Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: தொகாநிலைத் தொடர்கள்

இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: தொகாநிலைத் தொடர்கள் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

இலக்கணம்: தொகாநிலைத் தொடர்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : இலக்கணம்: தொகாநிலைத் தொடர்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு

கற்கண்டு

தொகாநிலைத் தொடர்கள்



தொகாநிலைத்தொடர்

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

எ.கா காற்று வீசியது

குயில் கூவியது

முதல் தொடரில் "காற்று" என்னும் எழுவாயும் "வீசியது" என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.

அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.

தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்

1. எழுவாய்த்தொடர்

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

இனியன் கவிஞர் - பெயர்

காவிரி பாய்ந்தது - வினை

பேருந்து வருமா? - வினா

மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.

2. விளித்தொடர்

விளி யுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

நண்பா எழுது! - "நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.

3. வினைமுற்றுத்தொடர்

வினை முற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

பாடினாள் கண்ணகி

"பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

4. பெயரெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

கேட்ட பாடல் - "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

5. வினையெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.

பாடி மகிழ்ந்தனர் - "பாடி" என்னும் எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

6. வேற்றுமைத்தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.

கட்டுரையைப் படித்தாள்.

இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

அன்பால் கட்டினார் - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

அறிஞருக்குப் பொன்னாடை - (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

7. இடைச்சொல் தொடர்

இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

மற்றொன்று - மற்று + ஒன்று. "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.

8. உரிச்சொல் தொடர்

உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

சாலச் சிறந்தது - "சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.

9. அடுக்குத் தொடர்

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

வருக! வருக! வருக! - ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.


தெரியுமா?

ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டு நிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டு நிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

எ.கா.

கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

 

கற்பவை கற்றபின்....

1. இன்று நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.

2. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுது போக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

3. வண்ணச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

வந்தார் அண்ணன்

வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன்

• அரிய கவிதைகளின் தொகுப்பு இது

• மேடையில் நன்றாகப் பேசினான்

 

 

Tags : Chapter 3 | 10th Tamil இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 3 : Kutaanchoru : Grammar: Thokanilai thodarkal Chapter 3 | 10th Tamil in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : இலக்கணம்: தொகாநிலைத் தொடர்கள் - இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு