Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | துணைப்பாடம்: செய்தி

தி. ஜானகிராமன் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: செய்தி | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal

   Posted On :  19.08.2023 08:41 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்

துணைப்பாடம்: செய்தி

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : துணைப்பாடம்: செய்தி - தி. ஜானகிராமன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை – சு 

விரிவானம் 

செய்தி

- தி. ஜானகிராமன்



நுழையும்முன் 

இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காக அது எல்லா மொழிகளையும் பேசுவது; மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது; சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள்ளிருக்கும் நுழையும்முன் செய்தியை எந்தமொழி மனதிற்குள்ளும் செலுத்துவது. ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள், துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களைக் கூட்டுவது. இசையின் செவ்வியில் தலைப்படும் மனமானது இனம், நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும். இசை தாண்டவைக்கும்.


நாகசுர வித்வான் ஒற்றை மாட்டு வண்டியிலிருந்து இறங்கி, வக்கீல் வீட்டில்! நுழைந்தார். மகன் தங்கவேலுவும், வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு ஒத்துக்காரரும் பின்னால் வந்தார்கள்.

பெரிய ஹால். வாசலிலிருந்தே அவரைக் கையைப் பிடித்து அழைத்துப்போன வக்கீல் உள்ளே குழுமியிருந்த கோஷ்டியை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இவர்தான் பிலிப் போல்ஸ்கா , இந்தச் சங்கீத கோஷ்டியின் தலைவர்."

"நிறைகுடம்னு சொன்னீங்கள்ள, ஞாபகமிருக்கா?" என்று வக்கீலைப் பார்த்தார். 

"இருக்கு."

"சரியான வார்த்தை! கண்ணைப் பாருங்க. முகம் எவ்வளவு அழகாயிருக்கு, பாத்தீங்களா?"

போல்ஸ்காவுக்குப் பிறகு, கூட வந்திருந்த இருபது இருபத்தைந்து பேருக்கும் வக்கீல், வித்வானை அறிமுகப்படுத்தினார்.

மேலே ஏறி உட்கார்ந்து ஒத்துக்காரன் ஆரம்பித்ததும், ஓலையைச் சரிபண்ணிக்கொண்டார். தங்கவேலு மேடைக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டான்.

நாட்டையைக் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனத்தைத் தொடங்கினார்.

போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. விழி மேலே செருகியிருந்தது. அமிருத தாரையாகப் பெருக்கெடுத்த நாதப் பொழிவில் அவன் தன்னை இழந்து விட்டான் போல் தோன்றிற்று. நாதம் அவனுடைய ஆத்மாவை, காணாத லோகங்களுக்கும் அனுபவங்களுக்கும் இழுத்துச் சென்றது போல் தோன்றிற்று. சளைத்துப் போய் ஆற்றோடு போகிறவனைப்போல், இஷ்டப்படி வெள்ளம் தன்னை அடித்துப் போகும்படி விட்டுவிட்டான் அவன்.

சட்டென்று நாதம் நின்றது . போல்ஸ்காவின் கண் இன்னும் அந்த அநுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தது. மேலே செருகிய விழிகள் கீழே இறங்கிப் பார்க்க ஒரு நிமிஷம் ஆயிற்று.

டையும் கால்சட்டையுமாகச் சப்பணம் கட்டி அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் அசையாது பார்த்துக்கொண்டிருந்தது.

"ஐயா, ஒரு சின்னச் சோதனை வைக்கப்போறேன்" என்றார் வித்வான், வக்கீலைப்பார்த்து.

"என்ன !"

"பாருங்களேன்."

வக்கீல் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார்.

"தஸரிமா ... மா" என்று ஆரம்பித்தார்.


சாமா ராகம் என்று அடையாளம் கண்ட வக்கீல், வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். ராகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து கொண்டிருந்தது. நடு நிசியில் தோட்டத்தில் மலர்ந்து மணத்தைப் பெருக்கும் - அமைதியான மணத்தை வீசும் - பவழமல்லியின் நினைவு அவருள்ளத்தில் தோய்ந்தது. அவரது தலை அங்கும் இங்கும் விட்டு விட்டு வரும் அந்த மணத்திற்கு இசைவாக அசைந்துகொண்டிருந்தது. ராகம் வளர்ந்துகொண்டிருந்தது.

யாரோ கையாட்டு கிற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தார் வக்கீல். போல்ஸ்காதான். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. இரண்டு கைகளையும் எதையோ வாங்கிக் கொள்வதுபோல் நீட்டிக்கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புன்சிரிப்பு. சன்னதம் வந்தவன் மாதிரி அந்த முகம் நினைவிழந்து எங்கேயோ ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.

திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். கையை நீட்டியபடியே நின்றுகொண்டு, மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். ராகம் இன்னும் வளர்ந்தது.

நின்றுகொண்டிருந்தவன் அடியெடுத்து வைத்தான். கைகளை நீட்டி ஏந்திக்கொண்டே அடியெடுத்து வைத்தான். நடந்து நடந்து மேடை முன் வந்ததும், மெதுவாக முழந்தாளிட்டு உட்கார்ந்துகொண்டான். கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்துக்கொண்டான்.

வக்கீலும் போல் ஸ்கா கோஷ்டியும் போல் ஸ்காவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். போல்ஸ்கா எந்த உலகத்தில் அலைகிறானோ? எந்த வானில் திரிகிறானோ?

அவன் தவத்தைக் கலைத்து விடப் போகிறோமே என்று பயந்தாரோ என்னவோ வித்வான்? ராக ஆலாபனத்தைக் கூட ஓர் இடத்தில் நிறுத்தாமல் அப்படியே கீர்த்தனையைத் தொடங்கிவிட்டார்.

"சாந்தமுலேகா..." குழந்தையைக் கொஞ்சுகிறதுபோல அந்த அடி கொஞ்சிற்று. சத்தியத்தைக் கண்டு இறைஞ்சுவதுபோல் கெஞ்சிற்று.

போல்ஸ்காவின் மெய் சிலிர்த்தது, முதுகு ஒரு சொடுக்குடன் உலுக்கியதில் தெரிந்தது.

கீர்த்தனம் முடிந்தது. வாத்தியம் நின்றது.

மேடையில் கைவைத்து, முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்த போல்ஸ்கா ஓர் எட்டு எட்டி வித்வானின் கையைப் பிடித்தான், கெஞ்சுகிறாற்போல ஒரு பார்வை.

"வேறு ஒன்றையும் வாசிக்காதீர்கள். என் உயிர் போய்விடும் போல் இருக்கிறது. வேறு வேண்டாம்."

"சாந்தமுலேகாவையே திரும்பி வாசிக்கச் சொல்றார்" என்று நிசப்தத்தைக் கலைக்கத் துணிவில்லாமல் மெதுவாகச் சொன்னார் வக்கீல்.

மீண்டும் அதே நாதம் பொழிந்தது.

ஐந்து, ஆறு தடவை திருப்பித் திருப்பிக் கீர்த்தனத்தை வாசித்து முடித்தார். கடைசியில் நாதம் மௌனத்தில் போய் லயித்ததுபோல, இசை நின்றது.

போல்ஸ்கா அப்படியே தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். கோயில் மணியின் கார்வையைப் போல அந்த நிசப்தத்தில் அவன் தலையும் உள்ளமும் ஆத்மாவும் அசைந்து ஊசலிட்டுக்கொண்டிருந்தன. மூன்று நிமிஷம் ஆயிற்று.

வக்கீல் ஒரு பெருமூச்சு விட்டார். தொண்டையில் வந்த கரகரப்பை, பயந்து பயந்து கனைத்தார்.

திரும்பிப் பார்த்தான் போல்ஸ்கா.

"மிஸ்டர் மணி, இதில் ஏதோ செய்தி இருக்கிறது. ஏதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது. அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது!"

குழந்தையைப்போல் சிரித்துக்கொண்டே நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினான் போல்ஸ்கா. 

"புரிகிறதா?" என்று கேட்டான்.

"புரிகிறாற்போல் இருக்கிறது" என்றார் வக்கீல்.

எனக்கு நன்றாகப் புரிகிறது. அது செய்தி. உலகத்திலேயே எந்தச் சங்கீதமும் இந்தச் செய்தியை எனக்கு அளிக்கவில்லை. இரண்டு கைகளையும் நீட்டி அதை நான் ஏந்தி வாங்கிக்கொண்டுவிட்டேன். ஒருவரும், ஒரு கலையும், ஒரு சங்கீதமும் கொடுக்காத செய்தியை நான் இப்போது பெற்றுக்கொண்டுவிட்டேன். 

"என்னாங்க?" என்று கேட்டார் வித்வான்.

வக்கீல் மொழிபெயர்த்துச் சொன்னார் கேள்வியை.

"என்ன தோன்றிற்று என்று கேட்கிறாரா? உலகம் முழுவதும் பிணக்காடாகக் கிடக்கிறது. ஒரே இரைச்சல், ஒரே கூச்சல், ஒரே அடிதடி: புயல் வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. கட்டிடம் இடிந்து விழுகிறது. எங்கே பார்த்தாலும் ஒரே இரைச்சல் ... இந்தப் போர்க்களத்தில், இந்த இரைச்சலில், நான் மட்டும் அமைதியைக் காண்கிறேன்.

மெதுவாக இந்த இரைச்சல் தேய்ந்து, இந்தப் பிரளயக் கூச்சலும் இரைச்சலும் மெதுவாக அடங்கித் தேய்கிறது. ஓர் அமைதி என் உள்ளத்தில் எழுகிறது. இனிமேல் இந்த இரைச்சலும் சத்தமும் யுத்தமும் என்னைத் தொடாது. நான் எழுந்துவிட்டேன். அரவமே கேட்காத உயரத்திற்கு, மேகங்களுக்கும் புயலுக்கும் அப்பாலுள்ள உயர்விற்கு, எழுந்து,

தெரிந்து தெளிவோம் 

சிறுகதை - விருது மாலை

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்

1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி

1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்

1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன் 

1996 - அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்

2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி 

2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்

2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன் 

இதேபோல் மற்றவகை இலக்கியப் படைப்புகளுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்க.

சிறுகதை என்பது.... 

சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல; சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது; ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை, மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்படுவது; எடுத்து எழுதுவது. சிறுகதையில் சம்பவமோ, நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ அது ஒன்றாக இருக்க வேண்டும்.

சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு. சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்க சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது. அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்.

- புதுமைப்பித்தன்

அங்கே அமைதியை, அழியாத அமைதியைக் கண்டுவிட்டேன். இந்த அமைதி எனக்குப் போதும். இப்போதே நான் இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன்."

அமைதியுடன்தான் பேசினான் போல்ஸ்கா. வக்கீல் மொழிபெயர்த்துச் சொன்னார்.

வித்வான் திகைத்துப் போனார்.

"அமைதியா, அப்படியா தோணித்து இவருக்கு!" 

"ஆமாம்." 

"அப்படித்தானே சொல்கிறார் இவர்." 

"வார்த்தைகூடச் சொல்லலையே நான். எப்படி இவருக்குத் தெரிஞ்சுது?"

"மிஸ்டர் போல்ஸ்கா , இந்தப் பாட்டும் அமைதி வேணும் என்றுதான் அலறுகிறது. நீங்கள் சொன்ன புயல், இடி என்ற மாதிரியில் சொல்லாவிட்டாலும், அமைதி, அமைதி என்று அமைதியைத்தான் கடைசி லட்சியமாக இந்தப் பாட்டு இறைஞ்சுகிறது.

"அப்படியா!" என்று போல்ஸ்காவும் சமைந்துபோய்விட்டான்.

"செய்திதான் இது. நாதத்துக்குச் சொல்லவா வேண்டும்! எந்த வரம்பையும் கடந்து செய்தியை அது கொடுத்துவிடும்" என்றான் அவன்.


"இந்தக் கையைக் கொடுங்கள். வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்" என்று விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக்கொண்டான் போல்ஸ்கா. 

(தி. ஜானகிராமனின் செய்தி என்னும் சிறுகதையின் ஒரு பகுதி.)

தெரியுமா?

தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார். தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.


நூல் வெளி

தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர். வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன. நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார். "அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை" என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர். தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.

தெரிந்து தெளிவோம் 

இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக் கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று. மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை. 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை . தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை . ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.

Tags : by thi.JanakiRaman | Chapter 6 | 9th Tamil தி. ஜானகிராமன் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal : Supplementary: Seithi by thi.JanakiRaman | Chapter 6 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் : துணைப்பாடம்: செய்தி - தி. ஜானகிராமன் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்