Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: இராவண காவியம்

புலவர் குழந்தை | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: இராவண காவியம் | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal

   Posted On :  19.08.2023 08:36 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்

கவிதைப்பேழை: இராவண காவியம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : கவிதைப்பேழை: இராவண காவியம் - புலவர் குழந்தை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை – சு

கவிதைப் பேழை 

இராவண காவியம்

- புலவர் குழந்தை



நுழையும்முன் 

பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை; அடர்ந்து வளர்ந்த பசுமரங்கள்; நீர் நிறைந்த நதிக்கரைகள்; பச்சை போர்த்திய புல்வெளிகள்; துள்ளித் திரியும் மானினங்கள்; மயில்கள், குயில்கள், கிளிகள் பறந்து திரியும் பறவைகளென இத்தகு அழகிய சூழலைக் கண்டு மனம் மகிழ்ந்ததுண்டா? அழகைச் சுவைத்தால் மனம் புத்துணர்வு பெறும்; எண்ணம் வளமை பெறும். தமிழ் இலக்கியத் திரையில் மிகுதியான எழிலோவியங்களைச் சொல்லோவியங்களாகப் புலவர்கள் தீட்டி வைத்துள்ளனர். அவற்றில் சில காட்சிகளைக் கண்டு சுவைப்போம் வாருங்கள்.



குறிஞ்சி 

1. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி 

பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் 

அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை 

மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால். (49)


2. அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும் 

துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்

மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் 

கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே (52)

சொல்லும் பொருளும்: 

மைவனம் - மலைநெல்; முருகியம்- குறிஞ்சிப்பறை; பூஞ்சினை-பூக்களை உடைய கிளை; சிறை- இறகு; சாந்தம் - சந்தனம்


முல்லை

3. பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் 

பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந் 

தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்

ஆவினம் ஒருங்குற அருகுஅணைக்குமால் (58)


4. முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக்

குதிரைவா லியும்களம் குவித்துக் குன்றுஎனப் 

பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் 

அதிர்குரல் கேட்டுஉழை அஞ்சி ஓடுமே! (60)

சொல்லும் பொருளும்: 

பூவை- நாகணவாய்ப் பறவை; பொலம்- அழகு; கடறு- காடு; முக்குழல்-கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்; பொலி- தானியக்குவியல்; உழை- ஒரு வகை மான்.


பாலை

5. மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ 

இன்னிளம் குருளைமிக்கு இனைந்து வெம்பிடத் 

தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற 

நன்னரில் வலியசெந் நாய்உயங்குமே. (65)


6. கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார் 

படிக்குற எருத்துக்கோடு அன்ன பாலைக்காய்

வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால்

அடிக்கும் ஓசையின்பருந்து அஞ்சி ஓடுமே (67)

சொல்லும் பொருளும்: 

வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்; குருளை- குட்டி; இனைந்து- துன்புறுதல்; உயங்குதல்- வருந்துதல். படிக்குஉற- நிலத்தில் விழ; கோடு- கொம்பு;


மருதம்

7. கல்லிடைப் பிறந்த ஆறும்

கரைபொரு குளனும் தோயும் 

முல்லைஅம் புறவில் தோன்று

முருகுகான் யாறு பாயும் 

நெல்லினைக் கரும்பு காக்கும்

நீரினைக் கால்வாய் தேக்கும் 

மல்லல்அம் செறுவில் காஞ்சி

வஞ்சியும் மருதம் பூக்கும்* (72)


8. மரைமலர்க் குளத்தில் ஆடும்

மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட 

பொருகரிக் குருத்து அளந்து

பொம்மெனக் களிப்பர் ஓர்பால் 

குரைகழல் சிறுவர் போரில்

குலுங்கியே தெங்கின் காயைப் 

புரைதபப் பறித்துக் காஞ்சிப்

புனைநிழல்அருந்து வாரே. (77)

சொல்லும் பொருளும்

கல்-மலை; முருகு- தேன், மணம், அழகு; மல்லல்- வளம்; செறு- வயல்; கரிக்குருத்துயானைத்தந்தம்; போர்- வைக்கோற்போர்; புரைதப- குற்றமின்றி.


நெய்தல்

9. பசிபட ஒருவன் வாடப்

பார்த்து இனி இருக்கும் கீழ்மை

முசிபட ஒழுகும் தூய

முறையினை அறிவார் போல 

வசிபட முதுநீர் புக்கு

மலையெனத் துவரை நன்னீர்

கசிபட ஒளிமுத் தோடு

கரையினில் குவிப்பார் அம்மா (82)


10. வருமலை அளவிக் கானல்

மணலிடை உலவிக் காற்றில்

சுரிகுழல் உலர்த்தும் தும்பி

தொடர்மரை முகத்தர் தோற்றம் 

இருபெரு விசும்பிற் செல்லும்

இளமைதீர் மதியம் தன்னைக் 

கருமுகில் தொடர்ந்து செல்லுங்

காட்சி போல்தோன்று மாதோ. (84)

சொல்லும் பொருளும்

தும்பி- ஒருவகை வண்டு; துவரை-பவளம்; மரை- தாமரை மலர்; விசும்பு- வானம்; மதியம்-நிலவு.


பாடலின் பொருள்

1. அருவிகள் பறையாய் ஒலிக்கும்; பைங்கிளி தானறிந்த தமிழிசையைப் பாடும்; பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்; இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

2. தீயில் இட்ட சந்தனமரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

3. நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில மக்களான ஆயர், முக்கனியும் தேனும் சேகரித்துக் கொண்டு முக்குழல் இசையால் மேயும் பசுக் கூட்டங்களை ஒன்று சேர்த்தனர்.

4. முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவற்றை முல்லை நில மக்கள் அறுத்துக் கதிரடித்துக் களத்தில் குன்று போலக் குவித்து வைத்திருப்பர். கதிரடிக்கும் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.

5. கொடிய பாலைநிலத்து வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குட்டி, வாய் மிகவும் உலர்ந்து குழறியது. இதனைக் கண்டு அதன் தாய் வருந்தியது. குட்டி இளைப்பாற எங்கும் நிழலில்லை. எனவே கடும் வெயிலில் தான் துன்புற்று நின்று, தனது நிழலில் குட்டியை இளைப்பாறச் செய்தது.

தெரிந்து தெளிவோம்

"இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" - பேரறிஞர் அண்ணா

6. சிறுவர்கள் நன்கு மணம் வீசும் மராமலர்களை மாலையாக அணிந்திருந்தனர். எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

7. மலையிடையே தோன்றும் ஆறும் கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்; அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் நீரினைக் கால்வாய்வழி வயலில் தேக்கி வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருதநில வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

8. தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற் போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

9. தூய ஒழுக்க முறையைப் பின்பற்றுபவர்கள், பசித்துயரால் துன்புறுவோரைக் கண்டு வருந்துவார்கள். அதுபோலத் தான் வாழும் இடமானது மூழ்குமாறு பெரும் கடலலை புகுந்து விட்டாலும், மலையளவுக்குப் பவளங்களையும் நல் இயல்பு தோன்றும் ஒளி முத்துகளையும் நெய்தல் நிலத்தவர் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பர்.

10. தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்ப் பெண்களின் முகத்தைத் தாமரை மலரெனக் கருதித் தொடர்ந்து செல்லும் அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.


இலக்கணக் குறிப்பு 

பைங்கிளி - பண்புத்தொகை; பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்எண்ணும்மைகள். இன்னிளங் குருளை - பண்புத்தொகை ; அதிர் குரல் - வினைத்தொகை; மன்னிய- பெயரெச்சம்; வெரீஇ- சொல்லிசை அளபெடை; கடிகமழ்உரிச்சொற்றொடர்; மலர்க்கண்ணி- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை;

எருத்துக்கோடு- ஆறாம் வேற்றுமைத்தொகை; கரைபொரு- இரண்டாம் வேற்றுமைத் தொகை; மரைமுகம்- உவமைத்தொகை; கருமுகில்பண்புத்தொகை; வருமலை- வினைத்தொகை;

பகுபத உறுப்பிலக்கணம் 

பருகிய = பருகு+இன்+ய்+அ; 

பருகு - பகுதி; 

இன்- இறந்தகால இடைநிலை (ன் கெட்டது விகாரம்); 

ய் -உடம்படுமெய்; அ --பெயரெச்ச விகுதி

பூக்கும் = பூ + க் + க் + உம்;

பூ - பகுதி; க் - சந்தி 

க் - எதிர்கால இடைநிலை; உம் - வினைமுற்று விகுதி

தெரிந்து தெளிவோம்

கோர்வை கோவை : கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை,

ஊசியில் நூலைக் கோத்தான்.


நூல் வெளி 

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

Tags : by Pulavar Kulanthai | Chapter 6 | 9th Tamil புலவர் குழந்தை | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal : Poem: Ravana kaviyam by Pulavar Kulanthai | Chapter 6 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : கவிதைப்பேழை: இராவண காவியம் - புலவர் குழந்தை | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்