Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | டெரிடோஃபைட்கள்

பொதுப்பண்புகள், வகைப்பாடு, பொருளாதார முக்கியத்துவம், அமைப்பு, இனப்பெருக்கம் - டெரிடோஃபைட்கள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

   Posted On :  05.07.2022 02:39 am

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

டெரிடோஃபைட்கள்

டெரிடோஃபைட்கள் சைலம், ஃபுளோயம் ஆகிய வாஸ்குலத் திசுக்களைப் பெற்று நிலச்சூழலுக்கேற்பத் தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்ட தாவரங்கள் ஆகும். இவை பேலியோசோயிக் ஊழியின் டிவோனியன் காலகட்டத்தில் (400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) மிகுதியாகக் காணப்பட்டன.

டெரிடோஃபைட்கள்

விதைகளற்ற வாஸ்குல பூவாத்தாவரங்கள் (Seedless Vascular Cryptogams)

முந்தைய பாடத்தில் தாவர உலகின் நீர்நிலவாழ் உயிரிகளான பிரையோஃபைட்களின் சிறப்பியல்புகளைப் பற்றி அறிந்தோம். இருப்பினும் முதன் முதலாக உண்மை நிலத்தாவரத் தொகுப்பாக அறியப்படுபவை டெரிடோஃபைட்களாகும். மேலும் இவைதான் வாஸ்குலத் திசுக்களான சைலம், ஃபுளோயம் பெற்ற முதல் தாவரங்களானதால் 'வாஸ்குலத்தொகுப்புடைய பூவாத்தாவரங்கள்' என அழைக்கப்படுகின்றன. கிளப் மாஸ்கள், குதிரைவாலிகள், இறகுத்தாவரங்கள், நீர் பெரணிகள், மரப்பெரணிகள் போன்றவை இப்பிரிவைச் சார்ந்தவை. இப்பாடப்பிரிவு டெரிடோஃபைட்களின் பண்புகளை எடுத்துரைக்கிறது.


டெரிடோஃபைட்கள் சைலம், ஃபுளோயம் ஆகிய வாஸ்குலத் திசுக்களைப் பெற்று நிலச்சூழலுக்கேற்பத் தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்ட தாவரங்கள் ஆகும். இவை பேலியோசோயிக் ஊழியின் டிவோனியன் காலகட்டத்தில் (400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) மிகுதியாகக் காணப்பட்டன. இத்தாவரங்கள் பெரும்பாலும் ஈரபதம் நிறைந்த, குளிர்ந்த நீரூள்ள, நிழலான பகுதிகளில் வளரக்கூடிய சிறு செடிகளாகும். சில டெரிடோஃபைட்களின் விளக்கப்படங்கள் படம் 2.15-ல் கொடுக்கப்பட்டுள்ளன.

 

 


டெரிடோஃபைட்களின் பொதுப்பண்புகள்

• தாவர உடல் ஓங்கிய வித்தகத் தாவர (2n) சந்ததியைச் சார்ந்தது. இது உண்மையான வேர், தண்டு, இலை என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது.

• வேற்றிட வேர்கள் காணப்படுகின்றன.

• தண்டு ஒருபாத அல்லது கவட்டை கிளைத்தலைப் பெற்றுள்ளது.

• நுண்ணிலைகள் அல்லது பேரிலைகள் கொண்டுள்ளன.

• வாஸ்குலக் கற்றைகள் புரோட்டோஸ்டீல் வகையைச் சார்ந்தவை. சிலவற்றில் சைபனோஸ்டீல் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: மார்சீலியா.

• நீரைக் கடத்தும் முக்கியக் கூறுகள் டிரக்கீடுகள் ஆகும். செலாஜினெல்லாவில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.

• வித்தை தாங்கும் பை போன்ற பகுதி வித்தகம் எனப்படும். வித்தகங்கள் வித்தக இலைகள் எனப்படும் சிறப்பு இலைகளில் தோன்றுகின்றன. சில தாவரங்களில் வித்தகயிலைகள் நெருக்கமாக அமைந்து கூம்பு அல்லது ஸ்ட்ரொபைலஸ் என்ற அமைப்பை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா, ஈக்விசிட்டம்.

• இவை ஒத்தவித்துத்தன்மை - (ஒரே வகையான வித்துகள் எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம்) அல்லது மாற்றுவித்து தன்மை - (இரு வகையான வித்துகள் எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா) உருவாக்குகின்றன. மாற்றுவித்தகத்தன்மை விதை தோன்றுதலுக்கு ஆரம்ப அல்லது முன்னோடியாகக் கருதப்படுகிறது.

• வித்தகம் உண்மை வித்தகம் (பல தோற்றுவிகளிலிருந்து வித்தகம் உருவாதல்) அல்லது மெலிவித்தகம் (Leptosporangiate) (வித்தகம் தனித் தோற்றுவியிலிருந்து உருவாதல்) என இருவகை வளர்ச்சியைச் சார்ந்துள்ளது.

• வித்து தாய் செல் குன்றல் பிரிவிற்கு உட்பட்டு ஒற்றைமடிய (n) வித்துகளை உருவாக்குகின்றன.

• வித்துக்கள் முளைத்துப் பசுமையான, பல செல் கொண்ட, தனித்து வாழும் திறன் கொண்ட, இதய வடிவ ஒற்றைமடிய (n) சார்பின்றி வாழும் முன் உடலத்தை (Prothallus) உருவாக்குகின்றன.

• உடல இனப்பெருக்கம் துண்டாதல், ஓய்வுநிலை மொட்டுகள், வேர்க்கிழங்குகள் (Root tubers), வேற்றிட மொட்டுகள் தோற்றுவித்தல் ஆகிய முறைகளில் நடைபெறுகிறது.

• பாலினப்பெருக்கம் கருமுட்டை இணைவு வகையைச் சார்ந்தது. ஆந்திரீடியம், ஆர்க்கிகோணியம் முன்உடலத்தில் தோற்றுவிக்கப்படுகின்றது.

ஆந்திரீடியம் பலகசையிழைகளைக் கொண்ட சுருண்ட அமைப்புடைய நகரும் ஆண் கேமீட்களை உருவாக்குகிறது.

• குடுவை வடிவ ஆர்க்கிகோணியம், வெண்டர் என்ற அகன்ற அடிப்பகுதியையும், நீண்ட, குறுகிய கழுத்துப்பகுதியையும் கொண்டுள்ளது. வெண்டர் பகுதியில் முட்டையும், கழுத்துப் பகுதியில் கழுத்துக்கால்வாய் செல்களும் காணப்படுகின்றன.

• கருவுறுதலுக்கு நீர் அவசியமாகிறது. கருவுறுதலுக்குப்பின் உருவாகும் இரட்டைமடிய (2n) கருமுட்டை குன்றலில்லா பகுப்பிற்கு உட்பட்டுக் கருவைத் தோற்றுவிக்கிறது.

டெரிடோஃபைட்களில் பாலிணைவின்மை, குன்றலில்லா வித்துத்தன்மை (Apospory) ஆகியன காணப்படுகின்றன. 

 

டெரிடோஃபைட்களின் வகைப்பாடு

ரெய்மர் 1954-ல் டெரிடோஃபைட்களுக்கு ஒரு வகைப்பாட்டை முன்மொழிந்தார். இதில் டெரிடோஃபைட்கள் ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவை (1) சைலோஃபைட்டாப்சிடா (2) சைலோடாப்சிடா (3) லைகாப்சிடா (4) ஸ்பீனாப்சிடா (5) டீராப்சிடா. இவ்வகைப்பாடு 19 துறைகளையும், 48 குடும்பங்களையும் உள்ளடக்கியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

வாஸ்குலத் தாவரங்களின் ஓங்குத்தன்மைக்கும் வெற்றிகரமான  வளர்ச்சிக்கும் காரணமானவை

• பரந்து வளர்ந்த வேர்த்தொகுப்பு

• திறன்மிக்க கடத்துத் திசுக்கள் காணப்படுதல்

• உலர்தலைத் தடுப்பதற்குக் கியூட்டிகிள் காணப்படுதல்

• வளிப் பரிமாற்றம் திறம்பட செயல்பட இலைத்துளைகள் காணப்படுதல்


பொருளாதார முக்கியத்துவம்

டெரிடோஃபைட்களின் பொருளாதார முக்கியத்துவம் அட்டவணை 2.3-ல் கொடுக்கப்பட்டுள்ளது.





செலாஜினெல்லா

பிரிவு - லிகுலாப்சிடா

வகுப்பு - லைக்காப்சிடா

துறை - செலாஜினெல்லேல்ஸ்

குடும்பம் - செலாஜினெல்லேசி

பேரினம் - செலாஜினெல்லா

செலாஜினெல்லா பொதுவாக ‘ஸ்பைக் மாஸ்’ என அழைக்கப்படுகிறது. இவை ஈரமான, வெப்பமண்டல, மித வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன. செ. ரூபஸ்ட்ரிஸ், செ. லெபிடேஃபில்லா ஆகியவை வறள்நிலத் தாவரங்களாகும். செ. கிராசியானா, செ. கிரைசோகாலஸ், செ. மெகாஃபில்லா போன்றவை பொதுவாக காணப்படும் சில சிற்றினங்களாகும். சில செலாஜினெல்லா சிற்றினங்கள் வறட்சி காலங்களில் முழு தாவரமும் சுருண்டுவிடுகிறது. ஈரப்பதம் கிடைத்தவுடன் இவை மீண்டும் பசுமைப் பெறுகின்றனது. இவ்வகை சிற்றினங்கள் மீளெழும் தாவரங்கள் என்று அறியப்படுகின்றன.

புற அமைப்பு

வித்தகத்தாவரச் (2n) சந்ததியைச் சார்ந்த தாவர உடலம் வேர், தண்டு, இலை என வேறுபாடு அடைந்துள்ளது. செலாஜினெல்லா பல்வேறுவிதமான வளரியல்பைப் பெற்றுள்ளது. நிலம்படர் கொடி (செ. கிராசியானா), பகுதி நிமிர்ந்தவை (செ. ரூபஸ்ட்ரிஸ்), நிமிர்ந்தவை (செ. எரித்ரோபஸ்), ஏறுகொடி (செ. அல்லிகன்ஸ்), தொற்றுத்தாவரம் (செ. ஒரிகானா). பெரும்பாலான சிற்றினங்கள் பல்லாண்டு வாழ் தாவரங்களாக உள்ளன. தண்டு, இலை அமைந்திருக்கும் முறையின் அடிப்படையில் செலாஜினெல்லா ஒத்த இலை அமைப்புடையவை, மாற்று இலை அமைப்புடையவை என இரு துணைபேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒத்த இலை அமைப்புடையவை நிமிர்ந்த தண்டில் சுழலமைவில் அமைந்த ஒரே வகையான இலைகளைக் கொண்ட சிற்றினங்களையும் (செ.ரூபஸ்ட்ரிஸ், செ. ஒரிகானா), மாற்று இலை அமைப்புடையவை குட்டையான, நிமிர்ந்த கிளைகள் கொண்ட, நிலம்படர் தண்டில் மேல்கீழ்வேறுபாடு கொண்ட இலைகள் (செ. கிராசியானா, செ. லெப்பிடோஃபில்லா) பெற்றுள்ளன.



வேர்

முதல்நிலை வேர்கள்க குறுகியகாலம் வாழக்கூடியவை. எனவே வேற்றிட வேர்களைத் தோற்றுவிக்கிறது. கிளைகள் பிரியும் இடம் அல்லது தண்டின் அடிப்பகுதியில் முடிச்சு போன்று காணப்படும் பகுதியில் இவ்வேர்கள் தோன்றுகின்றன. இவை அகத்தோன்றிகளாகும் (Endogenous).

வேர்த்தாங்கி (Rhizophore)

பல சிற்றினங்களில் நீண்ட, உருளை போன்ற கிளைத்தலற்ற, இலைகளற்ற அமைப்புகள் தண்டின் அடிப்பகுதியில் கிளைகள் பிரியுமிடத்தில் தோன்றுகின்றன. இவை வேர்தாங்கிகள் என அழைக்கப்படுகின்றன. இவை நேராக கீழ்நோக்கி வளர்ந்து கொத்தாக வேற்றிட வேர்களைத் தருகின்றன.

தண்டு

நேராக நிமிர்ந்த, இருபக்க கிளைத்தலுடைய அல்லது நிலம்படர் பக்கக்கிளைகள் கொண்ட தண்டு காணப்படுகிறது. நிலம்படர் தண்டு மேல், கீழ் வேறுபாடு கொண்டவை.

இலைகள்

நுண்ணிலைகள் காம்பற்றும், எளிய இலையாகவும் உள்ளன. ஒரு மைய நரம்பு மட்டும் இலைகளில் காணப்படுகிறது. உடல இலைகளும், வித்தக இலைகளும் சிறிய, சவ்வு போன்ற, சிறுநா எனப்படும் நீட்சிகளைக் கொண்டுள்ளன. இதன் அடிப்பகுதியில் அரைக்கோள வடிவமுடைய மெல்லிய செல்களின் தொகுப்பு காணப்படுகிறது. இதற்கு 'கிளாசோபோடியம்' என்று பெயர். இவ்வமைப்பின் பணி என்னவென்று தெரியாவிடினும் இவ்வமைப்பு நீர் உறிஞ்சுதல், சுரத்தல், தண்டுத் தொகுப்பை உலர்தலிலிருந்து பாதுகாத்தல் ஆகிய பணிகளில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ஒத்த இலையமைப்பு வகையைச் சார்ந்த சிற்றினங்கள் தண்டைச் சுற்றி சுழல் அமைப்பில் அமைந்த ஒரே வகை இலைகளயும், மாற்று இலை அமைப்பைச் சார்ந்த சிற்றினங்களின் மேற்பகுதியில் இருவரிசை சிற்றிலைகளையும், கீழ்பகுதியில் இருவரிசை பேரிலைகளையும் கொண்டுள்ளன.

உள்ளமைப்பு

வேர்

வேர் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெளியடுக்கான புறத்தோலைப் பெற்றுள்ளது. புறத்தோல் செல்கள் தொடு போக்கில் நீட்சியடைந்த செல்களால் ஆனது. புறணி ஒருவகையான மெல்லிய சுவருடைய பாரங்கைமாவினாலானது. புறணியின் உள்ளடுக்கு அகத்தோல் என்று அறியப்படும். ஒருமுனை வெளிநோக்கு சைலம் கொண்ட புரோட்டோஸ்டீல் காணப்படுகிறது (படம 2.17).


தண்டு


தண்டின் உள்ளமைப்பு புறத்தோல், புறணி, ஸ்டீல் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது (படம் 2.18). புறத்தோல் தடித்த கியூட்டிக்கிளைக் வெளிப்புறத்தில் கொண்ட பாரங்கைமா செல்களால் ஆனது. புறணி செல் இடைவெளிகளின்றி அமைந்த பாரங்கைமா செல்களால் ஆனது. செ. லெபிடோஃபில்லாவில் ஸ்கிளீரங்கைமா செல்களால் ஆன புறத்தோலடித்தோல் காணப்படுகிறது. ஆரப்போக்கில் நீண்ட டிரபிக்குலங்கள் எனப்படும் அகத்தோல் செல்கள் காணப்படுவது செலாஜினெல்லாவின் சிறப்புப் பண்பாகும். பக்கச்சுவரில் காஸ்பாரியன் பட்டைகள் காணப்படுகின்றன. புறணியின் உள்ளடுக்கிலுள்ள செல்கள் ஸ்டீலினை ஒப்பிடும்போது அதிகமாக நீட்சியடைவதால் ஸ்டீலைச் சுற்றி காற்று இடைவெளிகள் தோன்றி ஸ்டீல் டிராபிக்குலங்கள் பயன்படுத்தி மிதப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. வெளிநோக்கு சைலம் கொண்ட புரோட்டோஸ்டீல் காணப்படுகிறது. வாஸ்குலக் கற்றைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மோனோஸ்டீல் வகை (செ. ஸ்பைனுலோசா), டைஸ்டீல் வகை (செ. கிராசியானா) மற்றும் பாலிஸ்டீல் வகை (செ. லெவிகேட்டா) என வேறுபடுகிறது. ஒருமுனை (செ. கிராசியானா) அல்லது இருமுனை (செ. ஒரிகானா) சைலம் காணப்படுகிறது. டிரக்கீடுகள் காணப்படுகின்றன. செ. டென்சா, செ. ரூபஸ்ட்ரிஸ் ஆகியவற்றில் சைலக்குழாய்கள் காணப்படுகின்றன.

இலை

இலையில் மேற்புறத்தோல் மற்றும் கீழ்ப்புறத்தோல் காணப்படுகிறது. புறத்தோல் செல்களில் பசுங்கணிகம் காணப்படுகிறது. இருபுறங்களிலும் இலைத்துளைகள் காணப்படுகின்றன. இலையிடைத்திசு செல்லிடைவெளிகளுடன் கூடிய பாரங்கைமா செல்களால் ஆனது. மையத்தில் கற்றை உறையால் சூழப்பட்ட வாஸ்குலக் கற்றையுள்ளது. இதில் ஃபுளோயம் சைலத்தைச் சூழ்ந்து காணப்படுகிறது.

இனப்பெருக்கம்

உடல இனப்பெருக்கம்

துண்டாதல், சிறுகுமிழ் மொட்டுகள், கிழங்குகள், ஓய்வு நிலை மொட்டுகள் உருவாதல் ஆகிய முறைகளில் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

பாலினப்பெருக்கம்

பாலினப்பெருக்கத்தின் போது வித்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன செலாஜினெல்லா மாற்றுவித்து வகையைச் சார்ந்தது. இரண்டு வகை வித்துகளை உருவாக்குகிறது (படம் 2.19). நுண்வித்துகள் நுண்வித்தகத்திலிருந்தும், பெருவித்துகள் பெருவித்தகத்திலும் தோன்றுகின்றன. வித்தகங்கள் பெருவித்தக இலைகள் மற்றும் நுண்வித்தக இலைகளின் கோணத்தில் தோன்றுகின்றன.


வித்தக இலைகள் மைய அச்சைச் சூழ்ந்து நெருக்கமாக சுழல்முறையில் அமைந்து கூம்புகள் அல்லது ஸ்ட்ரொபைலஸ்களை உருவாக்குகின்றன. வித்தகங்கள் அமைந்திருக்கும் முறையில் சிற்றினங்களுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. செ. செலாஜினெல்லாய்டிஸ், செ. ரூபஸ்ட்ரிஸ் ஆகிய சிற்றினங்களில் பெருவித்தகங்கள் கூம்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. செ. கிராசியானாவில் கூம்பின் அடிப்பாகத்தில் ஒரே ஒரு பெருவித்தகம் மட்டுமே காணப்படும். செ. இன்அக்விஃபோலியாவில் ஒருபக்கம் முழுவதும் பெருவித்தகங்களும் மறுபுறம் முழுவதும் நுண்வித்தகங்களும் அமைந்துள்ளன. செ. கிராசிலிஸ், செ. அட்ரோவிரிடிஸ் ஆகியவற்றில் நுண்வித்தகங்களும், பெருவித்தகங்களும் தனித்தனி கூம்பில் காணப்படுகின்றன.


வித்தகத்தின் வளர்ச்சி முறை உண்மை வித்தக வகையைச் சார்ந்தது. வித்தக தோற்றுவி புறஇணைப்போக்கான செல்பகுப்படைந்து வெளிப்புற உறைத்தோற்றுவிகளையும், உட்புற முன்வித்து தோற்றுவிகளையும் தருகிறது. முன்வித்து தோற்றுவி செல் மீண்டும் மீண்டும் பகுப்படைந்து வித்தாக்க செல்கள் உருவாகிறது. இவற்றிலிருந்து நுண்வித்து தாய்செல்கள் தோன்றுகின்றன. பரிதி இணைப்போக்கு மற்றும் புற இணைப்போக்கான பகுப்படைந்து நுண்வித்தகத்திலுள்ள நுண்வித்துதாய்செல் குன்றல் பிளவுற்று ஒற்றைமடிய நுண்வித்துகளைத் தருகிறது. இதேபோல் பெருவித்தக தாய்செல் குன்றல் பகுப்படைந்து நான்கு பெருவித்துகளைத் தருகின்றன. நுண்வித்து மற்றும் பெருவித்து முறையே ஆண் மற்றும் பெண் கேமீட்டகத்தாவரத்தை குறிக்கிறது. மேலும் இவை வித்தகத்தினுள் இருக்கும்போது முளைக்கிறது. நுண்வித்துகள் இரு கசையிழையுடைய நகரும் ஆண் கேமீட்டுகளைத் தருகிறது. பெருவித்து ஆர்க்கிகோணியத்தைத் தருகிறது. நகரும் ஆண் கேமீட்நீரில் நீந்தி ஆர்க்கிகோணியத்தை அடைகின்றது. ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைத்து கருவுறுதல் நடைபெற்று உருவாகும் இரட்டைமடிய கருமுட்டை வித்தகத்தாவரத்தின் முதல் செல்லாகும். இது பல குன்றலில்லா பகுப்பிற்கு உட்பட்டு கருவாக மாறி, பின் வளர்ந்து முதிர்ந்த வித்தகத்தாவரமாகிறது.

செலாஜினெல்லாவின் வாழ்க்கைச் சுழற்சியில் வித்தகத்தாவர, கேமீட்டகத்தாவர சந்ததிகள் மாறி மாறி தோன்றுவதால் தெளிவான சந்ததிமாற்றம் காணப்படுகிறது.


ஸ்டீலின் வகைகள்

ஸ்டீல் என்பது வாஸ்குலத் திசுக்களாலான மைய உருளையைக் குறிக்கும். இது சைலம், ஃபுளோயம், பெரிசைக்கிள், மெடுல்லரி கதிர்கள், பித் ஆகியவற்றை உள்ளடக்கியது (படம் 2.7).


ஸ்டீல்கள் இரு வகைப்படும். (1) புரோட்டோஸ்டீல் (2) சைபனோஸ்டீல் 

புரோட்டோஸ்டீல்

இதில் சைலம்ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும். ஹேப்ளோஸ்டீல், ஆக்டினோஸ்டீல் (Actinostele), பிளெக்டோஸ்டீல், கலப்பு புரோட்டோ ஸ்டீல் ஆகியவை புரோட்டோஸ்டீலின் வகைகள் ஆகும்.

ஹேப்ளோஸ்டீல்

மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா.

ஆக்டினோஸ்டீல்

நட்சத்திர வடிவ சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம் செர்ரேட்டம்.

பிளெக்டோஸ்டீல்

சைலமும் ஃபுளோயம் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும்.

எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம் கிளாவேட்டம்.

கலப்பு புரோட்டோஸ்டீல்

சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறி காணப்படும். எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம் செர்னுவம்

சைபனோஸ்டீல்

இதில் சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும். மையத்தில் பித் காணப்படும். வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல், இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல், சொலினோஸ்டீல்யூஸ்டீல், அடாக்டோஸ்டீல், பாலிசைக்ளிக்ஸ்டீல் ஆகியவை சைபனோஸ்டீலின் வகைகளாகும்.

(அ) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல் சைலத்தின் வெளிப்புறத்தில் மட்டும் ஃபுளோயம் காணப்படும். மையத்தில் பித் காணப்படும். எடுத்துக்காட்டு: ஆஸ்முண்டா.

(ஆ) இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல் சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காணப்படும். மையத்தில் பித் காணப்படும். எடுத்துக்காட்டு: மார்சீலியா.

சொலினோஸ்டீல்

இவ்வகை ஸ்டீல் இலை இழுவைகளின் (Leaf traces) தோற்றத்தினைப் பொறுத்து ஒன்று அல்லது பல இடங்களில் இடைவெளிகளுடன் காணப்படும்.

(அ) வெளிப்புற ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல் பித் மையத்தில் அமைந்து, சைலத்தைச் சூழ்ந்து ஃபுளோயம் காணப்படும். எடுத்துக்காட்டு: ஆஸ்முண்டா.

(ஆ) இருபக்க ஃபுளோயம்சூழ் சொலினோஸ்டீல் பித் மையத்திலும், சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காணப்படும். எடுத்துக்காட்டு: அடியாண்டம் பெடேட்டம்.

(இ) டிக்டியோஸ்டீல்

இவ்வகை ஸ்டீல் பல வாஸ்குலத் தொகுப்புகளாக பிரிந்து காணப்பட்டு, ஒவ்வொரு வாஸ்குலத் தொகுப்பும் மெரிஸ்டீல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: அடியாண்டம் காப்பில்லஸ்-வெனிரிஸ்.

யூஸ்டீல்

யூஸ்டீல் பல ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகப் பிரிந்து பித்தைச் சூழ்ந்து ஒரு வளையமாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: இருவிதையிலைத் தாவரத்தண்டு.

அடாக்டோஸ்டீல்

ஸ்டீல் பிளவுற்று தெளிவான ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகவும், அடிப்படைத்திசுவில் சிதறியும் காணப்படும். எடுத்துக்காட்டு: ஒருவிதையிலைத் தாவரத்தண்டு.

பாலிசைக்ளிக்ஸ்டீல்

வாஸ்குலத் திசுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையங்களாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: டெரிடியம்


Tags : Characteristic features, Classification, Economic importance, structure, Reproduction பொதுப்பண்புகள், வகைப்பாடு, பொருளாதார முக்கியத்துவம், அமைப்பு, இனப்பெருக்கம்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Pteridophytes Characteristic features, Classification, Economic importance, structure, Reproduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : டெரிடோஃபைட்கள் - பொதுப்பண்புகள், வகைப்பாடு, பொருளாதார முக்கியத்துவம், அமைப்பு, இனப்பெருக்கம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்