விலங்கியல் - மனித இனப்பெருக்கம் | 12th Zoology : Chapter 2 : Human Reproduction
மனித இனப்பெருக்கம்
பாடம் 2
ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் மனித இனத்தின் இனப்பெருக்கத் திறன் மீண்டும் பிறக்கிறது.
- ஜேம்ஸ் அகீ
பாட உள்ளடக்கம்
2.1 மனித இனப்பெருக்க மண்டலம்
2.2 இனச்செல் உருவாக்கம்
2.3 மாதவிடாய் சுழற்சி
2.4 மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம்
2.5 கருவுறுதல் மற்றும் கரு பதிதல்
2.6 கர்ப்ப பராமரிப்பு மற்றும் கரு வளர்ச்சி
2.7 மகப்பேறு மற்றும் பாலூட்டுதல்
கற்றலின் நோக்கங்கள் :
* விடலைப் பருவத்தில் ஆரோக்கியமான இனப்பெருக்க வாழ்வு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
* ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலங்களின் அமைப்பை புரிந்துகொள்ளுதல்.
* ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலங்களோடு தொடர்புடைய அமைப்புகளின் பணிகளை விவரித்தல்.
* விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்க நிகழ்வுகளை ஒப்புமைப்படுத்துதல்.
* கருவுறுதலின் போதும், கருவுற்ற பின்பும் பெண்ணின் உடலில் தோன்றும் மாற்றங்களை விவாதித்தல்.
* இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கை மதிப்பீடு செய்தல்.
* கர்ப்ப கால நிகழ்வுகளையும், கரு வளர்ச்சியையும் பற்றி புரிந்து கொள்ளுதல்.
மனிதன் உயிர்வாழ்வதற்காக மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் தொடர்ச்சியாகப் பணியாற்றி உடலின் சமநிலையைப் (Homeostasis) பேணுகின்றன. மனித இனம் தழைப்பதற்கு மனித இனப்பெருக்க தனது சந்ததியை உருவாக்காமல், தான் மட்டும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால், ஒரு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரிகள் அழிந்துவிடாமல் இப்புவியில் நிலைத்து இருக்க இனப்பெருக்கம் இன்றியமையாததாகும்.
இனப்பெருக்க மண்டலத்தின் நான்கு முக்கிய செயல்பாடுகளாவன:
• இனச் செல்களான விந்து மற்றும் அண்ட செல்களை உருவாக்குதல்.
• இவ்விதம் உருவான செல்களைக் கடத்துதல் மற்றும் தக்க வைத்தல்.
• வளரும் கருவிற்குத் தேவையான ஊட்டம் அளித்துப் பேணுதல்.
• ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்.
மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.
• இனச்செல்உருவாக்கம் (Ganetogenesis) - விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் ஆகிய செயல்பாடுகள் மூலம் விந்து செல்கள் மற்றும் அண்ட செல்கள் உருவாதல்.
• விந்து உள்ளேற்றம் (Insemination) - ஆண் தனது விந்து செல்களை பெண்ணின் இனப்பெருக்கப்பாதையினுள் செலுத்துதல்.
• கருவுறுதல் (Fertilization) - ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குதல்.
* பிளவிப்பெருகல் (Cleavage) - ஒற்றைச் செல்லான கருமுட்டையில் விரைவாக மறைமுக செல் பிரிதல் நடந்து பல செல்களை உடைய கருக்கோளமாக மாறுதல்.
• கரு பதிதல் (Implantation) - கருப்பையின் உட்சுவரில் கருக்கோளம் பதிதல்
• தாய் சேய் இணைப்புத் திசு உருவாக்கம் (Placentation) - வளர் கருவிற்கும் தாயின் கருப்பைச் சுவருக்கும் இடையில் உணவூட்டப்பொருட்கள் மற்றும் கழிவுகளின் பரிமாற்றத்திற்காக தாய் சேய் இணைப்புத் திசுக்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கமானப் பிணைப்பு.
• மூவடுக்குக் கருக்கோளமாக்கம் (Gastrulation) - ஓரடுக்கு கருக்கோளமானது மூன்று முதன்மை மூல இனச்செல் அடுக்குகள் கொண்ட மூவடுக்கு கருக்கோளமாக மாறுதல்
• உறுப்பாக்கம் (Organogenesis) - மூன்று மூல இனச்செல் அடுக்குகளிலிருந்தும் சிறப்புத் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உருவாகுதல்.
• மகப்பேறு (Parturition) - தாயின் கருப்பையிலிருந்து சிசு வெளியேற்றப்படும் செயல்.
இச்செயல்பாடுகள் அனைத்தும் முதன்மை இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் அதைச் சார்ந்த துணை உறுப்புகளால் நடைபெறுகின்றன. முதன்மை இனப்பெருக்க உறுப்புகளான அண்டகம் மற்றும் விந்தகம் ஆகியவற்றிலிருந்து முறையே அண்ட செல்கள் மற்றும் விந்து செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிட்யூட்டரி சுரப்பி மற்றும் முதன்மை இனப்பெருக்க உறுப்புகளிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள், இரண்டாம் நிலை பால் பண்புகளை உருவாக்கவும், இனப்பெருக்க மண்டலம் முதிர்ச்சி அடையவும் மற்றும் இயல்பான முறையில் செயல்படவும் உதவுகின்றன. துணை உறுப்புகள், இனச்செல்களைக் கடத்துவதற்கும், தக்க வைப்பதற்கும், வளரும் கருவிற்கு தேவையான ஊட்டமளித்து பேணுதலிலும் உதவுகின்றன.