Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு

தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் - மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு | 12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building

   Posted On :  03.04.2022 01:23 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு

விடுதலைப் போராட்ட இயக்கத்தின் போது மக்களைத் திரட்டுவதில் மொழி உணர்வு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தது. எனவே விடுதலைக்கு பின்னர் தேசத்தைக் கட்டியமைப்பதிலும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதன் இன்றியமையாமையை உணர்ந்துசெயல்படுத்தப்பட்டது.

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு


விடுதலைக்கு முன்பு

விடுதலைப் போராட்ட இயக்கத்தின் போது மக்களைத் திரட்டுவதில் மொழி உணர்வு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தது. எனவே விடுதலைக்கு பின்னர் தேசத்தைக் கட்டியமைப்பதிலும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதன் இன்றியமையாமையை உணர்ந்துசெயல்படுத்தப்பட்டது. அன்னிபெசன்ட் அம்மையார். தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) தொடங்கிய போதே தென்னிந்தியாவின் பங்கேற்பு அதிகமாக இருந்தது. மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது 1917-ல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது. 1920-களில் மாநிலங்கள் மொழி அடிப்படையில் அமைய திட்டமிடப்பட்டது. நிர்வாகத்திற்கும் அடிப்படைக் கல்விக்கும் உள்ளூர் மொழிகளின் தேவை அப்போதே உணரப்பட்டது.

பல மாநிலத் தலைவர்கள் மொழிவாரி மாநிலங்களை விரும்பினர். குறிப்பாக, அன்றைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு தேச மக்களைக் கொண்ட பகுதிகளை இணைத்து தனி ஆந்திர பிரதேச காங்கிரசு குழு அமைக்க வேண்டுமென்று அப்பகுதி காங்கிரசு தலைவர்கள் கோரினர். மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்ததை கவனத்தில் கொண்டு மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கும் பணிகள் 1927- இல் தொடங்கின. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 1895-இல் ஒடிசா மாநிலத்திலிருந்து பீகார் தனியாகப் பிரிக்கப்படவேண்டும் என்று போராட்டம் எழுந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஒரிசா மாகாணத்திலிருந்து பீகார் பிரிக்கப்பட்டது. ஆகவே விடுதலைக்கு முன்பு 1936-ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் ஒடிசா மாநிலம் அமைக்கப்பட்டது. இதுவே மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலமாகும். லோகமான்ய திலகர், அன்னி பெசன்ட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் மொழி வாரி அடிப்படை மாநிலங்களுக்கு ஆதரவு அளித்தனர்.



விடுதலையின் போது

இந்தியா விடுதலை அடைந்த போது, மொழி அடிப்படையில் மாகாணங்கள் அமைந்தால் மதப்பிரச்சினை போன்று இதுவும் பதற்றத்தை உருவாக்கிவிடுமோ என்று அச்சமுற்றனர். இறுதியில் 1948-ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில், மொழிவாரி மாகாண ஆணையம் (LPC) அமைத்து நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில், மொழிவாரி மாகாண அமைப்புக்கான நடைமுறை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆணையமே "தர்" ஆணையம் என்றழைக்கப்பட்டது. ஆனால் தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலும் நிர்வாக சிக்கல் ஏற்படும் என்பதாலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதை தர் ஆணையம் ஆதரிக்கவில்லை .

ஆனால் இந்த முடிவினை இந்திய மக்கள் ஏற்கவில்லை . குறிப்பாக தனித்த மொழி அடையாளம் உள்ள மாநிலங்கள் இதனை விரும்பவில்லை. இதன் காரணமாக, 1948-ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பட்டாபி சீத்தாராமையா ஆகியோரைக் கொண்ட ஜே.வி.பி (JVP) குழுவினை உருவாக்கி மொழிவழி மாநில அமைப்பு கோரிக்கை குறித்து பரிசீலிக்க உத்தவிட்டார். 


ஜே.வி.பி குழு

தொடக்கத்தில் இக்குழு மொழிவாரி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாவதை பிடிவாதமாக எதிர்த்தது. ஒற்றுமை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை காரணம் காட்டியது. ஆனால் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு இயக்கங்களும் எழுந்து 1960-கள் வரை நீடித்தது. ஆகவே இக்குழு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மொழிவாரி மாநிலங்கள் அமைக்க பரிந்துரைத்து அறிக்கை தயாரித்தது.


முதல் மொழிவாரி மாநிலம் 

சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரிய மாநிலமாக ஆந்திரபிரதேசம், தெலுங்கு பேசும் மக்களின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் அமைக்கச் கோரி பொட்டி ஸ்ரீராமலு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். போராட்டத்தின் 65-வது நாள் உயிர் நீத்தார். இதன் பிறகு போராட்டம் மேலும் தீவிரமானது. தெலுங்கு பேசும் மக்களின் நெருக்கடிக்கு நேரு பணிந்தார். தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஐதராபாத், ஆந்திர பகுதிகளை இணைத்து 1956-இல் ஆந்திர மாநிலமாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார்.


மாநில மறுசீரமைப்பு ஆணையம்

மொழிவாரிமாநிலகோரிக்கைகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெரும் கலவரங்களும், எதிர்ப்பு இயக்கங்களும் நடைபெற்ற காரணத்தினால் பிரதமர் ஜவகர்லால் நேரு , தனி மாநில கோரிக்கைகளை பரிசீலிக்க பசல் அலி தலைவராகவும் ஹெச்.என். குன்ஸ்ரு மற்றும் கே.எம். பணிக்கர் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இக்குழு தனது அறிக்கையை 22.10.1953- அன்று சமர்ப்பித்தது. இக்குழு மொழிவாரி மாநிலம் அமைப்பதற்கு நான்கு அம்சங்களை வரையறுத்தது. இதற்கான பரிந்துரைகள் 1955 செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது.

1. மொழி மற்றும் பண்பாட்டு ஒத்த தன்மை

ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இருப்பின் தனி மாநிலக் கோரிக்கையை நிராகரிக்கலாம். ஏனெனில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும் மாநிலங்கள் உள்ளன. மேலும், பல மாநிலங்களில் ஒரே மொழிப் பேசும் சமூகம் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, பல வடஇந்திய மாநிலங்களில் இந்தி மொழி பேசப்படுகின்றது.

2. நிதி, பொருளாதார மற்றும் நிர்வாக கருதுகோள்கள்

அரசியல் பொருளாதார மற்றும் நிர்வாக செயல்பாடுகள் அனைத்து பகுதி மக்களும் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்திய அரசமைப்பு சட்டம், சம உரிமைகள் மற்றும் அனைவருக்குமான வாய்ப்புகள் என்ற நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறது. மொழி நிர்வாகப் பயன்பாட்டில் உதவிகரமானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இருந்தபோதும் பிற நிர்வாக, நிதி மற்றும் அரசியல் போன்ற அம்சங்களைப் புறக்கணித்து விட்டு மொழியை மட்டுமே ஒருங்கிணைப்பு அம்சமாகக் கொள்ளக்கூடாது.

3. தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பினை வலுப்படுத்தி பராமரித்தல்

மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் குறிப்பிட்ட பிரிவு மீது மட்டும் அனுதாபம் கொள்ளும் நிலை உருவாகும் என்பதையும், நமது தேசிய உணர்வுக்கும், பன்மைத்துவத்துக்கும் எதிரானது என்பதையும் ஒற்றை மொழி பேசும் மாநிலங்கள் புரிந்து கொண்டால் தான் தேசப் பற்றினை ஆழமாக வளர்க்க முடியும்.

4. ஒரே மொழி பேசுபவர்களோ அல்லது பல மொழி பேசும் சமுதாயத்தினரோ குறிப்பிட்ட நிர்வாகத்தின் கீழ் வசித்தாலும் பல்வேறு மொழிகள் பேசும் சமுதாயங்களின் மக்கள் தகவல் தொடர்பு கல்வி மற்றும் கலாச்சார தேவைகளை மேம்படுத்தும் வகையில் மக்கள் நலத் திட்டங்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒட்டு மொத்த நாட்டின் மக்களையும் கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.


மாநில மறுசீரமைப்பு ஆணையம்

இறுதியாக இந்த ஆணையம் 16 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களை மறுசீரமைப்பு செய்ய பரிந்துரைத்தது. மத்திய அரசாங்கம் சிறு மாற்றத்துடன் இதனை ஏற்றுக்கொண்டு, 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது, இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு மத்திய அரசாங்கம் 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் என்ற அளவில் மாநில மறுசீரமைப்பினை நம்பர் 1, 1956 அன்று நடைமுறைப்படுத்தியது.

அந்த மாநிலங்கள் வருமாறு, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீகார், பம்பாய், ஜம்மு காஷ்மீர், கேரளா, மத்திய பிரதேசம், சென்னை , மைசூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம். 6 யூனியன் பிரதேசங்களான, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தில்லி, இமாச்சல பிரதேசம், லட்சத்தீவு - மினிகாய் தீவு - அமிந்திவி தீவுகள், மணிப்பூர் மற்றும் திரிபுரா.


மேலும் உருவான மாநிலங்கள்

1956-க்கு பிறகும் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்ந்தது. குறிப்பாக மொழிவாரி அடிப்படையில் மட்டுமல்லாமல் வேறுபல அம்சங்களைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றம் பரிசீலித்து புதிய மாநிலங்கள் உருவாக்கியது. 1956-க்குப் பின்னர் உருவான மாநிலங்களின் பெயர்கள் பின்வருமாறு

பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் 1960. குஜராத் மாநில உருவாக்கம்.

நாகாலாந்து மாநிலச் சட்டம் 1962 - நாகாலாந்து மாநிலம் அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம் 1966 - அரியானா மாநில உருவாக்கம். * புதிய இமாச்சல பிரதேச மாநிலம் சட்டம் 1970. 

வடகிழக்கு மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1971 - மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்கள் உருவாக்கம். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம். 

சிக்கிம் மாநிலச் சட்டம் 1975. 

அருணாச்சல பிரதேசம் சட்டம் மற்றும் மிசோரம் மாநிலச் சட்டம் 1986. மிசோரம், அருணாசல பிரதேசம் மாநிலங்கள் உருவாக்கம்.

கோவா மாநிலச் சட்டம் 1987. 

மறுசீரமைப்புச் சட்டம், 2000 சத்தீஸ்கர் மாநில உருவாக்கம். 

மறு சீரமைப்பு சட்டம் 2000, உத்தரகாண்ட் மாநில உருவாக்கம். 

பீகார் மறுசீரமைப்புச் சட்டம் 2000, ஜார்கண்ட் மாநில உருவாக்கம். 

ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்புச் சட்டம் 2014, தெலங்கானா மாநில உருவாக்கம்.

புதிய மாநிலங்கள் அமைப்பது இன்றும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. பண்பாடு, சாதி, மதம், மொழி, இனம், குறிப்பிட்ட நில அமைப்பு என்று பல வடிவங்களில் சிக்கல்கள் எழுகின்றன. ஆகவே தனி மாநில கோரிக்கைகள் தனித்த அடையாள வெளிப்பாடாகவும், வளங்கள் பயன்பாடு சார்ந்ததாகவும் உள்ளது.

செயல்பாடு

மொழி அடிப்படையில்லாமல் வேறு காரணங்கள் அடிப்படையிலமைந்த ஒரு குழுவை அமைத்து பல ஆலோசனைகளை வெளிப்படுத்துக. அது எவ்வாறு தேச வளர்ச்சிக்கு பங்களிக்கிறது?


Tags : Challenges of Nation Building | Political Science தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building : Linguistic Reorganisation of the State Challenges of Nation Building | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள் : மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு - தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்