Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: பரிபாடல்

கீரந்தையார் | இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பரிபாடல் | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil

   Posted On :  22.07.2022 04:26 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

கவிதைப்பேழை: பரிபாடல்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : கவிதைப்பேழை: பரிபாடல் - கீரந்தையார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

தொழில்நுட்பம்

கவிதைப் பேழை

பரிபாடல்

- கீரந்தையார்நுழையும்முன்

இலக்கியங்கள் தாம் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு மட்டுமல்லாமல் அக்காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தாங்கி அமைகின்றன. அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்க விதைகளைப் பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்கமுடிகிறது. மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல், துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் துளிர்த்திருக்கும் அறிவியல் கருத்துகள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப்போவதைக் காண்கையில் பெருவியப்பு மேலிடுகிறது. புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை அன்றே காட்டிய பழங்கவிதை வியப்பிலும் வியப்பே!


விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

 

செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் ...

பா. எண். 2:4-12

 

பாடலின் பொருள்

எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்து போலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது. பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது.

 

சொல்லும் பொருளும்

விசும்பு - வானம்

ஊழி - யுகம்

ஊழ் - முறை

தண்பெயல் - குளிர்ந்த மழை

ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

பீடு - சிறப்பு

ஈண்டி - செறிந்து திரண்டு

 

இலக்கணக் குறிப்பு

ஊழ்ஊழ் - அடுக்குத் தொடர்

வளர்வானம் - வினைத்தொகை

செந்தீ - பண்புத்தொகை

வாரா (ஒன்றன்)- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

 

பகுபத உறுப்பிலக்கணம்

கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ

கிளர் - பகுதி

த் - சந்தி

த்(ந்) - ந் ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

 

தெரிந்து தெளிவோம்

இல்நுழைகதிர்

இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.....

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

.............................................................

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" (திருவாசகம் 3 - 1 - 6)

அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

 

நூல் வெளி

பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.

 

கற்பவை கற்றபின்....

1. பரிபாடல் இசைப்பாடல் ஆகும். பாடப்பகுதியின் பாடலை இசையுடன் பாடி மகிழ்க.

2. பரிபாடல் காட்டும் பெருவெடிப்புக் காட்சியைப் படங்களாக வரைந்து பொருத்தமான செய்திகளுடன் வழங்குக.


Tags : by Kiranthaiyar | Chapter 4 | 10th Tamil கீரந்தையார் | இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 4 : Naankam Tamil : Poem: Pari padal by Kiranthaiyar | Chapter 4 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : கவிதைப்பேழை: பரிபாடல் - கீரந்தையார் | இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்