வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கோடுகளோடு விளையாடு | 6th Maths : Term 1 Unit 4 : Geometry
1. கோடுகளோடு விளையாடு
3 கோடுகள் அல்லது 4 கோடுகள் அல்லது 5 கோடுகளைக் கொண்டு என்னென்ன வடிவங்களை உன்னால் வரைய முடியும்? நாம் முன்பே சில வடிவங்களின் பெயர்களை முக்கோணங்கள், செவ்வகங்கள், சதுரங்கள் என அறிந்திருக்கின்றோம்.
மேலே (படம் 4.1) மீன் போன்ற ஒரு வடிவம் உள்ளது.
இதில் 5 கோடுகள் உள்ளன. 4 கோடுகள் அல்லது 3 கோடுகளைக் கொண்டு ஒரு மீனின் வடிவத்தை உன்னால் வரைய முடியுமா? சிந்திக்க!
2. இரண்டு கோடுகள்
இரண்டு கோடுகளை மட்டும் பயன்படுத்தி என்னென்ன வடிவங்களையெல்லாம் உன்னால் வரைய முடியும்? பின்வருமாறு வடிவங்களை இரு கோடுகளைக் கொண்டு பெறலாம் அல்லவா!
இந்த வடிவங்களை எல்லாம் பார்க்கும்போது ஏதாவது கண்டறிய முடிகிறதா ?
3. ஒரே ஒரு கோடு மட்டும்
ஒரே ஒரு கோட்டை மட்டும் கொண்டு என்ன வடிவத்தை வரைய முடியும்? கோடு நேராகவோ, கிடைமட்டமாகவோ, சாய்வாகவோ இருக்கலாம். மேலும், அதை வலப்புறம் சாய்வாகவோ அல்லது இடப்புறம் சாய்வாகவோ வரையலாம். அது நீளமாகவோ குட்டையாகவோ இருக்கலாம்.
இப்போது, பின்வரும் சூழ்நிலையை எடுத்துக்கொள்வோம்
ஒரு கோடு வரையப்பட்டிருந்த தாளை யாழினியிடம் ஆசிரியர் கொடுத்தார். யாழினி குறிப்பு வழங்க, அகிலனை அதுபோன்ற கோட்டினைக் கரும்பலகையில் வரையச் சொன்னார். பிறகு இருவரும் இந்த வரைதலை மாற்றிச் செய்தார்கள். அவர்கள் இரண்டு மற்றும் மூன்று கோடுகளைக் கொண்டு மற்ற வடிவங்களை வரைந்துக் காட்டினர். இவ்வாறாகச் செய்வது எளிதான வழிதானே!
பின்வரும் உரையாடலை உற்று நோக்குக.
ஆசிரியர் : சக்தி, கோடுகளை வரைய எப்படிக் குறிப்பு அளிப்பது என்று உன்னால் கூறமுடியுமா?
சக்தி : ஆம், ஐயா. கோடுகளை மட்டும் தானா? நான் வளைவுகளையும் வட்டங்களையும் கூட வரைய விரும்புகிறேன்.
ஆசிரியர் : சக்தி, நீ விரும்பும் வடிவங்களை எல்லாம் வரை. ஆனால், கோடுகளால் உருவான வடிவங்களை வரைய குறிப்புகள் வழங்குவது கடினமாக உள்ளது. வளைவுகளையும், வட்டங்களையும் வரைவது பற்றிப் பிறகு பார்க்கலாம்.
சக்தி : ஐயா, ஏன் வடிவங்களை வரையறுக்க வேண்டும்? நமக்குத் தேவைப்படும்போது அவற்றை வரைந்து கொள்ளலாமே?
சக்தி கூறுவது சரியா?
கணிதத்தில் ஒவ்வொரு சிந்தனையும், ஆர்வமுடையதாகவும், எல்லையற்றதாகவும் இருக்கும். எண்களை நினைவுப்படுத்துங்கள். 2 இலக்கங்களைக் கூட்டுவதோடு நின்று விடுவதில்லை. எண்கள் முடிவின்றிச் சென்று கொண்டே இருப்பதால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, அந்த எண்களைக் கூட்ட முடியும். 37 இலக்கங்களைக் கொண்ட எண் 0 வில் முடிந்தால் அந்த எண் 5 ஆல் வகுபடும் என்பதை நாம் அறிவோம்.
இது வடிவங்களுக்கும் பொருந்தும். கோடுகள், முக்கோணங்கள், செவ்வகங்கள் எந்த வடிவங்களானாலும் சரி, எவ்வளவு பெரியதானாலும் சரி, சிறியதானாலும் சரி, இவற்றில் நாம் அதிக விருப்பம் கொண்டுள்ளோம். அதனால் அவற்றிற்கு நாம் பெயரிட வேண்டும் என்பது தேவையானதாகும். அவற்றை நாம் வரையறுக்கவும், அவற்றைக் குறித்து அறிந்துகொள்ளவும் வேண்டும்.