Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: மலைபடுகடாம்

பெருங்கௌசிகனார் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மலைபடுகடாம் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru

   Posted On :  21.07.2022 09:13 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

கவிதைப்பேழை: மலைபடுகடாம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : கவிதைப்பேழை: மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு

கவிதைப் பேழை

மலைபடுகடாம்

- பெருங்கௌசிகனார்நுழையும்முன்

பண்டைத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி, கலைகளிலும் சிறந்து விளங்கினர். அன்று கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர். அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர். அவ்வகையாக விருந்தோம்பிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது தினைச்சோற்று விருந்து.


அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல் வேள் வயிரியம் எனினே,

நும் இல் போல நில்லாது புக்கு,

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

அடி : 158 – 169

 

சொல்லும் பொருளும்

அசைஇ - இளைப்பாறி,

அல்கி - தங்கி

கடும்பு - சுற்றம்,

நரலும் - ஒலிக்கும்

ஆரி - அருமை,

படுகர் - பள்ளம்

வயிரியம் - கூத்தர்,

வேவை - வெந்தது

இறடி - தினை,

பொம்மல் - சோறு

 

பாடலின் பொருள்

நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.

"பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், 'பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.

அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர். அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்."

 

இலக்கணக் குறிப்பு

அசைஇ, கெழீஇ - சொல்லிசை அளபெடைகள்

 

பகுபத உறுப்பிலக்கணம்

மலைந்து – மலை + த்(ந்) + த் + உ

மலை - பகுதி

த் - சந்தி ந் ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

- வினையெச்ச விகுதி

பொழிந்த - பொழி + த்(ந்) + த் + அ

பொழி - பகுதி

த் - சந்தி 'ந்' ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

 

நூல் வெளி

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

 

கற்பவை கற்றபின்....

1. உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டி, அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக்க.

எ.கா. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை

2. பத்தியைப் படித்து, வார இதழ் ஒன்றிற்கு அனுப்பும் வகையில் சமையல் குறிப்பாக மாற்றுக.

கம்மங்கூழ்

பொசுக்குகிறது வெயில். ஒரு துளி மழை பட்டால் வறுத்த உளுந்தின் வாசம் பரப்பும் வறண்ட மண். வெடித்த நிலம். செழித்து விளைகிறது கம்மம் பயிர். உரலில் குத்தி, சுளகில் புடைக்க அதன் உமி நீங்கும். நீர் தெளித்துத் தெளித்து, மீண்டும் உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். உப்புக்கலந்து, உலையில் ஏற்றி, கொதிக்கும் நீரில் கரையவிட்டுக் கிண்ட, கட்டியாகி அது சோறாகும். கம்மஞ் சோற்றை உருட்டிவைத்து, பின் மோர் விட்டுக் கரைத்தால் அது கம்மங்கஞ்சி அல்லது கம்மங்கூழ். மோர்மிளகாய் வற்றல், உப்பில் தோய்த்த பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயம் கடித்துக் கஞ்சியைக் குடித்தால் உச்சி தொட்டு உள்ளங்கால்வரை தேகம் குளிர்ந்து போகும். அனல் அடங்கும். உயிர் வரும். கம்பு - கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்.

 

 

Tags : by Perunkaucikanar | Chapter 3 | 10th Tamil பெருங்கௌசிகனார் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 3 : Kutaanchoru : Poem: Malaipadukadam by Perunkaucikanar | Chapter 3 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : கவிதைப்பேழை: மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு