Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: பொது

இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: பொது | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil

   Posted On :  21.07.2022 09:56 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

இலக்கணம்: பொது

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : இலக்கணம்: பொது | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

தொழில்நுட்பம்

கற்கண்டு

இலக்கணம் – பொது



இருதிணை

ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.

 

ஐம்பால்

பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.

உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

 

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்

வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்

மகள், அரசி, தலைவி - பெண்பால்

மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்

 

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்

அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.

எ.கா. யானை, புறா, மலை

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.

எ.கா. பசுக்கள், மலைகள்

 

மூவிடம்:

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.


வழு - வழாநிலை - வழுவமைதி

இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்

இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும்.


வழுவமைதி

இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

1. திணை வழுவமைதி

"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2. பால் வழுவமைதி

"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

3. இட வழுவமைதி

மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான் என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.

4. கால வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.

இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.

5. மரபு வழுவமைதி

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும்" - பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

கற்பவை கற்றபின்....

1. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.

ஆ) "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான்.

இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.

ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.

2. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?" என்று சொன்னார். (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)

ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக.)

இ) "இதோ முடித்துவிடுவேன்" என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக.)

ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)

உ) குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக.)


Tags : Chapter 4 | 10th Tamil இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 4 : Naankam Tamil : Grammar: Podhu Chapter 4 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : இலக்கணம்: பொது - இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்