தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் - தேச கட்டமைப்பில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் | 12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building
தேச கட்டமைப்பில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள்
தேச கட்டமைப்பிற்கான சவால்களில் தேசத்திற்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் ஆராயவேண்டும்.
செயல்பாடு:டி-சார்ட் (பட விளக்கம்)
டி-சார்ட் என்பது ஒருவித பட விளக்கம் தருகின்ற அமைப்பு. கீழ்க்கண்ட பத்தியினை படித்து அதில் உள்ள சாதக-பாதக அம்சங்கள், நன்மை-தீமைகள், தரவுகள், கருத்துகள் மேலும் பல பற்றி கூறுக.
நன்றி தி இந்து நாளிதழ் 19.02.2014
ஆந்திரபிரதேசம் இரண்டு மாநிலங்களாக, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஜீன் 2, 2014 அன்று பிரிக்கப்பட்டது. இதன் மூலம் பல பத்தாண்டு கால கோரிக்கை நிறைவடைந்தது.
❖ தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது குறித்து சாதக-பாதக அம்சங்களை மதிப்பிடுக.
நன்மைகள்
தீமைகள்
செயல்பாடு: குழு விவாதம்
தலைப்பு: தகவல் பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை ஆகியன சட்டமாக வந்த பிறகு, பொது சுகாதார-உடல் நல பாதுகாப்பிற்கான உள் கட்டுமானத்தில் உள்ள பின் தங்கிய நிலை உயர, உடல் நல பாதுகாப்பு உரிமை சட்டம் இயற்றப்படுவதற்கான நேரம் வந்துள்ளது என்று எண்ணுகின்றீர்களா? விவாதிக்கவும்.
அரசு
நிலப்பரப்பு, மக்கள், அரசாங்கம் மற்றும் இறையாண்மை ஆகிய நான்கு அலகுகளும் இருக்கும் போது அரசு என்பது உருவாகும். அதில் தேசிய உணர்வோ அல்லது நாம் அனைவரும் ஒருவரே என்ற உணர்வோ இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அது அரசு என்றழைக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரே என்ற உணர்வு அவர்களுக்கிடையே நிலவும் போது மற்ற வேறுபாடுகள் அனைத்தும் ஒருமைப்பாட்டிற்கு கீழானது என்றாகிவிடும். பொது நலமே மேலானது என்ற நிலை உருவாகும்.
தேசம்
தேசம் என்ற பொருள்படும் "Nation" என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். அனைவரும் ஒரு ரத்த பந்தம் உடையவர் என்ற பொருளில் இந்த கருத்துரு உருவாகியது. ஆகவே "Nationen" என்ற லத்தீன் சொல் "இனம்" என்ற பொருளில் தேசத்தை குறிப்பிட்டது. மக்களிடையே நிலவும் ஒற்றுமை என்பதனை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பழமை கருத்துப்படி ஒரு தேசம் அரசாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதாகும்.
செயல்பாடு
தலைப்பு: இந்தியாவில் தேசம் என்ற கருத்துரு உருவாகுவதற்கு கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தேசியம் என்ற கருத்துருவை வரையறுப்பது சுலபம் அல்ல. தனிப்பட்ட ஒரு காரணியை வைத்து ஆராய முடியாது. முக்கியமாக ஒற்றுமை உணர்வு, பலதரப்பட்ட செயல்களின் முடிவு; இனம் மற்றும் மொழிக் குழுமம், பொது அரசியல் விருப்பம் எல்லாவற்றிற்கும் மேலாக வரலாற்று வளர்ச்சி ஆகியன தேசியம் அமைவதற்கு காரணமாகின்றன. தேசமானது குறிப்பாக பொருளியல் வாழ்வு, மொழி மற்றும் நிலப்பரப்பு என பல அலகுகள் ஒருங்கே அமைக்கப்பட்டு தேசம் உருவாகியது என்று எர்ன்ஸ்ட் ரெனான் வாதிக்கிறார். இவரின் கருத்துப்படி "தேசம்" என்பது ஒரு ஆன்மா அது ஒரு ஆன்மீக கோட்பாடு - அதில் இரண்டு விதமான அம்சங்கள் அடங்கி உள்ளது. ஒன்று கடந்த கால அம்சம்; மற்றொன்று நிகழ்கால அம்சம் என்று விளக்கம் கூறுகிறார். ஒன்று கடந்த கால வளமிக்க மரபுகளின் நினைவுகள் மற்றொன்று நிகழ்காலத்திய நடப்புகள். கூடி வாழ வேண்டும் என்ற விருப்பம், பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற எண்ணம் ஆகியன தேசிய உணர்வு அமைவதற்கு உள்ள பொது பங்களிப்பாகும்.
வழிவகை
உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் பிரச்சனை அல்ல மாறாக வேறுபாடுகளை களைவதும் ஆகும்.
நமது மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகிய அடிப்படையில் எந்தவித சமரசமும் கொள்ளாமல், திட்டமிட்ட மற்றும் கலப்பு பொருளாதாரம் மூலம் இந்தியாவை ஒரு சுயசார்பு நவீன நாடாக உருவாக்குவதை ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுத்தார். ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் ஏராளமான நீர்பாசன திட்டங்கள், அடிப்படை தொழில்களை நிறுவினார். விரைவான மின்மயமாக்கல் மற்றும் உள்கட்டுமான வசதிகளை விரிவுப்படுத்துதல். மலேரியா போன்ற நோய்களை ஒழித்தல், உணவு உற்பத்தியில் சுய-தேவையை பூர்த்தி செய்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையை அடைதல் என்று பலவகை திட்டங்களை நிறைவேற்றினார்.
60-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகியது. பல அரசியல் பிரச்சினைகள் எழுந்தன. பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான போர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதித்தது. இந்திரா காந்தி மேற்கொண்ட வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட நடவடிக்கை, ராஜீவ் காந்தி செய்த மின்னணுவியல் புரட்சி ஆகியன இந்தியாவில் நல்விளைவுகளை ஏற்படுத்தின. 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. எனவே தா.த.உ (LPG) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு இந்தியாவின் கதவு திறக்கப்பட்டது.
1953-ஆம் ஆண்டு எவரெஸ்ட் பயணம் வெற்றி பெற்றவுடன் தேசியவாதம் குறித்து முதலமைச்சர்களுக்கு நேரு எழுதிய கடிதம்.
"எவரெஸ்ட் உச்சியை அடைந்தது மாபெரும் சாதனை ஆகும். அது குறித்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். இங்கே சில மனிதர்கள் அற்பமான, குறுகிய தேசியவாத கண்ணோட்டத்தினை வெளிப்படுத்துகின்றனர்.
எவரெஸ்டை முதலில் அடைந்த டென்சிங் இந்தியரா அல்லது நேபாளியா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. மற்றவர் உதவி இன்றி எதையும் செய்து முடிக்க முடியாது.
உண்மையில் இருவரும் இணைந்தே இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே பெறப்பட்ட அனுபவங்கள், உழைப்பு மற்றும் பயண தியாகங்கள் ஆகியன இவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன.
மாபெரும் மனித சாதனைகள் யாவும் எண்ணிலடங்கா மக்களின் கடுமையான தொடர் முயற்சியின் விளைவே ஆகும். ஒரு மனிதனின் கடைசி படிக்கட்டு மற்றொருவரின் தொடக்கமாகும் என்பதனை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறு விவாதிப்பது இந்த விஷயங்கள் குறுகிய மற்றும் கண்டனத்திற்குரிய தேசியவாதம் ஆகும். இது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்காது என்பதனை உணர வேண்டும். மேலும் அது மக்களை குறுகிய மனப்பான்மையோடு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும்.
1990-களின் மத்தியில் வேளாண்மை துறையில் பின்தங்கிய நிலை உருவாகியது. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.ஏற்றுமதி தொடர்பானவிவசாயம் கடுமையாக பாதித்தது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்தப் பருத்தி விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைத்துறை வளர்ச்சிவீதம் 1996-97 முதல் 2004-05 வரை 1.65 விழுக்காடு அதிகரித்தது. இந்தியாவில் இரண்டாவது விவசாய நெருக்கடி உருவாக இதுவே காரணம் ஆகும். (முதல் விவசாய நெருக்கடி 1960-களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது) பணக்கார மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான மானியம், இலவச மின்சாரம், ஆதார விலை நிர்ணயம், இலவச பாசனம் மற்றும் இலவச உரம் ஆகியனவற்றுக்கான மானியம் குறைக்கப்படவில்லை, ஆனால் இத்துறையில் அரசு முதலீடு என்பது குறைக்கப்பட்டது.
2008-09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அமெரிக்க மதிப்பில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் 80 சதவிதம் சிறு விவசாயிகளால் விவரசாயக் கடன்களைப் பெற முடியவில்லை . 60 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் தரிசாகப் போடப்பட்டதால் பஞ்சம் ஏற்பட்டது. அதே சமயத்தில் அது அளவுக்கதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும், விவசாயிகளை மேம்படுத்தும் அரசு உதவி குறைக்கப்பட்டது.
மத்திய அரசாங்கத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு மண்டல் ஆணையம் பரிந்துரை செய்தது.
தொழில்துறை தகராறு சட்டம் இந்தியாவில் பணியாற்றும் மொத்தத் தொழிலாளர்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான தொழிலாளர்களையே பாதுகாத்துள்ளது. 90 விழுக்காடு தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழில்களில் உள்ளனர். பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்து கூட்டு பேரம் மூலம் பலனடைகின்றனர். பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளவும் கூட்டுப் பேரத்தில் ஈடுபடவும் உரிமைக் கொண்டுள்ளனர். ஆனால் தனியார் தொழிற் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கென சங்கம் அமைக்கவும் தங்கள் பிரச்சனைகளுக்காக கூட்டுப்பேரத்தில் ஈடுபடவும் தனியார் நிறுவனங்களின் மேலாண்மை தடுத்து வருகின்றன. இந்திய தொழிற்துறையானது தொடர்ந்து முதலீட்டு நலன் சார்ந்த தொழிற்துறையாக இருப்பதால் அதிக வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இந்நிலையானது முறைசாரா மற்றும் தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
செயல்பாடு
தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி விவாதிக்கவும்.
நிலம் கையகப்படுத்துதல் என்பது முக்கியப் பெரும்பிரச்சனையாக உள்ளது. பழங்குடி மக்களை இடம்பெறச் செய்ய முடியவில்லை. தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் கிடைக்கவில்லை. உள்ளூர் மக்களின் ஒப்புதலில் தான் நிலங்கள் பெற வேண்டிய நிலை உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளைத் தகுந்த இழப்பீடு வழங்குதல் மற்றும் நலத் திட்டங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. தற்போதைய சட்டம், அரசாங்கம் நிலம் கையகப்படுத்துவதற்குப் போதுமான அதிகாரங்களை கொடுத்துள்ளது. சில இடங்களில் வலுக்கட்டாயமாக இதனை செய்யும்போது வன்முறை நிகழ்வு வெடிக்கின்றன.
அரசியல் ரீதியிலான சவால்கள்
1990-ஆண்டுக்கு பின்னர் மாநிலங்களுக்கிடையே சமத்துவமின்மை அதிகரித்தது. மத்திய அரசாங்கத்தின் நிதி மாநிலங்களுக்கு அளிப்பது குறைக்கப்பட்டது. இதனால் மாநில அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களை நாடவேண்டியுள்ளது. சில மாநிலங்கள் அன்னிய முதலீட்டை ஈர்க்க முயற்சிக்கின்றன. சில மாநிலங்களால் இதனைச் செய்ய முடியவில்லை. இதனால் மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உருவானது.
மத்திய-மாநில உறவுகள்
வறுமை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும். மத்திய மாநில உறவுகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், பிராந்திய கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டுள்ளன. இதனால் மத்திய மாநில உறவுகளில் தடங்கல் வந்துள்ளது.
முன்பு மாநிலங்களுக்கிடையேயான குழு அமைந்த அமைப்பில் மாநிலங்கள் தங்களுக்கு அதிக அதிகாரங்கள் கோரின. மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிக நிதி பங்கீட்டினை கேட்டனர். மத்திய மாநில உறவுகளில் நிதி உறவு மட்டுப்படுத்தப்படுகிறது.
பொருளாதார சவால்கள்
இந்தியாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் என்பதை டீட்டன் மற்றும் ட்ரெசி சுட்டிக்காட்டியுள்ளனர். இருந்தாலும், இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்து வருவதாக விவாதிக்கப்படுகிறது. 1993-94 - 1999-2000 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் ஈட்டுவோர் விகிதம் 36 விழுக்காட்டிலிருந்து 26 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக ஒரு மதிப்பீடு குறிப்பிடுகிறது. அதாவது இன்னமும் 270 மில்லியன் இந்தியர்கள் ஏழ்மையில் உள்ளதை இது குறிக்கிறது. சீனாவில் 110 மில்லியன் ஏழைகள்தான் உள்ளனர். அடிப்படைக் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மனித மேம்பாடு இன்னமும் நிறைவுறாததாக இருக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் எண்ணிக்கை குறைந்தபோதிலும், உள் இணைக்கும் வளர்ச்சி எனும் செயல்திட்டத்தினை பயன்படுத்தி இன்னும் துரிதமாக வறுமை ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க முடியும்.
உலகமயமாதல்
1990 முதல் தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் (தா.த.உ / LPG) கொள்கைகளுக்கு மாறியதால் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்து நாட்டின் பல பகுதிகளில் சமூக- அரசியல் பதற்றநிலை எழுவதற்கு வழிவகுத்தது. நாட்டு ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு ஆகியனவற்றை உறுதிப்படுத்த இதரபிற்படுத்தப்பட்ட மக்களுடன் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் அவசியம் உருவானது.
சமூக சவால்கள்
இந்த சீர்திருத்த காலத்தின் போது இந்தியா மேற்கொண்ட பொது உடல்நல ஆரோக்கியத்திட்டம் குறித்த அறிக்கை கவலை அளிக்கக்கூடிய சித்திரத்தை வழங்குகிறது. குழந்தை இறப்பு விகிதம் 1980-களில் 30 சதவீதம் இருந்தது 1990-களில் 12.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவின் (80/1000) குழந்தை இறப்பு விகிதம், பங்களாதேஷ் (91/1000) நாட்டைக்காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் 1999-ஆம் ஆண்டு பங்களாதேஷின் (61/1000) குழந்தை இறப்பு விகிதத்தை விட இந்தியா (71/1000) பின்னடைந்துள்ளது.
வகுப்புவாதம்
பிரிவினைக் காலத்தில் இருந்தே நாடு வகுப்புவாதத்தைச் சந்தித்து வருகிறது. தீய நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகள், அடிப்படைவாத குழுக்கள், வெறுப்பை உருவாக்கும் வதந்திகளை பல்வேறு சமுதாயத்தினரிடையே பரப்பி வருகின்றனர். இத்தகைய மத வெறுப்பு கட்டுக்கதைகளால் சமூகங்களுக்கு இடையே மோதல்கள் உருவாக்குகின்றன. இதனால் சிறு பான்மையினரே அதிகம் பாதிப்பு அடைவதுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் சொத்துக்களையும் இழக்கின்றனர்.
சாதிய மோதல்கள் சாதிய பாகுபாடுகள் தொடர்ச்சியாக தேசக் கட்டமைப்பிற்கு சவாலாக உள்ளன. தீண்டாமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் அது இன்றும் தொடர்கின்றது. கலப்பு திருமணம் செய்து கொள்வோர் ஆணவப் படுகொலைகளுக்கு உள்ளாகின்றனர்.
நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக நடத்தப்படுவதில்லை . அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ளது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளன. வளர்ச்சி என்பது அய்யத்துக்கு இடமில்லாமல் வறுமையைக் குறைத்து வாழ்க்கை நிலையை மேம்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும், பலன்கள் ஏழை மக்களிடம் சென்றடைவதைகாட்டிலும் நடுத்தர மற்றும் பணக்கார பகுதி மக்களிடம் தான் அதிகமாகச் சென்றடைகின்றன. தகவல் தொடர்புத் துறை, வங்கிகள், பங்கு சந்தை, விமான போக்குவரத்து, வணிகம் மற்றும் தொழில் கொள்கை ஆகிய துறைகளில் செய்யப்படுகின்ற சீர்திருத்தங்கள், அளவுக்கு வேளாண்மை மற்றும் மனித மேம்பாட்டிற்குச் செல்லவில்லை. மூலவளங்கள் திரட்சியும், அறிவுப்பெருக்கமும் கொண்டு இந்திய தொழில்மயமாக்கல் தொடரும் அதே நிலையில் 250 மில்லியன் மக்கள் நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் கீழ் வருமானம் உள்ள நிலையில் வாழ்கின்றனர்.
இதே நிலையில் தொடருமானால் இந்தியாவில் வறுமை, கல்லாமை, சரிவிகித உணவின்மை ஆகியவற்றை ஒழிப்பதற்கு மிகநீண்ட காலமாகும். மேலும் மனித மேம்பாட்டுக் கூறுகளான கல்வி மற்றும் பொது சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சி மேலும் காலதாமதமாகும்.
மேலே விளக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களே தேச கட்டமைப்பின் பெரும் சவாலாக நீடிக்கின்றன.
செயல்பாடு
வளர்ச்சித் திட்டங்கள் - அரசு மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள் நான்கினைப் பட்டியிலிடுக. அதில் இரண்டு ஊரகப் பகுதிகளுக்கும், இரண்டு நகரப்பகுதிகளுக்கும் பொருந்த வேண்டும்.