Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி

ஆண்டாள் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal

   Posted On :  19.08.2023 08:38 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்

கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி - ஆண்டாள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை

கவிதைப் பேழை 

நாச்சியார் திருமொழி

- ஆண்டாள்



நுழையும்முன் 

பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது. இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது. ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர். அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் கவிதைகள் கற்பவர் மனத்தைக் கவர்கின்றன.



கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி 

சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். (57)


மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் 

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். (58)

சொல்லும் பொருளும்

தீபம் - விளக்கு; சதிர் - நடனம்; தாமம் - மாலை


பாடலின் பொருள்

1. 'ஆடும் இளம் பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாது கைகளை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்'. இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

2. 'மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர். அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்'. இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

தெரிந்து தெளிவோம்

பெண்ணின் திருமண வயது 18; ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இலக்கணக் குறிப்பு 

முத்துடைத்தாமம் - இரண்டாம் வேற்றுமைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம் 

தொட்டு - தொடு (தொட்டு) + உ 

தொடு - பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது - விகாரம் உ - வினையெச்ச விகுதி 

கண்டேன் - காண் (கண்) + ட் + ஏன் 

காண் - பகுதி('கண்' எனக் குறுகியது 

விகாரம்), ட் - இறந்தகால இடைநிலை 

ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி


நூல் வெளி 

திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண். இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றார். இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர். ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு "நாலாயிர திவ்வியப் பிரபந்தம்" ஆகும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன. நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது. நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.

Tags : by Aandal | Chapter 6 | 9th Tamil ஆண்டாள் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal : Poem: Nachiyar thirumozhi by Aandal | Chapter 6 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி - ஆண்டாள் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்