Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: தேயிலைத் தோட்டப் பாட்டு

முகம்மது இராவுத்தர் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: தேயிலைத் தோட்டப் பாட்டு | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

   Posted On :  02.08.2022 04:40 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

செய்யுள்: தேயிலைத் தோட்டப் பாட்டு

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : செய்யுள்: தேயிலைத் தோட்டப் பாட்டு - முகம்மது இராவுத்தர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

நிருவாகம் – எ 

தேயிலைத் தோட்டப் பாட்டு

- முகம்மது இராவுத்தர்நுழையும்முன்

19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகவும் தேயிலைத் தோட்டக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்தனர்; துன்பக்கேணியில் அகப்பட்டவராயினர். விளிம்பு நிலை வாழ்வு துயரம் தோய்ந்தது. அவர் விம்மி விம்மி அழுத குரலைக் காற்று கேட்டிருக்கலாம். தஞ்சமுமில்லாத அவர்கள் நிலையைப் பாரதி பாடினார். வெகுசனங்களிடையே கும்மிப் பாடல்களாக வந்த இத்தகைய சிறு நூல்கள் இத்துயரத்தைப் பேசின.


கும்மி 

ஆதியி லேநம திந்திய தேசத்தில்

ஆன பலவிதக் கைத்தொழில்கள் - மிக 

சாதன மாகவே ஓங்கிக் குடிகொண்டு 

சாலச் சிறப்புடனே திகழ்ந்தே


நாகரீகத்திலும் ராஜரீ கத்திலும்

நாடெங்கும் எந்நாளுங் கொண்டாடிட - அருஞ் 

சேகரம் போலச் சிறந்து விளங்கிடும் 

செல்வ மலிந்த திருநாடு


இத்தகைச் சீரும் சிறப்பும் கொண்டநம

திந்திய தேசத்தில் அன்னியர்கள் - நடு 

மத்தியில் வந்து குடி புகுந்து வரு 

மானங் கொடுத்து ரட்சித்து வரும்


கைத்தொழில் யாவையுங் கொஞ்சங் கொஞ்சமாகக்

காத் திருந்து சமயம் பார்த்து உள்ள 

அத்தனையுங் கொள்ளை யிட்டுக் கொண்டுநம்மை 

அற்பப் பிராணி போற் செய்ததினால்


உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் 

உற்ற பலவித வேலை செய்து - நாம் 

பெண்டு பிள்ளையுடன் கஷ்டப் பட்டுத்தினம் 

பேயினும் நாயினும் கீழாகினம்


வேலைக்கு வாரீரோ என்று சொல்லிப்பல 

வித்தார மாகவே நோட்டீ ஸொட்டி நம்மை 

ஆலைக் கரும்புபோ லாட்டிக் குரங்காட்டும் 

அந்தக் கங்காணிகள் கூப் பிடவே


ஒன்றுக்குப் பத்துநூறா யிரமாக வே 

ஒவ்வொரு கூலி ஜனங்கள்மீதும்-மிகத் 

தண்டு முண்டுமாய்க் கணக் கெழுதியவர் 

சாகும் வரைக்குந் தலைச் சுமையாய்


பற்றுவரவு குறிப்புப் பேரேட்டி னிற் 

பாக்கி யிருக்கும் படி யெழுதி-அவர் 

சற்றுந் தயவு மில்லாமலே கூலி 

ஜனங்களைக் கப்ப லிலே யேற்றி


அக்கரை தேசத்தின் லங்கைத் தீவுக்குள்ளே 

அந்தமான் தீவு போன்ற இடத்தில் மிகச் 

சிக்கன மாகவே வெள்ளையர் தங்களின் 

தேயிலைத் தோட்டத்திற் சேர்த்திடுவார்


உண்ண வுணவுக்கு முள்ள செலவுக்கும் 

ஒவ்வொரு நாளும் அரிதாகி-சிறு 

மண்ணுளிப் பாம்புபோற் பெண்டு பிள்ளையுடன்

வாழ்ந்து வருவதைக் காணீரோ


ஆதலாலே யினியிந்த சகோதர 

அன்புள்ள சோதரி காளினிமேல்-இந்தப் 

பூததயை யில்லாக் கங்காணிகள் செப்பும்

பொய்யுரை கண்டு மயங்காதீர்


இப்படிச் சென்றந்தத் தேயிலைத் தோட்டத்தில்

இந்தியர் துன்பப் படுவதற்கு-மன

தொப்பிய கல்வியொழுக்கம் நாகரீகம் 

ஒன்றேனு மில்லாக் குறையெனவே


இன்றேனுங் கண்டுங்கள் பிள்ளைகளுக் கெல்லாம்

ஏற்றமுள்ள கல்வியைப் புகட்டி-நீங்கள் 

ஒன்றுங் குறையில்லா ஒற்றுமையாகவே

ஊரிற் கட்டுப்பாடு செய்குவீரே.நூல்வெளி

நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கும்மிப் பாடல்கள் ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து' என்ற ‘தேயிலைத் தோட்டப் பாட்டு’ என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை. மக்கள் இயல்பாகத் தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். பல்வேறு பொருள்கள் பற்றிய இவ்வெளிப்பாடுகள் மெல்லிய தாளில், பெரிய எழுத்தில், மலிவான அச்சில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறு சிறு நூல்களாக வெளியிடப்பட்டன. வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப்பாடல்கள் என்று இந்நூல்கள் பலவாறாக அழைக்கப்பட்டன. செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் இத்தகைய நூல்கள் பாடுபொருள்களாக்கின.


Tags : by Mugamathu Rao Uttar | Chapter 7 | 12th Tamil முகம்மது இராவுத்தர் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal : Poem: Theilai thotta pattu by Mugamathu Rao Uttar | Chapter 7 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : செய்யுள்: தேயிலைத் தோட்டப் பாட்டு - முகம்மது இராவுத்தர் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்