகளின் ஊக்கத்தினாலும், சுதந்திரம், மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி கருத்துக்களின் அடிப்படையிலும் அமைந்தது. மன்னராட்சி காலமும், மத ஆட்சியும் மறைந்துவிட்டது. சுதந்திரம், மக்களாட்சி. மக்களின் விருப்பம், உரிமைகள், அவர்களின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்கள் மற்றும் அவர்களின் பொருளாதார மேம்பாடு ஆகியன தேச கட்டமைப்புக்கு அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டன. மாபெரும் தேச கட்டமைப்பாளர்களான மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் மதவாத கலாச்சார தேசியவாதம் (இந்து தேசியவாதம் அல்லது முஸ்லிம் தேசியவாதம் இரு நாடுகள் கொள்கை) இரண்டுக்கும் எதிராக இருந்தனர்.

பன்மைச் சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டனர். ஆகவே அவர்கள் மக்களாட்சி, தாராளவாத கூட்டாட்சி இந்தியாவிற்காக வாதிட்டனர். ஆனால் பல அறிஞர்கள், இந்தியாவில் மாநிலங்களுக்கு போதிய நிதி மற்றும் அரசியல் அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். அதிகார குவியல், ஒரே தேசிய அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டு ஆங்கிலத்தை நீக்கியது, மாநிலங்களின் கலாச்சார மற்றும் மொழி அடையாளங்களை சிதைப்பதாக அமைந்தது. ஜவஹர்லால் நேரு இந்த ஆபத்தை உணர்ந்த காரணத்தினால் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகின்ற வரை இந்தி திணிப்பு இருக்காது. அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியினை வழங்கினார்.


12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building : Formation of Tamil Nadu State in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள் : தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுதல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்