Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: இலக்கியத்தில் மேலாண்மை

வெ. இறையன்பு இ.ஆ.ப | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: இலக்கியத்தில் மேலாண்மை | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

   Posted On :  02.08.2022 04:35 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

உரைநடை: இலக்கியத்தில் மேலாண்மை

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : உரைநடை: இலக்கியத்தில் மேலாண்மை - வெ. இறையன்பு இ.ஆ.ப | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

இலக்கியத்தில் மேலாண்மை

- வெ. இறையன்பு இ.ஆ.பநுழையும்முன்

இலக்கியம் நம் இதயத்தில் புதைந்து, எப்போது வேண்டுமானாலும் கிளர்ந்துவிடுகிற விதை. இலக்கியங்களில் மேலாண் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட மேலாண் கருத்துகளையும் நிருவாக நெறிகளையும் நாம் உணரலாம். நாட்டின் முன்னேற்றம் மேலாண் சிந்தனையில் தொடங்குகிறது. மேலாண்மைத் துறையில் தமிழர் பழங்காலந்தொட்டே சிறந்து விளங்குகின்றனர்.


மனித இனம் தோன்றிய போதே மேலாண்மையும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. புராதன மனிதனிடம் குருத்துவிட்ட தலைமைப் பண்பும் வழிநடத்தும் இயல்புகளுமே அவனை இயற்கையோடு இயையவும் இடர்களைத் தாண்டி நீடிக்கவும் உதவின. இரண்டு கால்களில் நிமிர்ந்தபோது, அவனால் இன்னும் தீர்க்கமாகத் தன்னுடைய கட்டமைப்புகளைச் செதுக்க முடிந்தது. அவனால் குழுவாகச் செயல்பட்டு இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ள முடிந்தது. அவர்களில் ஒருவன் முன் நின்று அவர்களை ஒழுங்குபடுத்தவும் நிருவகிக்கவும் சாத்தியமானது. அவனால் தனக்குப் பொருத்தமான சுற்றுச்சூழ்நிலையைத் தானே உருவாக்கிக்கொள்ள முடிந்தது. தன்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளைத் தகர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் விடுதலை பெற முடிந்தது.

நேர மேலாண்மை

மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கியபோது உருவானது. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு. அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது. விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது. அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகுத்துக்கொள்ள வேண்டும். சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது. பல நேரங்களில் போர்களில் குறைவான படைவீரர்களுடன் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதனைத் திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுபடுத்துகிறார்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 

கருதி இடத்தால் செயின் (484)

ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு 'மடியின்மை' என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவணையே தருகிறார். புறநானூற்றின் இறுதிப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார்.

"பலர் துஞ்சவும் தான் துஞ்சான் 

உலகு காக்கும் உயர் கொள்கை 

கேட்டோன், எந்தை என் தெண்கிணைக்குரலே" (புறம் - 400) 

என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது


ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும். (நிருவாகத் திறன்) 17ஆம் நூற்றாண்டு சுவரோவியம், திருநெல்வேலி.

சீனத்தில் புழங்கும் உருவகக் கதையொன்று, நேர மேலாண்மை பற்றிக் கூறுகிறது.

சீனத்தில் யாங்சௌ என்கிற பகுதியில் பல இளைஞர்கள் நீச்சலில் தீரராக இருந்தனர். நீச்சல், தன்னம்பிக்கையைத் தருவதோடு வாழ்வில் எதிர்நீச்சல் போடவும் கற்றுத் தருகிறது. அங்கு ஆழமான நதியைச் சில இளைஞர்கள் கடக்கும்போது, மழைப் பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட, படகு கவிழ்ந்தது. அனைவரும் நதியில் விழுந்து நீச்சலடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் மிகச்சிறந்த நீச்சல் வீரன் ஒருவனும் இருந்தான். ஆனால் அவன் அன்று சரியாக நீந்தாமல் தத்தளித்தான்.

"ஏன் இவ்வளவு பின்தங்குகிறாய்? நீ அதிசிறந்த நீச்சல் வீரனாயிற்றே" என்று மற்றொருவர் வினவினார். தங்களைக் காட்டிலும் சிறந்த வீரன் தத்தளிப்பது அவருக்கு வியப்பாய் இருந்தது.

“நான் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னால் வேகமாக நீந்த முடியவில்லை ",

"அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, நீந்திக் கரைசேர்" என மற்றவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவற்றை விட மனமில்லாமல் அவன் தன் அரிய உயிரை நீத்தான்.

எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில் தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதுவே சிறந்த மேலாண்மை என்பதைத்தான் தொன்மை மிகுந்த இந்தச் சீனக்கதை சொல்கிறது.


வேளாண் மேலாண்மை

வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு. சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும்வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும். கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்,

"வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் 

செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்" (பாலகாண்டம்-179)

என்கிறார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான்' என்று அவர் குறிப்பிடுகிறார்.

மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மையுடையதே,

"இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக 

வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி 

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் 

பைங்கூழ் சிறுகாலைச் செய்" (அறநெறிச்சாரம் - 16)

என்கிற நெறியைச் செய்பவர்களே சிறந்த மேலாளர்களாகவும் நிருவாகிகளாகவும் இருப்பார்கள். அவர்களிடம் பணிபுரிபவர்கள், பணியைப் பாரமாக்காமல் சாரமாக்குவார்கள்.


வணிக மேலாண்மை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு வணிகம் நிகழும் இடமாகத் தமிழகம் திகழ்ந்தது. நமக்கு ஒரு காலத்தில் 'கடல்' ஏரியைப் போல எளிதாக இருந்தது. கடலைக் குறிக்க இத்தனை பெயர்கள் வேறெந்த மொழியிலாவது இருக்குமா என்பது ஐயமே! (கடலுக்கான வேறு பெயர்கள் : அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆழி, ஈண்டுநீர், உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, தென்நீர், பௌவம், முந்நீர், வரி, ஓதம், வலயம் ..... என்பன). வணிகம்' நடைபெறும்போது, அது குறித்த மேலாண்மையும் இயல்பாக விரவிப் பரவி ஓங்கியிருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்களில் தமிழரின் பண்டைய வணிகப் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிய நாடுகளுடன் வணிகம் செய்யும்போது, நம்மிடம் பரிமாற ஏதுவான உயர்தரப் பொருள்கள், அந்த நாடுகளின் பண்பாடு குறித்த ஆழ்ந்த அறிவு, அவர்கள் வருவதற்கேற்ற சிறந்த துறைமுகங்கள், இருமொழிகளையும் அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் என, பல தயாரிப்புகள் இருந்திருந்தால் தான் அது சாத்தியமாக முடியும். தமிழகத்தின் செல்வவளம் மிகவும் மேம்பட்டதாக இருந்திருக்க வேண்டும். உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரிப் பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம்போல, கடல் வழியே வேறு நாடுகளிலிருந்து மரக்கலங்களில் வந்த பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

“வான் முகந்த நீர் மலைப் பொழியவும் 

மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும் 

மாரி பெய்யும் பருவம் போல 

நீரினின்றும் நிலத்து ஏற்றவும் 

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் 

அளந்து அறியாப் பல பண்டம் 

வரம்பு அறியாமை வந்து ஈண்டி” (பட்டினப்பாலை - 126-132)

எனப் பல நாடுகளிலிருந்து வந்த பொருள்கள் குறித்துப் 'பட்டினப்பாலை' சித்தரிக்கிறது. அந்தப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்தபின், அவற்றின் மீது புலிச்சின்னத்தைப் பொறித்து வெளியே அனுப்பும் சுங்க அதிகாரிகளும் இருந்தனர். வரி கொடுக்காமல் ஏய்ப்பவர்கள் அஞ்சும் வகையில் வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்களின் வாயிலாக முசிறி மிகப்பெரிய துறைமுகமாக, யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருந்ததை அறிய முடிகிறது. ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார். தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே இருந்த வணிக உறவு இலக்கியம் மூலமும் தெரிகிறது. புறநானூற்றில் 56 ஆம் பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான், பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.

பலர் வர்த்தகம் செய்யும் போது, 'இலாபம் கிடைக்கிறதே' என்கிற மிதப்பில் தன்னைப் பற்றிய உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். பிறகு 'நாம் தொட்டதெல்லாம் துலங்கும்' எனத் தெரியாத துறைகளில் இறங்குவார்கள். ஒருநாள் கன்னத்தில் கைவைத்துக் கலங்குவார்கள். வெற்றி வரத் தொடங்கும்போதுதான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தம்முடைய வலிமையின் அளவு அறியாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டுத் தொடங்கி இடையில் அதனை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.

"உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்" (473) 

என்கிற குறள் அனைவருக்கும் பொருந்தும்.

நம்முடன் யாரும் போட்டி போடக்கூடாது. அப்படிப் போட்டிக்கு வரும் அனைவரையும் அழித்துவிட வேண்டும் என எண்ணக் கூடாது. போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது மேலாண்மை விதி.

மேலாண்மையில் புலியைப் பூனையைப் போலத் தொடர்ந்து நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும்' என்கிற பொன்மொழி உண்டு. புத்திசாலிகள் பூனைகளையும் புலியாக்குவார்கள்; அவசரக்காரர்கள் புலிகளையும் எலிகளாக்குவார்கள்.


நிருவாக மேலாண்மை

உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும். தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு. நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் 

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் 

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு 

தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு" (139)

நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை. தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான். அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும் வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள். அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான். 'டைமன்' பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம். ஔவையார் நல்வழியில்

"ஆன முதலில் அதிகம் செலவானால் 

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை 

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” (25) 

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார். 


மேலான மேலாண்மை

மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிந்துவிடுவதல்ல. நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஏற்கெனவே தயாரித்து வைத்த அறிவுக் கூறுகளைக் கொண்டு நாம் புதிய நெருக்கடியை நேர்கொள்ள முடியாது. அதனால்தான் இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் முன் அனுபவம் என்பது எதிர்மறையாகிவிட்டது. அனுபவசாலிகள் செக்குமாடாக இருப்பார்கள். ஆனால் நமக்குத் தேவைஜல்லிக்கட்டுக் காளைகள்.

எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு அடர்த்தியுடன் எழுதுகிறோம் என்பதே முக்கியம். 126 ஒற்றை வரிகளில் எழுதிய 'துளிகள்' (fragments) என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஹிராக்ளிடஸ். அவர் கிரேக்க நாட்டவர். 'இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது' என்று அவர் சொன்ன கோட்பாடு வாழ்வுக்கும் பொருந்தும், வர்த்தகத்திற்கும் பொருந்தும். போன ஆண்டு பொருள் பற்றாக்குறை ஏற்பட்ட போது, சமாளித்த விதத்தையே இந்த முறை அனுசரிக்க முடியாது. ஏனென்றால் இப்போது ஓடும் நதியின் வெள்ளம் வேறு, நேற்று ஓடிய வெள்ளம் இந்நேரம் கடலில் கலந்திருக்கும். அவர் 'ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது என்று குறிப்பிடுகிறார். ஒற்றை வாக்கியத்தில் ஓராயிரம் பொருள்! ஒவ்வொரு நாளும் ஒரு புதுச் சூழல் சந்தையில் நிலவுகிறது. நேற்று நம் வாடிக்கையாளராக இருந்தவன், இன்று அவ்வாறு தொடர வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து கொண்டே செல்கிறது.

அடுத்தவர் நலனுக்காக வாழ்பவரே தலைமைப் பண்புமிக்கவர். இந்திரர்க்குரிய அமுதமே கிடைப்பதாயினும் அது நமக்கு இனியது எனக் கருதித் தாமே தனித்து உண்ணாதவர் அவர். அப்படித்தான் அதியன் அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தான். இவ்வாறு நிருவாக நெறிகளை இலக்கியங்கள் பகர்ந்தன.

உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலாண்மைக் கருத்துகள் மென்மையாகப் பரவிக் கிடக்கின்றன. அவை பன்னீர் புஷ்பங்கள் காற்றில் பரவவிடும் மணத்தைப் போல வசீகரமானவை. அவற்றை அப்படியே சிதைத்துக் குப்பிகளில் அடைக்க அவற்றின் படைப்பாளர்கள் முனையவில்லை. மகத்தான மனிதர்களின் வீழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அவர்கள், பலவீனங்களைக் கோடிட்டு எச்சரித்தும் நன்னெறிகளை நம் மனத்தில் இருத்தவும் படைத்தார்கள்; உள் மனத்தில் அவை எதிரொலித்து அறிவுறுத்தும் வகையில் காவியங்கள் மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும், கவிதைகள் வாயிலாகவும், உருவகக் கதைகள் ஊடாகவும் நம் முன்னோர்கள் முயன்றனர். அவற்றுள் தலையாய வெளிப்பாடே மேலாண்மைக் கருத்துகள் ஆகும்.


நூல்வெளி 

இப்பாடப்பகுதி வெ. இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர். 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர். தமிழ் இலக்கியப் பற்றுடைய இவர், தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்; பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களிலும் பங்களிப்பைச் செய்து வருபவர். இவர் எழுதிய ‘வாய்க்கால் மீன்கள்' என்னும் கவிதை நூல், 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது. சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவர் படைப்புக்களம் விரிவானது.


Tags : by v. Eraianbu e.aa.pa | Chapter 7 | 12th Tamil வெ. இறையன்பு இ.ஆ.ப | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal : Prose: Ilakkiyatil malannmai by v. Eraianbu e.aa.pa | Chapter 7 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : உரைநடை: இலக்கியத்தில் மேலாண்மை - வெ. இறையன்பு இ.ஆ.ப | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்