தாவரவியல் - ஸ்டீலின் வகைகள் - டெரிடோஃபைட்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom
ஸ்டீலின்
வகைகள்
ஸ்டீல் என்பது வாஸ்குலத் திசுக்களாலான மைய உருளையைக்
குறிக்கும். இது சைலம், ஃபுளோயம், பெரிசைக்கிள், மெடுல்லரி கதிர்கள், பித் ஆகியவற்றை
உள்ளடக்கியது (படம் 2.7).
ஸ்டீல்கள் இரு வகைப்படும். (1) புரோட்டோஸ்டீல் (2) சைபனோஸ்டீல்
புரோட்டோஸ்டீல்
இதில் சைலம்ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும். ஹேப்ளோஸ்டீல்,
ஆக்டினோஸ்டீல் (Actinostele), பிளெக்டோஸ்டீல்,
கலப்பு புரோட்டோ ஸ்டீல் ஆகியவை புரோட்டோஸ்டீலின்
வகைகள் ஆகும்.
ஹேப்ளோஸ்டீல்
மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா.
ஆக்டினோஸ்டீல்
நட்சத்திர வடிவ சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம் செர்ரேட்டம்.
பிளெக்டோஸ்டீல்
சைலமும் ஃபுளோயம் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம் கிளாவேட்டம்.
கலப்பு புரோட்டோஸ்டீல்
சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறி காணப்படும். எடுத்துக்காட்டு:
லைக்கோபோடியம் செர்னுவம்
சைபனோஸ்டீல்
இதில் சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும். மையத்தில்
பித் காணப்படும். வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்,
இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல், சொலினோஸ்டீல்,
யூஸ்டீல், அடாக்டோஸ்டீல், பாலிசைக்ளிக்ஸ்டீல் ஆகியவை சைபனோஸ்டீலின் வகைகளாகும்.
(அ) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல் சைலத்தின்
வெளிப்புறத்தில் மட்டும் ஃபுளோயம் காணப்படும். மையத்தில் பித் காணப்படும். எடுத்துக்காட்டு:
ஆஸ்முண்டா.
(ஆ) இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல் சைலத்தின் இருபுறமும்
ஃபுளோயம் காணப்படும். மையத்தில் பித் காணப்படும். எடுத்துக்காட்டு: மார்சீலியா.
சொலினோஸ்டீல்
இவ்வகை ஸ்டீல் இலை இழுவைகளின் (Leaf traces) தோற்றத்தினைப் பொறுத்து ஒன்று
அல்லது பல இடங்களில் இடைவெளிகளுடன் காணப்படும்.
(அ) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல் பித் மையத்தில்
அமைந்து, சைலத்தைச் சூழ்ந்து ஃபுளோயம் காணப்படும். எடுத்துக்காட்டு: ஆஸ்முண்டா.
(ஆ) இருபக்க ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல் பித் மையத்திலும்,
சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காணப்படும். எடுத்துக்காட்டு: அடியாண்டம் பெடேட்டம்.
(இ) டிக்டியோஸ்டீல்
இவ்வகை ஸ்டீல் பல வாஸ்குலத் தொகுப்புகளாக பிரிந்து
காணப்பட்டு, ஒவ்வொரு வாஸ்குலத் தொகுப்பும் மெரிஸ்டீல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டு:
அடியாண்டம் காப்பில்லஸ்-வெனிரிஸ்.
யூஸ்டீல்
யூஸ்டீல் பல ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகப் பிரிந்து
பித்தைச் சூழ்ந்து ஒரு வளையமாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: இருவிதையிலைத் தாவரத்தண்டு.
அடாக்டோஸ்டீல்
ஸ்டீல் பிளவுற்று தெளிவான ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகவும்,
அடிப்படைத்திசுவில் சிதறியும் காணப்படும். எடுத்துக்காட்டு: ஒருவிதையிலைத் தாவரத்தண்டு.
பாலிசைக்ளிக்ஸ்டீல்
வாஸ்குலத் திசுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
வளையங்களாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: டெரிடியம்