பிசிராந்தையார் | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: புறநானூறு | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal
கவிதைப்பேழை
நிருவாகம் – எ
புறநானூறு
- பிசிராந்தையார்
நுழையும்முன்
குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே சிறந்த அரசன். மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்படுவது நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கும். அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சங்கப் புலவர்கள் மேற்கொண்டனர். புலவர்களின் அறிவுரைகளைத் தலைமேற்கொண்டு அரசர்களும் செயல்பட்டனர். சங்கப் பாடல் தொகுப்பில் இத்தகைய செவியறிவுறூஉ என்னும் துறைப்பாடல்கள் நாட்டு நலனையும் நிருவாகச் சீர்மையையும் பாடுவனவாக உள்ளன.
*காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;*
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. (184)
பா வகை : நேரிசை ஆசிரியப்பா
திணை: பாடாண்.
பாடாண் திணை - ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
துறை: செவியறிவுறூஉ.
செவியறிவுறூஉ துறை - அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
சொல்லும் பொருளும்:
காய் நெல் - விளைந்த நெல்.
மா - ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
செறு - வயல்;
தமித்து - தனித்து;
புக்கு - புகுந்து.
யாத்து - சேர்த்து;
நந்தும் - தழைக்கும்.
வரிசை - முறைமை;
கல் - ஒலிக்குறிப்பு.
பரிவு - அன்பு;
தப - கெட;
பிண்டம் - வரி;
நச்சின் - விரும்பினால்.
உரை:
ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்
இலக்கணக் குறிப்பு
காய்நெல் - வினைத்தொகை
புக்க - பெயரெச்சம்
அறியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உறுப்பிலக்கணம்
அறிந்து = அறி + த்(ந்) + த் + உ
அறி - பகுதி
த் - சந்தி (ந் ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
அறுத்து = அறு + த் + த் + உ
அறு - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
நூல்வெளி
இப்பாடப்பகுதி புறநானூற்றின் 184ஆவது பாடல் ஆகும். புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது; பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது. முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உ.வே.சா. அச்சில் பதிப்பித்தார். இதன் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி. பிசிரந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்.