Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | இலக்கணம்: புணர்ச்சி

இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: புணர்ச்சி | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal

   Posted On :  19.08.2023 08:43 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்

இலக்கணம்: புணர்ச்சி

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : இலக்கணம்: புணர்ச்சி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலைசு

கற்கண்டு 

புணர்ச்சி



நிலைமொழி - வருமொழி

புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி - வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.

புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்..


புணர்மொழியின் இயல்பு

எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்.

கலை + அழகு – உயிரீறு

மண் + குடம் – மெய்யீறு

வாழை + இலை – உயிர்முதல் 

வாழை + மரம் – மெய்ம்முதல் 

மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம். 

உயிர்முன் உயிர் – மணி (ண்+இ) + அடி = மணியடி 

உயிர்முன் மெய் – பனி + காற்று = பனிக்காற்று

மெய்ம்முன் உயிர் – ஆல் + இலை = ஆலிலை

மெய்ம்முன் மெய் – மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை


இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்

புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இருவகைப் படுத்தலாம். புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.

வாழை + மரம் = வாழைமரம் 

செடி + கொடி = செடிகொடி

மண் + மலை = மண்மலை

புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். இந்த மாற்றம் மூன்று வகைப்படும். அவை:

தோன்றல், திரிதல் கெடுதல்.

நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு (தோன்றல்)

கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை (தோன்றல்)

பல் + பசை = பற்பசை (திரிதல்) 

புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)


உயிரீற்றுப் புணர்ச்சி

உடம்படுமெய்

உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும்; அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும்; ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும். இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.

நிலைமொழியின் ஈற்றில் 'இ,ஈ,ஐ' என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும். அவற்றின் முன், பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம் உடம்படுமெய்யாக வரும்.

மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு

தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி

ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்

'இ, ஈ, ஐ' தவிர, பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும் போது அவற்றின்முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய் தோன்றும்.

பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்

பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம் 

நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் யகரமோ வகரமோ தோன்றும். 

சே + அடி = சே + ய் + அடி = சேயடி;

சே + வ் + அடி = சேவடி 

தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்

இவனே + அவன் = இவனே +ய் + அவன் = இவனேயவன் 

இ ஈ ஐவழி யவ்வும் ஏனை 

உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்

உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்.

(நன்.162)

குற்றியலுகரப் புணர்ச்சி

வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்

நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.

குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும்.

உறவு + அழகு = உற(வ் +உ) = உறவ் + அழகு = உறவழகு


தெரிந்து தெளிவோம்

தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

நாக்கு, வகுப்பு - வன்தொடர்க் குற்றியலுகரம்

நெஞ்சு, இரும்பு - மென்தொடர்க் குற்றியலுகரம் 

மார்பு, அமிழ்து - இடைத்தொடர்க் குற்றியலுகரம்

முதுகு, வரலாறு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

எஃகு, அஃது - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

காது, பேசு - நெடில் தொடர்க் குற்றியலுகரம்


மெய்ம்மயக்கம் 

புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும்போது வருமொழியில் க, ச, த, ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும். இதை' வலி மிகுதல்' என்பர். இது போன்றே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. குறிப்பாக, ங, ஞ, ந, ம என்ற நான்கு எழுத்துகளும் இவ்வாறு மிகும்.

1. 'ய'கர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்.

எ.கா. மெய் + மயக்கம் = மெய்ம்ம யக்கம் 

மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்

செய் + நன்றி = செய்ந்நன்றி

2. வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய,ர,ழ  முன்னர் மெல்லினம் மிகும்.

எ.கா. வேய் + குழல் = வேய்ங்குழல் 

கூர் + சிறை = கூர்ஞ்சிறை

பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு

3. 'புளி' என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினம் மிகும். 

எ.கா. புளி + கறி = புளிங்கறி 

புளி + சோறு = புளிஞ்சோறு 

4. உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் 

பெயர்களுக்கு முன்னர் மெல்லினமும் மிகும்.

எ.கா. மா + பழம் = மாம்பழம் 

விள + காய் = விளங்காய் 

5. 'பூ' என்னும் பெயர் முன்னர்  வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

எ.கா. பூ + கொடி = பூங்கொடி 

பூ + சோலை = பூஞ்சோலை 

பூ + தொட்டி = பூந்தொட்டி

Tags : Chapter 6 | 9th Tamil இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal : Grammar: Punarchi Chapter 6 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : இலக்கணம்: புணர்ச்சி - இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்