Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | ஜிம்னோஸ்பெர்ம்கள்

பொதுப்பண்புகள், வகைப்பாடு, பொருளாதார முக்கியத்துவம், தோற்றம், இனப்பெருக்கம் - ஜிம்னோஸ்பெர்ம்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

   Posted On :  05.07.2022 02:43 am

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

ஜிம்னோஸ்பெர்ம்கள்

ஜிம்னோஸ்பெர்ம்கள் (கிரேக்கம் : ஜிம்னோ = திறந்த, ஸ்பெர்மா = விதை) திறந்த விதைத்தாவரங்கள் ஆகும்.

ஜிம்னோஸ்பெர்ம்கள்

திறந்த விதைத் தாவரங்கள்

மைக்கேல் கிரிக்டனுடைய அறிவியல் சார்ந்த கற்பனை கதையைத் தழுவி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்பவர் 1993 ஆம் ஆண்டு 'ஜூராசிக் பார்க்' என்ற திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படத்தில் ஆம்பர் எனும் ஒளி புகும் பிசின் பொருள் பூச்சிகளை உட்பொதித்து வைத்து அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதைக் கண்டுள்ளீர்களா?


ஆம்பர் என்பது என்ன? எந்தப் பிரிவு தாவரம் ஆம்பரைத் தருகிறது?

ஆம்பர் என்பது தாவரங்கள் சுரக்கும் திறன்மிக்க ஒரு பாதுகாக்கும் பொருளாகும். இதன் சிதைவடையா பண்பு அழிந்துபோன உயிரினங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. பைனிட்டிஸ்சக்ஸினிஃபெரா என்ற ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆம்பரை உற்பத்தி செய்கிறது.

இப்பாடப்பிரிவில் விதைகளைத் தோற்றுவிக்கும் ஒரு பிரிவுத் தாவரமான ஜிம்னோஸ்பெர்ம்கள் பற்றி விரிவாகவிவாதிக்க உள்ளோம். ஜிம்னோஸ்பெர்ம்கள் (கிரேக்கம் : ஜிம்னோ = திறந்த, ஸ்பெர்மா = விதை) திறந்த விதைத்தாவரங்கள் ஆகும். இத்தாவரங்கள் மீசோசோயிக் ஊழியின் ஜூராசிக் மற்றும் கிரிடேசியஸ் காலத்தில் அதிக அளவில் பரவிக் காணப்பட்டன. இத்தாவரங்கள் உலகின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.

 

பொதுப்பண்புகள்

• பெரும்பாலானவை பசுமை மாறா மரங்கள் அல்லது புதர்ச்செடிகளாக உள்ளன. ஒருசிலவன் கொடிகளாக (Lianas) உள்ளன. எடுத்துக்காட்டு: நீட்டம்.

• தாவர உடல் வித்தகத்தாவரச் (2n) சந்ததியைச் சார்ந்தது. இது வேர், தண்டு, இலை என வேறுபாடுற்று காணப்படுகிறது.

• நன்கு வளர்ச்சியடைந்த ஆணி வேர்த்தொகுப்பு காணப்படுகிறது. சைகஸ்தாவரத்தில் காணப்படும் பவழவேர்கள் நீலப்பசும்பாசிகளுடன் ஒருங்குயிரி வாழ்க்கை மேற்கொள்கிறது. பைனஸ் தாவரத்தின் வேர்கள் பூஞ்சைவேரிகளைக் கொண்டுள்ளன.

• தரை மேல் காணப்படும் நிமிர்ந்த கட்டைத்தன்மையுடைய தண்டு கிளைத்தோ, கிளைக்காமலோ (சைகஸ்) இலைத்தழும்புடன் காணப்படும்.

• கோனிஃபெர் தாவரங்களில் வரம்புவளர்ச்சிகொண்ட கிளைகள், வரம்பற்ற வளர்ச்சி கொண்ட கிளைகள் என இருவகைக் கிளைகள் காணப்படுகின்றன.

• மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலைகள் காணப்படுகின்றன. அவை தழை மற்றும் செதில் இலைகளாகும். தழை இலைகள் பசுமையான, ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும் வரம்பு வளர்ச்சி கொண்ட கிளைகளில் தோன்றுகின்றன. இவை வறள் தாவர பண்புகளைக் கொண்டுள்ளன.

• சைலத்தில் டிரக்கீடுகள் காணப்படுகின்றன. நீட்டம் மற்றும் எபிட்ராவில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன. 

• பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுகிறது. பாரங்கைமா அதிகம் கொண்ட மானோசைலிக் - துளையுடைய மென்மையான அதிகப் பாரங்கைமா பெற்று அகன்ற மெடுல்லரி கதிர் கொண்டது (சைகஸ்) அல்லது பிக்னோசைலிக் - குறுகிய மெடுல்லரி கதிர் கொண்டு அடர்த்தியாக உள்ளவை (பைனஸ்) கட்டைகள் காணப்படுகின்றன. .

• இவை மாற்றுவித்துத் தன்மையுடையவை. இருபால் வகை தாவரங்கள் (பைனஸ்) அல்லது ஒருபால் வகை தாவரங்கள் (சைகஸ்) காணப்படுகின்றன.

• நுண்வித்தகம் மற்றும் பெருவித்தகம் முறையே நுண்வித்தகயிலை மற்றும் பெருவித்தகயிலைகளில் தோன்றுகின்றன

• ஆண் மற்றும் பெண் கூம்புகள் தனித்தனியே உண்டாக்கப்படுகின்றன.

 • காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

• ஆண் உட்கருக்கள் மகரந்தக் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு (சைஃபனோகேமி) கருவுறுதல் நடைபெறுகிறது.

• பல்கருநிலை காணப்படுகிறது. திறந்த சூல்கள் விதைகளாக மாற்றமடைகின்றன. ஒற்றைமடிய (n) கருவூண்திசு கருவுறுதலுக்கு முன்பாகவே உருவாகிறது. 

• வாழ்க்கைச் சுழற்சியில் ஓங்கிய வித்தகத்தாவர சந்ததியும், மிகக் குறுகிய கேமீட்டகத்தாவர சந்ததியும் கொண்ட தெளிவான சந்ததி மாற்றம் நிகழ்கிறது.

சில ஜிம்னோஸ்பெர்ம்களின் படங்கள் படம் 2.8-ல் கொடுக்கப்பட்டுள்ளது.


 

 

ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாடு

ஸ்போர்ன் (1965) ஜிம்னோஸ்பெர்ம்களை 3 வகுப்புகளின் கீழ் 9 துறைகளாகவும் 31 குடும்பங்களாகவும் வகைப்படுத்தியுள்ளார்.

அவை: (1) சைக்கடாப்சிடா (2) கோனிஃபெராப்சிடா (3) நீட்டாப்சிடா.

முக்கிய வகுப்புகளின் பொதுப்பண்புகள்

வகுப்பு I - சைக்கடாப்சிடா

• பனை போன்ற அல்லது பெரணி போன்ற அமைப்புடைய தாவரங்கள்

• பெரிய அளவுடைய சிறகுக் கூட்டிலைகள் உள்ளன

• மானோசைலிக் கட்டை

• நகரும் ஆண் கேமீட்கள் உள்ளன

• மலர் போன்ற அமைப்புகள் காணப்படுவதில்லை.

எளிய ஸ்ட்ரோபிலஸ்கள் உள்ளன

எடுத்துக்காட்டு: சைகஸ், ஜாமியா

வகுப்பு II – கோனிபெராப்சிடா

• பல வடிவுடைய எளிய இலைகளைக் கொண்ட உயர்ந்த மரங்கள்

• பிக்னோசைலிக் வகைக் கட்டை

• கூம்பு போன்ற ஸ்ட்ரோபிலஸ்கள் உள்ளன

• நகரும் ஆண் கேமீட்கள் காணப்படுவதில்லை

(ஜிங்கோ பைலோபா தவிர)

எடுத்துக்காட்டு: பைனஸ்


வகுப்பு III – நீட்டாப்சிடா

• புதர் தாவரங்கள், செடிகள், வன்கொடிகள்

• இலைகள் நீள்வட்ட வடிவம் அல்லது சிறுநா வடிவதில் உள்ளன. எளிய, எதிர் அல்லது வட்ட இலையடுக்கம்

• நகரும் ஆண்கேமீட்கள் காணப்படுவதில்லை

• கட்டைகளில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன

• ஸ்ட்ரோபிலஸ்கள் மஞ்சரி என அறிப்படுகின்றன

• பூவிதழ்களைக் கொண்ட மலர் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு: நீட்டம், எஃபிட்ரா

 

ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும் இடையே ஓர் ஒப்பீடு

ஒத்த பண்புகள்

• வேர், தண்டு, இலைகளைக் கொண்ட நன்கு வரையறுக்கப்பட்ட தாவர உடல் காணப்படுதல்

• இருவிதையிலைத் தாவரங்களில் உள்ளது போலவே ஜிம்னோஸ்பெர்ம்களிலும் கேம்பியத்தைக் கொண்டிருத்தல்

• தண்டில் யூஸ்டீல் காணப்படுதல்

• நீட்டம் தாவரத்தில் காணப்படும் இனப்பெருக்க உறுப்புகள் மூடுதாவரங்களின் (Angiosperm) மலர்களை ஒத்திருத்தல்

• கருமுட்டை வித்தகத்தாவரத்தின் முதல் செல்லைக் குறிக்கிறது

• சூல்களைச் சூழ்ந்து சூலுறை காணப்படுதல்

.• இரு தாவரக் குழுமங்களும் விதைகளை உண்டாக்குதல்

• ஆண் உட்கருக்கள் மகரந்தக்குழல் உதவியுடன் எடுத்துச் செல்லப்படுகின்றன. (சைஃபனோகேமி)

• யூஸ்டீல் காணப்படுகிறது

ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும் ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் அட்டவணை 2.5 ல் கொடுக்கப்பட்டுள்ளது

 

அட்டவணை 2.5: ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும் ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்

வ. எண். ஜிம்னோஸ்பெர்ம்கள்

1. பொதுவாகச் சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை (நீட்டேல்ஸ் நீங்கலாக)

2. ஃபுளோயத்தில் துணை செல்கள் காணப்படுவதில்லை.

3. சூல்கள் திறந்தவை

4. பொதுவாக மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலம் நடைபெறுகிறது.

5. இரட்டைக் கருவுறுதல் இல்லை

6. ஒற்றைமடிய கருவூண்திசு காணப்படுகிறது

7. கனி தோன்றுவதில்லை

8. மலர்கள் காணப்படுவதில்லை 

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

1. பொதுவாகச் சைலக்குழாய்கள்  காணப்படுகின்றன.

2. துணைசெல்கள் காணப்படுகின்றன.

3. சூல்கள் சூலகத்தால் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.

4. பூச்சிகள், காற்று, நீர், பறவைகள், விலங்குகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது

5. இரட்டைக் கருவுறுதல் உண்டு

6. மும்மடிய கருவூண் திசு காணப்படுகிறது

7. கனி தோன்றுகிறது

8. மலர்கள் காணப்படுகின்றன.


 

ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவம்



சைகஸ்

வகுப்பு - சைக்கடாப்சிடா

துறை - சைக்கடேல்ஸ்

குடும்பம் - சைக்கடேசி

பேரினம் - சைகஸ்

சைகஸ் தாவரங்கள் உலகின் கிழக்கு துருவப் பகுதிகளில் வெப்பமண்டல, மிதவெப்பமண்டலப் பகுதிகளில் அதிகளவில் பரவியுள்ளன. சைகஸ் ரெவல்யூட்டா, சை. பெட்டோமி, சை. சிர்சினாலிஸ், சை. ராம்ஃபி போன்றவை பொதுவாகக் காணப்படும். சைகஸ் சிற்றினங்களாகும். தாவர உடல் வித்தகதாவர சந்ததியைச் சார்ந்தது. மிகவும் மெதுவாக வளரக்கூடியது. பசுமைமாறா வறள்நிலத் தாவரமான சைகஸ் தோற்றத்தில் சிறிய பனை மரத்தை ஒத்திருக்கும்.

வித்தகத்தாவரம் (Sporophyte)

வித்தகத்தாவரம் வேர், தண்டு, இலை என வேறுபாடடைந்து காணப்படுகிறது. தூண் போன்ற தண்டின் நுனிப்பகுதியில் சிறகு வடிவக் கூட்டிலைகள் சுழல் முறையில் அமைந்து மகுடம் போல் அமைந்துள்ளன. (படம் 2.23).


புறப்பண்புகள்

வேர்

சைகஸில் இருவகையான வேர்கள் காணப்படுகின்றன. அவை ஆணிவேர், பவழவேர். முதல்நிலை வேர் நிலைத்து நின்று ஆணிவேராகிறது. சில பக்கவாட்டு வேர்கள் கிளைத்துத் தரைக்குச் சற்று மேலாக வளர்கின்றன. அவை மீண்டும் மீண்டும் கவட்டை முறையில் கிளைத்துப் பவழம் போன்று காட்சியளிப்பதால் பவழ வேர்கள் என அறியப்படுகிறது. நைட்ரஜனை நிலைநிறுத்த உதவும் நீலப்பசும்பாசிகள் அனபீனா சிற்றினம் இந்த வேர்களின் புறணிப் பகுதியில் காணப்படுகின்றன (படம் 2.24)


தண்டு

கிளைகளற்றுத் தூண்போன்ற கட்டை தன்மையான தண்டு. நிலைத்த கட்டைத்தன்மை கொண்ட இலையடிப் பகுதிகள் தண்டினைச் சூழ்ந்து காணப்படும். தண்டின் அடிப்பகுதி வேற்றிட மொட்டுகளைத் தாங்கியுள்ளன.

இலைகள்

சைகஸ் இருவகையான இலைகளைக் கொண்டுள்ளது.

i. தழை இலைகள் அல்லது ஒளிச்சேர்க்கை இலைகள் (Foliage leaves)

ii. செதில் இலைகள் (Scale leaves)

i. தழை இலைகள்

இவை பெரிய அளவுடைய சிறகுக் கூட்டிலைகளாகும். தண்டின் உச்சியில் மகுடம் போல் அமைந்துள்ளன. ஒவ்வொரு கூட்டிலையும் 80 முதல் 100 வரை காம்பற்ற இணை சிற்றிலைகளைக் கொண்டது. சிற்றிலையின் நுனி கூர்மையானது அல்லது முட்கள் போன்றது. இதில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டும் கொண்டிருக்கும், பக்க நரம்புகள் காணப்படுவதில்லை. அடிச்சுருள் அமைப்பு (Circinate vernation) காணப்படுவதோடு ரேமண்டா வினால் மூடப்பட்டுள்ளன.

ii. செதில் இலைகள்

இவை பழுப்பு நிறத்துடன் கூடிய, சிறிய, முக்கோண வடிவிலான, நிலைத்த பாதுகாத்தல் பணியை மேற்கொள்கின்ற இலைகளாகும்.

உள்ளமைப்பு

வேரின் குறுக்குவெட்டுத் தோற்றம்

முதல்நிலை வேரின் உள்ளமைப்பு பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. எபிபிளம்மா 2. புறணி 3. வாஸ்குலப் பகுதி (படம் 2.25) வேரின் வெளிப்புற அடுக்கான எபிபிளம்மா ஓரடுக்கு பாரங்கைமா செல்களால் ஆனது. இதற்கு உட்புறமாக மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்களால் ஆன புறணி காணப்படுகிறது. அகத்தோல் புறணியின் கடைசி அடுக்காக அமைந்துள்ளது. பல அடுக்கு பாரங்கைமா செல்களால் ஆன பெரிசைக்கிள் வாஸ்குலத் திசுக்களைச் சூழ்ந்து அமைந்துள்ளது. இளம் வேரில் இருமுனை சைலமும். முதிர்ந்த வேரில் நான்கு முனை சைலமும் காணப்படுகிறது. வேரில் இரண்டாம்நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. பவழ வேர்களும் உள்ளமைப்பில் இயல்பான வேர்களை ஒத்திருக்கின்றன. எனினும் நடு புறணி பகுதியில் அனபீனா போன்ற நீலப்பசும்பாசிகளின் கூட்டமைப்பு காணப்படுகிறது. பவழவேர்கள் மூன்று முனைசைலம் கொண்டவை, வெளிநோக்கிய சைலம் காணப்படுகிறது.




தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்

நிலைத்த இலையடிப் பகுதிகள் காணப்படுவதால் இளம் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் விளிம்பு ஒழுங்கற்றுக் காணப்படுகிறது. தண்டின் உள்ளமைப்பில் புறத்தோல், புறணி, வாஸ்குல உருளை என வேறுபாடு அடைந்துள்ளன. சைகஸ் தண்டின் உள்ளமைப்பு இருவித்திலைத் தாவரத் தண்டின் உள்ளமைப்பை ஒத்தது (படம் 2.26).


தண்டின் வெளிப்புற அடுக்கான புறத்தோல் தடித்த கியூட்டிகிள் படலத்தால் சூழப்பட்டுள்ளது. இலையடி பகுதிகள் காணப்படுவதால் இவ்வடுக்கு தொடர்ச்சியற்று உள்ளது. தண்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள புறணி மெல்லிய சுவர் கொண்ட பாரங்கைமா செல்களால் ஆனது. இவற்றில் தரச துகள்கள் நிரம்பியுள்ளன. புறணியில் பல மியூசிலேஜ் கால்வாய்களும், டானின் செல்களும் அமைந்துள்ளன. இளம் தண்டில் வாஸ்குலக் கற்றைகள் ஒரு வளையமாக அமைந்திருப்பதோடு அவற்றிற்கிடையே அகன்ற மெடுல்லரி கதிர்கள் காணப்படுகின்றன.

வாஸ்குலக் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை, உள்நோக்கிய சைலம் கொண்டவை. சைலத்தில் டிரக்கீடுகளும், ஃபுளோயத்தில் சல்லடைக் குழாய்களும், புளோயம் பாரங்கைமாவும் கொண்டுள்ளன. துணை செல்கள் காணப்படுவதில்லை. வாஸ்குலக் கற்றையில் உள்ள கேம்பியம் குறுகிய காலத்திற்கே செயல்படக்கூடியது. பெரிசைக்கிள் அல்லது புறணியிலிருந்து தோன்றக்கூடிய இரண்டாம் நிலை கேம்பியம் தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சிக்கு உதவுகிறது. புறணிப்பகுதியில் அதிக அளவில் இலை இழுவைகள் உள்ளன. நேரடி இலை இழுவைகள் மற்றும் கச்சை இலை இழுவைகள் காணப்படுவது சைகஸ் தண்டின் சிறப்பியல்பாகும். இரண்டாம் நிலை வளர்ச்சியின் மூலம் பாலிசைலிக் நிலை தோன்றுகிறது. பெல்லோஜென் மற்றும் கார்க் ஆகியன தோன்றுவதன் மூலம் புறத்தோலை மாற்றியமைக்கிறது. மானோசைலிக் வகைக்கட்டை காணப்படுகிறது.

கூட்டிலைக்காம்பின் (Rachis) குறுக்குவெட்டுத் தோற்றம்

கூட்டிலைக்காம்பின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தடித்த கியூட்டிகிள் சூழ்ந்த வெளிப்புற அடுக்குகளான புறத்தோலைப் பெற்றுள்ளன. இதன் உட்புறமாக ஸ்கிளிரங்கைமாவினால் ஆன புறத்தோலடித்தோல் காணப்படுகிறது. இது இலைக் காம்பின் மேற்புறம் இரண்டு அடுக்குகளாலும், கீழ்ப்புறம் பல அடுக்குகளாலும் ஆனது. அடிப்படைத்திசு பாரங்கைமாவினால் ஆனது. வாஸ்குலக் கற்றைகள் தலைகீழ் ஒமேகா (Ω) வடிவில் அமைந்து காணப்படுவது கூட்டிலைக் காம்பின் தனிச்சிறப்பியல்பாகும் (படம் 2.27). ஒவ்வொரு வாஸ்குலக் கற்றையும் ஓரடுக்கில் அமைந்த ஸ்கிளிரங்கைமாவினால் ஆன கற்றை உறையைப் பெற்றுள்ளன. வாஸ்குலக் கற்றைகள் ஒருங்கமைந்தவை, திறந்தவை, உள்நோக்கிய சைலம் கொண்டவை. கற்றைகளுக்கு வெளிப்புறமாக ஓரடுக்கால் ஆன அகத்தோலும், சில அடுக்குகளில் அமைந்த பெரிசைக்கிலும் சூழ்ந்துள்ளன. வாஸ்குலக் கற்றைகளில் இரட்டைசைல நிலை காணப்படுகிறது மையநோக்கு, மையவிலக்கு (Centrifugal) என இரண்டு வகை சைலமும் காணப்படுகிறது.



சிற்றிலையின் (Leaflet) குறுக்கு வெட்டுத் தோற்றம்

சைகஸின் சிற்றிலை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மேற்புறத்தோல், கீழ்ப்புறத்தோல் என இரு புறத்தோலடுக்குகள் உள்ளன. தடித்த சுவர் கொண்ட புறத்தோல் செல்கள் வெளிப்புறத்தில் தடித்த கியூட்டிகிளினால் சூழப்பட்டுள்ளது. அமிழ்ந்த இலைத்துளைகள் கீழ்புறத்தோலில் காணப்படுவதால் இவ்வடுக்கு தொடர்ச்சியற்ற அடுக்காக உள்ளது. புறத்தோலடித்தோல் ஸ்கிளிரங்கைமா செல்களால் ஆனது. இது நீராவிப்போக்கினை தடுக்கிறது. இலையிடைத்திசு பாலிசேட்மற்றும்பஞ்சு பாரங்கைமா என வேறுபட்டுள்ளது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. கீழ்புறத்தோலை நெருக்கமாக ஒட்டியுள்ள பஞ்சு பாரங்கைமா அதிகச் செல் இடைவெளிகளைக் கொண்டு வளிப்பரிமாற்றத்திற்கு உதவுகிறது. இலைப் பரப்பிற்கு இணையாக மைய நரம்பிலிருந்து இலையின் விளிம்பு வரை விரிந்து செல்லும் நிறமற்ற, நீண்ட செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது. இவை கூட்டிணைவுத்திசுவை உருவாக்குகிறது. இவை இணைத்துப் பக்கவாட்டில் நீரைக் கடத்த உதவுகின்றன. வாஸ்குலக் கற்றையில் சைலம் மேற்புறத்தோலை நோக்கியும், ஃபுளோயம் கீழ்ப்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளன. புரோட்டோசைலத்தினை மையத்தில் கொண்ட இடைநிலை (Mesarch) கற்றைகள் காணப்படுகின்றன. வாஸ்குலக் கற்றையைச் சூழ்ந்து ஸ்கிளிரங்கைமா கற்றை உறை காணப்படுகிறது (படம் 2.28).


இனப்பெருக்கம்

சைகஸ் உடல, பால் இனப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கிறது.

உடல இனப்பெருக்கம்

வேற்றிடமொட்டுகள் அல்லது சிறுகுமிழ் மொட்டுகள் தோன்றுவதன் மூலம் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது. தண்டின் அடிப்பகுதியிலிருந்து இவைகள் தோன்றுகின்றன. சிறுகுமிழ் மொட்டுகள் முளைத்துப் புதிய தாவரத்தினைத் தருகிறது.

பாலினப்பெருக்கம்

சைகஸ் ஒருபால் வகை (Dioecious) தாவரமாகும். அதாவது ஆண் மற்றும் பெண் கூம்புகள் தனித்தனித் தாவரங்களில் தோன்றுகின்றன. இது இரண்டு வகையான வித்துகளைத் தோற்றுவிக்கும் மாற்று வித்துத் தன்மை கொண்ட தாவரமாகும் (படம் 2.29).


ஆண் கூம்பு

ஆண் கூம்பு தண்டின் நுனியில் தனித்து உருவாக்கப்படுகிறது. கூம்பின் அடிப்பகுதியில் தோன்றும் கோணமொட்டுகள் மூலம் தண்டின் வளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண் கூம்பு தண்டின் ஒரு பக்கமாகத் தள்ளப்படுவதால் தண்டு பல்பாதக் கிளைத்தல் முறையில் வளர்கிறது. ஆண் கூம்பு காம்பு கொண்டவை, நெருக்கமாக அமைந்தவை, முட்டை அல்லது கூம்பு வடிவம் கொண்டவை, கட்டைத்தன்மையுடவை. பல நுண்வித்தகயிலைகள் கூம்பின் மைய அச்சின் மீது சுழல் முறையில் அமைந்துள்ளன.

நுண்வித்தக இலைகள் (Microsporophyll)

இவை குறுகிய அடிப்பகுதியையும், அகன்ற மேல்பகுதியையும் கொண்டு கட்டைத்தன்மையுடன் தட்டையான இலை போன்று காணப்படுகிறது. அகன்ற மேல்பகுதி படிப்படியாக நுனிநோக்கிக் குறுகிக் கூர்மையான முனையைக்கொண்டிருக்கிறது. இதற்கு அபோஃபைசிஸ் என்று பெயர். குறுகிய அடிப்பகுதி கூம்பின் அச்சில் இணைந்திருக்கும். ஒவ்வொரு நுண்வித்தக இலையும் அதன் கீழ்ப்புறத்தில் ஆயிரக்கணக்கான நுண்வித்தங்கள் வித்தகத் தொகுப்புக்களைக் கொண்டுள்ளன. வித்தகங்களின் வளர்ச்சி உண்மைவித்தக நிலையைச் சார்ந்தது. வித்துதாய்செல் குன்றல் பகுப்பிற்கு உட்பட்டு ஒற்றைமடிய நுண்வித்துகளைத் தருகிறது. ஒவ்வொரு நுண்வித்தகமும் அதிக எண்ணிக்கையிலான நுண்வித்துகள் அல்லது மகரந்தத் தூள்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வித்தகமும் ஆரப்போக்கில் அமைந்த வரிகளின் வழி வெடித்து நுண்வித்துகளை வெளியேற்றுகின்றன. நுண்வித்து (மகரந்தத்தூள்) ஒவ்வொன்றும் வெளிப்புறத்தில் தடித்த எக்சைன், உட்புறத்தில் மெல்லிய இன்டைன் உறைகளால் சூழப்பட்ட ஒரு செல் அமைப்புடைய, ஒரு உட்கரு கொண்ட உருண்டையான அமைப்பாகும். நுண்வித்து ஆண் கேமீட்டக தாவரத்தினைக் குறிக்கிறது.

பெருவித்தக இலைகள் (Megasporophyll)

சைகஸின் பெருவித்தக இலைகள் கூம்புகளைத் தோற்றுவிப்பதில்லை. இவைகள் பெண் தாவரத் தண்டின் நுனியில் நெருக்கமாகவும் சுழல் முறையிலும் அமைந்துள்ளன. இவைகள் 15 முதல் 30 செ.மீ வரை நீளம் கொண்டு தட்டையாக உள்ளன. ஒவ்வொரு பெருவித்தக இலையும் காம்பு போன்ற அடிப்பகுதி, இலை போன்ற மேற்பகுதி என வேறுபட்ட பகுதிகளைக் கொண்டது. வித்தகயிலையின் பக்கவாட்டில் சூல்கள் அமைந்துள்ளன. இவை பெண் கேமீட்டக தாவரத்தினைக் குறிக்கும் பெருவித்துகளை கொண்டுள்ளன.

சூலின் அமைப்பு

தாவரப் பெரும்பிரிவில் சைகஸின் சூல் மிகப் பெரிய சூல் ஆகும். நேர்சூல் (Orthotropous), ஒற்றைச் சூலுறையும், குட்டையான காம்பினையும் பெற்றுள்ளன. தடித்த சூலுறை சூலின் ஒரு சிறிய துளையைத் தவிர ஏனைய சூல்பகுதி முழுவதையும் சூழ்ந்துள்ளது. சூலுறை மூடப்படாத, சூலின் திறந்த பகுதி சூல்துளை என அழைக்கப்படுகிறது. சூலுறை மூன்று அடுக்குகளைக் கொண்டது. சதைப்பற்றுடன் கூடிய உள்ளடுக்கு மற்றும் வெளியடுக்கு, சார்க்கோடெஸ்டா என்றும், கல்போன்ற உறுதியான நடு அடுக்கு ஸ்கிளிரோடெஸ்டா என்றும் அறியப்படுகிறது. நியூசெல்லஸ் உடன் உள்ளடுக்கு நெருக்கமாக இணைந்துள்ளது. நியூசெல்லஸ் வெளிப்புறமாக நீண்டு வளர்ந்து அலகு போல் காணப்படும். இதன் மேற்பகுதி சிதைந்து ஒரு குழிபோன்ற பகுதியை உருவாக்குகிறது. இதுவே மகரந்த அறை என அழைக்கப்படுகிறது. பெருவித்துதாய்செல் குன்றல் பகுப்படைய்து நான்கு ஒற்றை மடிய பெருவித்துகளைத் தருகிறது. இவற்றுள் கீழ்ப்புறத்தில் காணப்படும் செயல்படக்கூடிய ஒரு பெருவித்தினைத் தவிர ஏனைய வித்துகள் சிதைந்து விடுகின்றன. முதிர்ந்த விதைகளில் நியூசெல்லஸ் சுருங்கி மெல்லிய தாள் போன்ற உறையாகக் காணப்படுவதுடன் பெண் கேமீட்டக தாவரத்தைச் சூழ்ந்து காணப்படுகிறது. விரிவடைந்த பெருவித்து அல்லது கருப்பை நியூசெல்லசினுள் காணப்படுகிறது. மகரந்த அறைக்குக் கீழே அமைந்துள்ள ஆர்க்கிகோணிய அறையில் 3-லிருந்து 6 வரையினை ஆர்க்கிகோணியங்கள் கானப்படுகின்றன (படம் 2.30).


மகரந்தச்சேர்க்கையும் கருவுறுதலும்

மகரந்தச்சேர்க்கை மூன்று செல்கள் கொண்ட நிலையில் (முன் உடலச் செல், பெரிய குழாய் செல் - tube cell, சிறிய ஜெனரேடிவ் செல் - generative cell) மகரந்தச்சேர்க்கை காற்றின் மூலம் நடைபெறுகிறது. மகரந்தச் சேர்க்கைக்குப்பின் மகரந்தத்தூள்கள் மகரந்த அறையில் தங்குகின்றன. ஜெனரேடிவ் செல் காம்பு செல், உடல செல் என இரண்டாகப் பிரிகிறது. பின்னர் உடல் செல் பிரிந்து பல கசையிழைகளைக் கொண்ட இரண்டு பெரிய நகரும் ஆண்கேமீட்களை அல்லது விந்தணுக்களைத் தோற்றுவிக்கிறது. கருவுறுதல் நிகழ்சியின்போது ஒரு ஆண்கேமீட் ஆர்க்கிகோணியத்தில் உள்ள முட்டையுடன் இணைந்து இரட்டைமடிய கருமுட்டையை (2n) தோற்றுவிக்கிறது. கருவூண்திசு ஒற்றைமடிய தன்மையுடையது. மகரந்தச் சேர்க்கையிலிருந்து கருவுறுதல் முடிய 4 முதல் 6 மாதங்கள் ஆகிறது. கருமுட்டை குன்றலில்லா பகுப்பிற்கு உட்பட்டுக் கருவாக வளர்கிறது. சூல் விதையாகமாறுகிறது. விதை சமமற்ற இருவிதையிலைகளைக் கொண்டுள்ளன. தரைகீழ் விதை முளைத்தல் நடைபெறுகிறது. சந்ததி மாற்றத்தைக் காட்டும் வாழ்க்கைச் சுழற்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது (படம் 2.31).


தொல்லுயிர் தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் "தேசியக் கல்மரப் பூங்கா" (National Wood Fossil Park) அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 20 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்து மடிந்த மரக்கட்டைகளின் எச்சங்கள் (Petrified wood fossils) உள்ள ன. 'உரு பேரினம்' (Form genera) என்ற சொல் தொல்லுயிர் எச்சத்தாவரங்களுக்கு பெயர் சூட்டப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தொல்லுயிர் எச்சங்கள் முழுத் தாவரங்களாகக் கிடைப்பதில்லை. பதிலாக அழிந்தபோன தாவரப் பகுதிகள், உறுப்புகள் சிறுசிறு துண்டுகளாகவே பெறப்படுகின்றன. ஷிவாலிக் தொல்லுயிர்ப் பூங்கா - ஹிமாச்சல பிரதேசம், மாண்ட்லா தொல்லுயிர்ப் பூங்கா-மத்தியப்பிரதேசம், இராஜ்மஹால் குன்றுகள் - ஜார்கண்ட், அரியலூர் பூங்கா - தமிழ்நாடு ஆகியவை நம் நாட்டில் காணக்கூடிய சில முக்கியத் தொல்லுயிர் எச்சம் மிகுந்த பகுதிகளாகும். பலவகைத் தாவர வகுப்புகளைச் சார்ந்த சில தொல்லுயிர் எச்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாசிகள் - பேலியோபொரல்லா, டைமார்ஃபோசைஃபான் பிரையோஃபைட்கள் - நயடைட்டா, ஹெப்பாட்டிசைட்டிஸ், மஸ்ஸைடஸ்

டெரிடோஃபைட்கள் - குக்சோனியா, ரைனியா, பாரக்வாங்கியா, கலமைட்டஸ்

ஜிம்னோஸ்பெர்ம்கள் - மெடுல்லோசா, லெப்பிடோகார்பான், வில்லியம் சோனியா, லெப்பிடோடெண்ட்ரான்

ஆஞ்சியோஸ்பெர்ம்கள் - ஆர்க்கியாந்தஸ், ஃபார்குலா

பேரா பீர்பல் ஸானி (1891-1949)


பேராசிரியர் பீர்பல் ஸானி இந்தியத் தொல்தாவரவியலின் (Palacobotary) தந்தை என்று அறியப்படுகிறார். கிழக்கு பீஹாரில் ராஜ்மஹால் மலைப்பகுதியிலுள்ள தொல்லுயிர் எச்சத் தாவரங்களை இவர் விவரித்துள்ளார். இவர் விவரித்த உருப் பேரினங்களில் பெண்டோசைலான் ஸானி, நிப்பானியோ ஸைலான் போன்றவை அடங்கும். 'பீர்பல் ஸானி தொல்தாவர நிறுவனம்' (Birbal Sahni Institute of Palaeobotany) லக்னோவில் அமைந்துள்ளது.

 

Tags : Characteristic features, Classification, Economic importance, structure, Reproduction பொதுப்பண்புகள், வகைப்பாடு, பொருளாதார முக்கியத்துவம், தோற்றம், இனப்பெருக்கம்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Gymnosperms Characteristic features, Classification, Economic importance, structure, Reproduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : ஜிம்னோஸ்பெர்ம்கள் - பொதுப்பண்புகள், வகைப்பாடு, பொருளாதார முக்கியத்துவம், தோற்றம், இனப்பெருக்கம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்