Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

ஐராவதம் மகாதேவன் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

   Posted On :  02.08.2022 04:48 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

துணைப்பாடம்: சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : துணைப்பாடம்: சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் - ஐராவதம் மகாதேவன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

நிருவாகம் – எ 

சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

- ஐராவதம் மகாதேவன்நுழையும்முன்

தொல்லியல் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி. கல்வெட்டுகள் கடந்த காலத்தின் பக்கங்கள். தென்னிந்தியா, கல்வெட்டுகளின் களஞ்சியம். கல்வெட்டை ஆய்வது எளிதன்று. புலப்படாத எழுத்து, அகராதியில் அடங்காத சொற்கள், வழக்கிலில்லாத செய்திகள் எனப் பல தடைகள். இத்தடைகளைக் கடந்து கல்வெட்டுகளைப் படித்து உண்மைகளை அறிதல் கடினம். கல்வெட்டில் எழுத்துருக்களை ஆய்வது மிகக் கடினமான பணி. சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி ஐராவதம் மகாதேவன். ஆய்வில், உண்மைகளைக் காண்கையில் ஊற்றெடுக்கும் உவகையை அவர் எழுத்தின் வழியே நாமும் அடைவோம்.


கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகளைக் கண்டறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அதை ஒட்டி உலகத் தமிழ்க் கருத்தரங்குகளில் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைப் பற்றி எழுந்த சுவையான விவாதங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஆகும். அவற்றுள் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநர் ஆகப் பணியாற்றி வந்தேன். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தேன். அதே நேரத்தில்தான் ஓய்வு கிடைக்கும்பொழுது மலைச் சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சேகரிக்கும் சொந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். எனக்கு அப்பொழுது இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று, பொருள் விளங்கவில்லை என்று அறிஞர்களால் அநேகமாகக் கைவிடப்பட்டிருந்த தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சரிவர வாசிக்கும் முறையைக் கண்டறிய வேண்டும்; மற்றொன்று, சங்ககாலத் தமிழ் மன்னர்களைப் பற்றிய எவ்விதமான புறச்சான்றுகளுமே தமிழகத்தில் கிடைக்கவில்லை என்ற குறை நீங்குமாறு அவர்களுடைய பெயர்களையோ மற்ற குறிப்புகளையோ இக்கல்வெட்டுகளில் காணவேண்டும் என்பனவாகும். இவ்விரு ஆசைகளும் நிறைவேறியது எனக்குக் கிடைத்த பெரும் பேறுகள் என்றே கருதுகிறேன். தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகள் தமிழிலேயே எழுதப்பட்டவை என்றும் அவைகளைப் பொருள் சிறக்க வாசிக்க ஒரு முறை இருக்கிறது என்றும் நான் கண்டறிந்த ஆராய்ச்சிகளைப் பற்றி இங்குக் கூற இடமில்லை . சங்க காலத் தமிழ் மன்னர்கள் முதன் முதலாகத் தமிழகக் கல்வெட்டுகளில் தோன்றிய கதையை மட்டும் இங்குக் கூறலாம் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசின் தொல் பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927 - 28 ஆம் ஆண்டுகளின் தொகுதியில் புகளூர்க் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன. 


இவ்வறிக்கையில் ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டு இருப்பதாகவும், அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதைச் சரிவரப் படிக்க முடியவில்லை என்றும் அதில் ஆதன் என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மிகச் சுருக்கமாக ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்களைக் கொண்டு மட்டுமே பொறிக்கப்பட்டவை. இந்நிலையில், நான்கு வரிகளாலான மிக நீளமான கல்வெட்டு அதிலும் சேர மன்னர்களைக் குறிக்கக் கூடிய ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் நாற்பது ஆண்டுகளாக வாசிக்கப்படாமல் இருந்து வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. என்றாவது ஒருநாள் நேரில் போய்ப் பார்த்து இக்கல்வெட்டைத் தீர ஆராய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

அந்த நாளும் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று வந்தது. அன்று கரூருக்கு அருகில் கட்டப்பட்டு வந்த கூட்டுறவு நூற்பாலையைப் பார்வையிடச் சென்றிருந்தேன். என் வழக்கப்படி, கையுடன் அருகாமையிலுள்ள பழங்கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்புகளையும் எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றுள் ஒரு குறிப்பு மேற்கூறிய ஆறுநாட்டான் குன்றிலுள்ள கல்வெட்டுகளைப் பற்றியது ஆகும். நூற்பு ஆலையில் என்னுடைய அலுவல்களை முடித்துக்கொண்டு மாலை நேரத்தில் நானும் மற்றும் சில நண்பர்களுமாகக் காரில் ஆறுநாட்டான் குன்றின் அடிவாரம் வரை சென்றோம். அதற்குமுன் எங்களில் எவரும் அச்சிற்றூருக்குப் போனது இல்லை; மலையின் மீது ஏற கிழக்குப் பக்கத்திலிருந்து படிக்கட்டுகள் இருப்பது கூட எங்களுக்கு அப்பொழுது தெரியாது. பெரும்பாலும் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் மனித சஞ்சாரம் அற்ற முள் புதர்கள் நிறைந்த குன்றுகளில்தான் இருக்கின்றன! அதே நினைவில் எவரையும் வழி கேட்காது குன்றின் தென்புறம் இருக்கும் ஒரு கரடுமுரடான சரிவின் வழியாக வியர்க்க விறுவிறுக்க, குன்றின் மீது ஏறி உச்சியின் தெற்குச் சாரலை அடைந்தோம். 

தெரியுமா?

தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 'பிராம்மி' வரிவடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் அசோகர் காலத்திய பிராம்மி வரிவடிவத்திலிருந்து முரண்பாடுகள் தெரியவருகின்றன. இவற்றை இக்கல்வெட்டுகளை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் தன்னுடைய ஆய்வு நூலான ‘எர்லி தமிழ் எபிகிராபி’ யில் தெளிவுபடுத்துகிறார்.

தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி  என்றழைக்காமல் ‘தமிழி' என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

மேலைக் கோடியில் தென்முகமாக இருந்த குகையின் உயரமான வாயிலுக்கு மேலாக வெட்டப்பட்டிருந்த பிராம்மிக் கல்வெட்டு மஞ்சள் நிறமான மாலை வெய்யிலில் பளிச்சென்று தெரிந்தது. கல்வெட்டு மிகவும் தேய்ந்துபோய் அங்கொன்றும் இங்கொன்றும் ஆகச் சில எழுத்துகள் மட்டும்தான் தெரியும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடையத் தயாராகத்தான் வந்திருந்தேன். ஆனால் நான் கண்டது வேறு; மிகப்பெரிய எழுத்துகளில் நான்கு நீண்ட வரிகளில் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது அக்கல்வெட்டு. முதலிலும் முடிவிலும் ஓரிரு எழுத்துகள் நீங்கலாக ஏனைய எழுத்துகளைப் படிப்பதும் எனக்குக் கடினமாகவே இல்லை. இந்தக் கல்வெட்டையா நாற்பது ஆண்டுகளாகப் படிக்க முடியவில்லை என்று விட்டுவிட்டார்கள் என்ற வியப்பு அன்று மேலோங்கியது; இன்றும் தணியவில்லை.


கையுடன் எடுத்து வந்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து, கல்வெட்டை எழுத்துக் கூட்டி வாசித்த வண்ணம் படியெடுக்கலானேன். முதல் வரியில் புதுமை எதுவும் இல்லை யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும்பாலும் ஏனைய தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள் போலவே இருந்தது. அடுத்த வரிக்குப் போனேன்: இரண்டாவது வரியில் கோ என்ற முதல் சொல்லைக் கண்டவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது; சங்க காலத் தமிழ் மன்னரின் கல்வெட்டுகள் இது என்பது உறுதியானது. மேலும் படித்தேன் இரண்டாம் வரியை.

'கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்’ என்ற சொற்களைப் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட வியப்பையும் மகிழ்ச்சியையும் சொல்லி மாளாது! ஆனாலும் தமிழிலும் வரலாற்றுத் துறையிலும் ஈடுபாடு உள்ள அன்பர்களுக்கு எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தை விளக்க அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்தடுத்து 'பெருங்கடுங்கோன்', 'இளங்கடுங்கோ', இளங்கோ' என்ற பெயர்களைப் படித்தபொழுது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சங்க நூல்களில் மட்டும் இதுவரை காணப்பட்ட பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்களைத் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு கல்வெட்டில் கண்டுவிட்ட ஆனந்தத்தில் நோட்டுப் புத்தகத்தைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு கூத்தாடினேன். என்னுடன் வந்தவர்கள், என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்!

என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அக்கல்வெட்டின் முழு வாசகம் பின்வருமாறு:

“....அம்மண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் 

கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் 

பெருங் கடுங்கோன் மகன் (இ)ளங் 

கடுங்கோ (இ)எங்கோ ஆக அறுத்த கல்"

இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்தது. பதிற்றுப்பத்திலும் ஏனைய சில சங்க நூல்களிலும் பாடப்பெற்ற பழந்தமிழ் மன்னர்கள் இவர்கள். இக்கல்வெட்டு ஏறத்தாழ கி.பி. (பொ.ஆ.) இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இச்செய்திகள் மட்டும் எனக்கு அப்பொழுதே விளக்கமாகத் தெரிந்தன. அதற்குள் இருட்டிவிட்டதால் மற்ற கல்வெட்டுகளை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று (கீழ்ப்புறம் இருந்த படிக்கட்டுகள் வழியாக!) இறங்கிக் கரூருக்குத் திரும்பினோம்.

நான் சென்னை வந்த அன்றே வரலாற்றுப் பேராசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் வீட்டுக்குச் சென்று நான் எடுத்து வந்த கல்வெட்டுப் படியைக் காட்டினேன். அவர் அப்பொழுது என்னிடம் கேட்ட கேள்வி இன்றும் நினைவில் இருக்கிறது. "கையால் தானே எழுதியிருக்கிறீர்கள்; ஒழுங்காகப் படியெடுத்தீர்களா?" என்று கேட்டார்! ஆராய்ச்சி முறைகளில் அவருக்கு இருந்த அழுத்தத்தையும் உண்மைப்பற்றையும் படிப்பினைகளாகக் கொண்டேன் அன்று. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே கரூரிலிருந்த நண்பர்களின் உதவியால் அந்தக் குகை வாயிலில் மூங்கிலால் சாரம் கட்டி அதன் மீது ஏறி நின்று பாறையின் மீது மெல்லிய தாட்களைப் பரப்பிக் கல்வெட்டை எழுத்தெழுத்தாகக் கவனமாகப் படியெக்க ஏற்பாடு செய்தேன். அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் கரூருக்குச் செல்லும்

தெரிந்து தெளிவோம்

புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6ஆவது 7ஆவது 8ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று ஐராவதம் மகாதேவன் எழுதியிருந்தார். இதை மறுத்து இம்மன்னர்கள் முறையே 7ஆவது 8ஆவது 9ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார் மாணவர் ஒருவர். அதைச் சரியென்று உணர்ந்த மகாதேவன் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் அறிஞர்கள் முன்னிலையில் அதைக்குறிப்பிட்டு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். ஆய்வில் உண்மையை ஏற்றுக்கொள்வது : தவற்றைத் திருத்திக்கொள்வது என்னும் உயரிய : நெறி அவரிடம் இருந்தது.

தெரியுமா? 

“1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் (இயல் - 1 முகப்புப் படம்) சங்ககாலப் பாண்டிய மன்னாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. (பொ. ஆ.) 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன்".

 - ஐராவதம் மகாதேவன் நூற்றாண்டு மாணிக்கம், பக்.109

பொழுதெல்லாம் புகளூருக்கும் 'தலயாத்திரை' சென்று ஆறுநாட்டான் குன்றிலிருந்த எல்லா பிராம்மிக் கல்வெட்டுகளையும் ஒன்றொன்றாகப் படியெடுத்து முடித்தேன். அதே ஆண்டு மார்ச் மாதம் ஹிந்து தினத் தாளில் புகளூர்க் கல்வெட்டுகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பையும் வெளியிட்டேன்.

பிறகு ஒரு நாள் என் ஆராய்ச்சிக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு கோவையில் அப்பொழுது வசித்து வந்த திரு.கே.வி. சுப்பிரமணியனார் அவர்களைக் காணச் சென்றேன். அவர்தான் தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர். இக்கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ, ள, ற, ன ஆகியவை வருவதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று நிறுவிய சீரிய ஆராய்ச்சியாளர் கே.வி. சுப்பிரமணியனார். வயது மிகவும் முதிர்ந்து, உடல் தளர்ந்து, கண் பார்வை சரியாக இல்லாத நிலையிலும் புகளூர்க் கல்வெட்டைப் பற்றிய செய்திகளைத் தினத் தாள்களில் படிக்கக் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தார் அவர். நான் அவர் முன் அமர்ந்தவுடன், 'சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டைப் பற்றி எழுதியவர் நீங்கள் தானா?' என்று கேட்டார். நான் 'ஆம் என்றவுடன் தன் கை விரல்களால் என் முகத்தைத் தடவிப் பார்த்தார்; அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது; "நீங்கள் கொடுத்து வைத்தவர்!" என்று ஆசி கூறினார். அப்பெரியவரின் கல்விப் பற்றையும் தூய உள்ளத்தையும் அன்பையும் நினைத்து நினைத்து என் உள்ளம் நெகிழ்கிறது.

நன்றி : 'கல்வெட்டு' இதழ்.


நூல்வெளி

ஐராவதம் மகாதேவன் எழுதிய இக்கட்டுரை ‘கல்வெட்டு’ இதழில் வெளிவந்தது. இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார். தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார். சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவருடைய ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்பட்டுள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை இவர் கண்டுபிடித்தது, இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது. பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி இவர் தந்தது, இமயப் பணி.


Tags : by Airavatham magadheevan | Chapter 7 | 12th Tamil ஐராவதம் மகாதேவன் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal : Supplementary: Sangakala kalvettum en ninaivugalum by Airavatham magadheevan | Chapter 7 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : துணைப்பாடம்: சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் - ஐராவதம் மகாதேவன் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்