இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil
மொழியை ஆள்வோம்
படித்துச் சுவைக்க.
முகப்புத்தக வலையினிலே
முகந்தெரியா நபரிடையே
இனம்புரியா உறவு முறை
நட்பெனும் சங்கிலிக்குள்
நாடெல்லாம் சங்கமிக்கும்
வாடிக்கை செய்பவரின்
கேளிக்கை கூத்துகளை
வேடிக்கை பார்ப்பதனை
வாழ்க்கையெனக் கொண்ட பலர்
தேடியுமே கிடைக்காத
தேசம் கடந்த உறவுகளை
இணையத்தின் தேடலினால்
நிமிடத்தில் அறியும் சிலர்
பகடிகளின் பகிர்ந்தளிப்பும்
விருப்பத்தின் தெரிவிப்பும்
கருத்துக்களின் பரிமாற்றம்
தினமும் இங்கு இடம்பெறுமே
பலர் அறிந்த பாடல்வரியும்
பகலுணவின் சுவையினையும்
பாட்டி தந்த பரிசினையும்
பறைசாற்றும் வாய்ப்பிதுவே
புகைப்படத்தில் தெரிந்தமுகம்
பார்த்ததுமோர் புன்சிரிப்பு
உரையாடல் செய்கையிலே
அர்த்தமற்ற கலகலப்பு
பரீட்சைக்கு முன்தினமும்
புத்தகத்தைத் திறவாதோர்
பரீட்சையின் நொடிவரைக்கும்
திறந்து வைப்பதிதுவன்றோ
புத்தகத்தின் மத்தியிலே
மயிலிறகை வைத்தவர்கள் -முகப்
புத்தகத்தைத் திறந்தவுடன்
உணர்வுகளை வைப்பதேனோ……
- டெபோரா பர்னாந்து
(இலங்கைத் தமிழ்க் கவிஞர்)
மொழிபெயர்க்க.
Malar : Devi, switch off the lights when you
leave the room.
Devi : Yeah. We have to save electricity.
Malar : Our nation spends a lot of
electricity for lighting up our streets in the night.
Devi : Who knows? In future our country may
launch artificial moons to light our night time sky!
Malar : I have read some other countries are
going to launch these types of illumination satellites near future.
Devi : Superb news! If we launch artificial
moons, they can assist in disaster relief by beaming light on areas that lost
power!
மலர் : தேவி, இந்த அறையை விட்டு வெளியே
செல்லும் போது மின் விளக்குகளை அணைத்து விடு.
தேவி : ஆமாம். நாம் மின்சாரத்தைச் சேமிக்க
வேண்டும்.
மலர் : நம் நாடு தெரு விளக்கினை எறியச் செய்வதற்கு அதிக மின்சாரத்தைச்
செலவு செய்கிறது.
தேவி : யாருக்குத் தெரியும்? நம்நாடு
வருங்காலத்தில் செயற்கை நிலாவை நிறுவி இரவில் வானத்தில் விளக்குகளை எரிய வைக்கலாம்.
மலர் : வருங்காலத்தில் வேறு சில நாடுகள் ஒளியூட்டச் செயற்கைக்
கோள்களை தொடங்கப் போகிறது என்பதை நான் படித்துள்ளேன்.
தேவி : நல்ல செய்தி நாம் செயற்கை நிலவை நிறுவினால் அது பேரழிவு
மற்றும் மின்சாரம் இல்லாத நேரத்தில் ஒளியூட்டி நிவாராண உதவிகளைச் செய்ய வழி வகுக்கிறது.
வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும்.
மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புற செவிமடல் இருக்காது.
காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.
பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக
வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும்,
நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! - அறிவியல் வெளியீடு
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலுட்டிகளில்
உள்ளது போல புறச் செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு.
காது கேட்கும். பறவைகளுக்குப் பார்த்தல்,
கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும், நுகர்தல் உணர்வு இல்லையென்றே
கூறலாம்.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு
தொடர் அமைக்க.
அ) இயற்கை - செயற்கை
இயற்கையுடன் வாழ் செயற்கையுடன் வாழாதே.
ஆ) கொடு - கோடு
மணி கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தேன்.
இ) கொள் - கோள்
கோள்களின் இயக்கம் பற்றி அறிந்து கொள்
ஈ) சிறு - சீறு
சிறு புற்றிலிருந்து வந்த பாம்பு சீறுவதைக் கண்டேன்
உ) தான் - தாம்
தான் செய்யும் தவறு தாம் அறிந்தே செய்யக்கூடாது.
ஊ) விதி - வீதி
ஹரிச்சந்திரனின் தலை விதி அவனை வீதியில்
நிறுத்தியது
பத்தியைப் படித்து பதில் தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள்
கடந்து சென்றன. புவி உருவான
போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப்
புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக
(வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில்,
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
வினாக்கள் :
1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை
எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல்
கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக
நீவீர் கருதுவன யாவை?
விடைகள் :
1. மீண்டும் மீண்டும்.
2. புவி, தொடர்ந்து பெய்த மழையால்
வெள்ளத்தில் மூழ்கியது
3. பெய்த மழை - பெய்மழை
(வினைத்தொகை)
4. அறிவியல் கொள்கை
பருப்பொருள்கள் சிதறும்படியாக வெப்பமும் மழையும் மாறிமாறி வருவதால்
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றுகிறது
5. வெப்பமும், குளிர்ச்சியும் மாறி
மாறி நடைபெறுவதால் உயிர்கள் ஏற்ற சூழலாகும்.
கட்டுரை எழுதுக.
தலைப்பு – ‘விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்’
குறிப்புச் சட்டம்
• முன்னுரை
• பிறப்பு
• கல்வி
• ஆராய்ச்சி நிலையங்கள்
• விண்வெளிப் பயணம்
• விருதுகளும் சிறப்பும்
• முடிவுரை
முன்னுரை
"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்"
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்" என்றான்
பாரதி". ஆணுக்குப் பெண் சரிசமம்" என்ற கருத்தை மெய்பிக்கும் வகையில் விண்வெளியில் கால் பதித்த இந்தியாவின் முதல்
பெண்மணி "கல்பனா சாவ்லா" இவரைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பு :
ஹரியானா மாநிலத்தில் 1961 ஆம் ஆண்டு ஜீலை 1 ஆம் நாள் பனாராஸ்லால் சாவ்லாவுக்கும்
சன்யோகிதா தேவிக்கும் மகளாக கல்பனா சாவ்லா பிறந்தார்.
கல்வி :
கர்னலில் உள்ள அரசு பள்ளியில் ஆரம்பக்கல்வியைத் தொடங்கி, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தித் துறையில்
இளங்கலைப் பட்டமும், டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் விண்வெளிப்
பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986 இல் கொலராடோ
பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், 1988 இல் விண்வெளி
பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
ஆராய்ச்சி நிலையங்கள் :
முதலில் விண்வெளி ஆய்வு மையம் பெங்களூரில் அமைக்கப்பட்து. ஆந்திராவில் ஸ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள விண்வெளி
ஆராய்ச்சிக் கூடமே முதன்மையானது. அடுத்து கேராளாவின் தும்பா ராக்கெட்
தளமும், தமிழகத்தில் நெல்லையில் உள்ள மகேந்திரகிரி திரவத் திட்டமும்
சிறப்பு வாய்ந்தவையாகும். அகமதாபாத்திலும் விண்வெளி ஆய்வு மையம்
உள்ளது.
விண் வெளிப் பயணம் :
கல்பனா சாவ்லா 1995 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த இவர் கொலம்பிய விண்வெளி
ஊர்தியான எஸ்.டி. எஸ் 87 இல் பயணம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். விண்வெளி
சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள்
விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்தலிருந்து
கொலம்பியா விண்கலம் எஸ்.டி. எஸ்
107 அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய
கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த விண்கலம், 16நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1 ஆம் நாள்
பூமிக்குத் திரும்பிக் கொண்டியிருந்த போது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச்
சிதறியது. இதில் கல்பனா உட்பட 7 வீரர்களும்
பலியாகினர்.
விருதுகளும் சிறப்புகளும் :
• கல்பனா சாவ்லாவை பெருமைப்படுத்தும் விதமாக நியூயார்க் நகரில் உள்ள
ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
• வீரமங்கையை இழந்த இந்தியா ஆண்டுதோறும் பிப்ரவரி 1 ஆம் நாள் கல்பனா சாவ்லாவின் நினைவு தினத்தைக் கடைப்பிடித்து
வருகிறது.
• விண்வெளிப்பதக்கம்
நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
• நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம்
• 2004 ஆம் ஆண்டிலிருந்து "இளம் பெண் விஞ்ஞானிகளை" ஊக்குவிக்கும் பொருட்டு
தமிழக அரசாங்கம் "கல்பனா சாவ்லா" விருதினை வழங்கி வருகிறது.
முடிவுரை
பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தவர் கல்பனா சாவ்லா ஆவார். விடா முயற்சியுடனும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி
நிச்சயம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரப்பெண்ணாகிய கல்பனா சாவ்லாவை என்றும்
போற்றுவோம் வாழ்வில் உயர்வோம்.
நயம் பாராட்டுக.
நிலாவையும் வானத்து மீனையும்
காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஒட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச்சுளை வண்டியில்
ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ ?
- பாரதியார்
திரண்ட கருத்து:
நிலா, விண்மீன் ,
காற்று, இலை ஆகிய அனைத்தையும் அமுதமாக நினைத்து
அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். இந்த இயற்கையில் நம் மனதினைப்
பறவையாகப் பறக்கவிட்டு மகிழ்ச்சியடைவோம். இதற்கு உவமையாக பலாச்சுளையின்
மணத்தை நுகர்வது போல, வண்டு ரீங்காரம் இடுவது போல இவ்வியற்கையைப்
பாடி மகிழ்வோம் என்று பாரதியார் கூறுகிறார்.
மையக்கருத்து
பாரதியார் இயற்கையின் அழகினை சிறப்பாக உயர்த்திக் கூறியுள்ளார்.
மோனை நயம்:
செய்யளில் சீர் தோறும் முதல் எழுத்து ஒன்று வருவதால் மோனை நயம் இடம்
பெற்றுள்ளது.
சான்று : குலாவும் - குழம்பைக் - குடித்தொரு
- பலாவின் - பாடுவதும்
எதுகை நயம்
செய்யளில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதால் எதுகை நயம் இடம்
பெற்றுள்ளது.
சான்று : நிலாவையும்
குலாவும்
உலாவும் பலாவின்
அணிநயம்
செய்யுளில் கவிஞர் இயற்கையைப் பற்றி மிகவும் உயர்வாக அதாவது இயல்பாக
நிகழ்கின்ற நிகழ்ச்சியை உயர்வுபடுத்திக் கூறியதால் இதில் உயர்வு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது.
தலைப்பு
இப்பாடலுக்கு ஏற்ற தலைப்பு
"இயற்கையின் சிறப்பு"
மொழியோடு விளையாடு
தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல்,
கரு, பூவில், எழுத்து)
1.
நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்.
2.
விதைக்கத் தேவை எரு எனில் கதைக்குத் தேவை கரு.
3.
கல் சிலை ஆகுமெனில் நெல் சோறு
ஆகும்.
4.
குரலில் இருந்தது பேச்சு எனில், விரலில் இருந்து
எழுத்து.
5.
மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது பூவில்
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.
அகராதியில் காண்க.
அவிர்தல் - விரிதல், பிரகாசித்தல்
அழல் - நெருப்பு, கள்ளி
உவா - இளமை, முழுநிலா
கங்குல் - இரவு, இருள்
கனலி - சூரியன், நெருப்பு
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
மெல்ல மெல்ல கால் பதித்த நான்
கீழ் மக்கள் முதல் மேல் மக்கள் வரை
மாட்டிற்குப் போடுவது போல்
மானிடருக்கும் மூக்கணாங்கயிறு இட்டு
என் கட்டளைப்படி நடக்கச் செய்தேன்
திறன் பேசி நாயகனாக வலம் வருகிறேன்.
செயல்திட்டம்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள்
சில இயங்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள்
சில உலகினில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய படங்களுடன் குறிப்பு எழுதி வருக.
கலைச் சொல் அறிவோம்
Nanotechnology - மீநுண்தொழில்நுட்பம்
Biotechnology - உயிரித் தொழில்நுட்பம்
Ultraviolet
rays - புற
ஊதாக் கதிர்கள்
Space
Technology - விண்வெளித்
தொழில்நுட்பம்
Cosmic
rays - விண்வெளிக்
கதிர்கள்
Infrared
rays - அகச்சிவப்புக்
கதிர்கள்
அறிவை விரிவு செய்
பஞ்ச
பூதங்களின் அறிவியல் கதைகள் – நீலமணி
அன்றாட
வாழ்வில் அறிவியல் - ச.தமிழ்ச்செல்வன்
காலம்
– ஸ்டீபன் ஹாக்கிங
நிற்க அதற்குத் தக...
தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும்
தம்பி. திறன் பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும்
தங்கை; காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்;
எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியப்படி இருக்கும்
தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில்
இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை
நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல்
இடுக.
1. கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுகளை
விளையாடச் செய்யலாம்.
2. நல்ல புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பேன்.
3. உடற்பயிற்சி, யோகா செய்ய ஊக்குவிப்பேன்.
4. பல்வேறு விளையாட்டுகளை விளையாட பயிற்சி அளித்து உடலும்
உள்ளமும் புத்துணர்வு பெற வழி வகுப்பேன்.
இணையத்தில் காண்க.
https://bit.ly/2NVSG9H
https://bit.ly/2Dha2K9
https://bit.ly/2yMBPfW