Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | இலக்கணம்: தொன்மம்

இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: தொன்மம் | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

   Posted On :  02.08.2022 04:50 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

இலக்கணம்: தொன்மம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : இலக்கணம்: தொன்மம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இனிக்கும் இலக்கணம்

நிருவாகம் – எ 

தொன்மம்


தொன்மம் (myth) என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் 'தொன்மை' என்பதுவும் ஒன்றாகும். காலம்காலமாக உருவாக்கப்பட்டு இறுகி விட்ட கருத்து வடிவங்களும் தொன்மங்களே. தொன்மம் என்னும் சொல் இவை அனைத்தையும் குறிக்கும். ஆனால், கவிதையில் அது பழங்கதையைத் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.

கடவுளர்கள், தேவர்கள் மக்கள், விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து, படித்தால் நம்ப முடியாதது போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழமையான கதைகளையே தொன்மம் என்று கூறுவர்.

நம் அன்றாடப் பேச்சில் மரபுத் தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன. "கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்" என்பது இராமாயணத்தில் பர்ணசாலையைவிட்டு, சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத் தொடராகும். இதுபோல "இந்தா போறான் சகுனி", "இவன் பெரிய அரிச்சந்திரன்", "கர்ணன் தோற்றான்போ" என்றெல்லாம் தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அறத்திற்குத் தருமன், வலிமைக்குப் பீமன், நீதிக்கு மனுநீதிச் சோழன், வள்ளல் தன்மைக்குக் கர்ணன் என்று பலவாறு தொன்மக் கதைமாந்தர்களைப் பண்புக் குறியீடுகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

தொன்மங்கள் மக்களின் மனத்திலும் பேச்சிலும் இடம்பெற்றிருப்பதால் அவற்றைப் பயன்படுத்திச் சில செய்திகளைச் சுவையாகச் சொல்ல முடிகிறது; விளங்காத கருத்துக்களை எளிதில் விளங்க வைக்கமுடிகிறது. ஆகவே தொன்மம் (myth) இலக்கிய உத்தியாக ஏற்கப்பட்டிருக்கிறது. காலங்காலமாக மனித மனங்களிடையே உறைந்து கிடக்கும் தொல் கதைகள் பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொன்மக் கதைகள் உலகெங்கும் காப்பியங்களாகவும் புராணங்களாகவும் காவியங்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் உள்ள நிகழ்வுகளையும் கதை மாந்தர்களையும் தொன்மங்களாகப் படைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் மனத்தில் இயல்பாகவே கருத்துப் பொதிந்த கதைகள் படிந்து கிடக்கின்றன. இதன்மூலம் கதைச்சூழலையும் கதைமாந்தர்களின் செயல்பாடுகளையும் விளங்கிக் கொள்வதோடு அவை உணர்த்தும் உட்பொருளையும் படிப்பவர் அறிந்துகொள்வர். தொன்மம் சார்ந்த படைப்புகளையும் அவர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.

தொன்மம் - விளக்கம்

சில தொன்மங்கள், சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. இன்னும் சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன. தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அவை சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும் அவற்றினால் ஏற்படும் கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன என்று வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல் அகராதி புலப்படுத்துகின்றது.

இவ்வாறாகத் தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையான கருவியாகக் கவிதை விளங்குகிறது. உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதைகள் மூலமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் பல தொன்மங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. காப்பியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் தொன்மங்களை ஆண்டுள்ளனர். திரைப்படங்கள், நாடகங்கள், கதைகள் ஆகியவற்றில் தொன்மக் கதைகளையும் கதை மாந்தர்களையும் பயன்படுத்துகின்றனர். இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்துப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதியதைச் சான்றாகக் கொள்ளலாம். திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி 'விட்ட குறை', 'வெந்தழலால் வேகாது' ஆகிய சிறுகதைகளைப் படைத்துள்ளார். தொன்மங்களைக் கொண்டு ஜெயமோகன் (பத்மவியூகம்) சிறுகதையும், எஸ். ராமகிருஷ்ணன் (அரவான்) நாடகத்தையும் எழுதியுள்ளனர்.

தொன்மை (தொன்மம்) - தொல்காப்பியர் கூற்று 

"தொன்மை தானே சொல்லுங் காலை 

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே"

-- தொல்காப்பியர். செய்யுளியல் (228) 

இளம்பூரணர் உரை

தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள். 

பேராசிரியர் உரை

‘தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப் படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன’.

படைப்பாளர்கள் தாம் கூற விரும்பும் கருத்துகள் தொன்மம் மூலம் வெளிப்படுத்தும் போது அவை மிக விரைவாகவும் ஆழமாகவும் படிப்பவரால் புரிந்து கொள்ளப்படுகின்றன.

வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி 

முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை 

வெல்போர் இராமன் அருமறைக் கவித்த 

பல்வீழ் ஆலம் போல 

ஒலியவிந் தன்றிவ் வழுங்கல் ஊரே

(அகம். 70: 13-17) 

பல விழுதுகளை உடைய பெரிய ஆல மரத்தடியில் நின்று இராமன், சீதையைச் சிறைமீட்பது குறித்து, தன் உடன் இருந்தோருடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அம்மரத்திலிருந்த பறவைகளின் ஒலி இராமனின் பேச்சுக்கு இடையூறாக இருந்தது. அவன் தன் கையை உயர்த்திச் சைகை செய்ததும் பறவைகள் அமைதியாயின. அதுபோலத் தலைவியைத் தலைவன் மணம் செய்து கொண்டவுடன் அலர் தூற்றிய ஊரார் அமைதியாயினர். இது தோழியின் கூற்று. காதல் வெற்றியை வெற்றிகரமாக உணர்த்த இத்தொன்மம் பயன்படுகிறது.

சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய கதைப்பகுதிகளும் முருகனுக்கு வெறியாடும் சடங்கு முறைகளும் தொன்மங்களாக ஆளப்பட்டுள்ளன. முருகனை அழகுக்கும் ஆற்றலுக்கும் வீரத்துக்கும் உவமையாக்கிப் பல தொன்மங்கள் உள்ளன. யானை சினங்கொண்டு பேராற்றலுடன் போர்செய்த சிறப்பினை, முருகனின் வீரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது சங்க இலக்கியப் பாடல். இதை, 

"முருகு உறழ் முன்பொடு 

கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை (நற்றிணை , 225:1-2) 

என்னும் பாடலடி வெளிப்படுத்துகிறது.

தொன்மங்களுக்குக் கூறப்பட்ட சமயப்பொருள் காலப்போக்கில் இலக்கிய உத்தியாக, பொதுவானதாக ஆகியிருக்கிறது. பறவைகள் அடங்குவதிலும் பாற்கடலில் அமுதமும் ஆலகாலமும் வருவதிலும் நமக்கு நம்பிக்கையிருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருள் புலப்பாட்டிற்குத் தொன்மமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

தொன்மங்கள் முரண்பட்டவை ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன. அப்துல்ரகுமான்

உன்மனம் ஒரு பாற்கடல் 

அதைக் கடைந்தால் 

அமுதம் மட்டுமல்ல 

ஆலகாலமும் வெளிப்படும் என்பதை 

நீ அறிவாய் அல்லவா?

என்று தொன்மத்தைக் கொண்டு முரண்பாட்டை விளக்குகிறார். இங்குப் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்கள்.

தமிழில், கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகியும் பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரையை எரித்த நிகழ்வும் பின்வரும் புதுக்கவிதையில் அமைந்துள்ள விதத்தை அறியலாம்.

மதுரை எரிக்கக் கண்ணகியாயும் 

மீண்டும் எழுந்திடச் சீதையாயும் 

எப்பவும் எரிதழல் மடிசுமப்பது இனி 

எங்கள் வேலையல்ல

என்பதன் மூலம் இன்றைய பெண்கள் எம் முறை வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் வழக்கில் இருக்கும் ஒன்றாகும். அது காலத்தைக் கடந்து நிற்பது; இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது. சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை சொல்லவந்த கருத்தை விளக்குவதற்குத் தொன்மங்கள் எடுத்துக்காட்டாகவும் விளக்கமாகவும் குறியீடாகவும் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் தொன்மங்கள் கருத்தினை மேலும் ஆழமாக விளக்கும் உத்தியாகவே ஆளப்படுகின்றன.

இந்திய, கிரேக்கத் தொன்ம ஒப்புமைகள்

ஒவ்வொரு சமூகத்திலும் தொன்மங்கள் இருக்கின்றன. அவற்றுக்குள் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஓரிடத்திலிருந்து மனித இனம் பிரிந்து வேறு இடத்தில் சென்று வாழ்வதை இவை உணர்த்துகின்றன. கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் நிறைய ஒப்புமைகள் உள்ளன. இந்திரன் - சீயஸ்பிடர், வருணன் - ஊரனாஸ், பலராமன் – டயானிசிஸ், கார்த்திகேயன் - மார்ஸ், சூரியன் - சோல், சந்திரன் - லூனஸ், விஸ்வகர்மன் - வன்கன், கணேசன் - ஜோனஸ், துர்க்கை - ஜீனோ , சரஸ்வதி - மினர்வா, காமன் – இராஸ் என்று பல ஒப்புமைகள் உள்ளன. இவை இன மரபுகளை ஆய்வதற்கும் உதவக் கூடியவை.


Tags : Chapter 7 | 12th Tamil இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal : Grammar: Thonmum Chapter 7 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : இலக்கணம்: தொன்மம் - இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்