மனித இனப்பெருக்கம் - மாதவிடாய் கோளாறுகள் | 12th Zoology : Chapter 2 : Human Reproduction
மாதவிடாய் கோளாறுகள்
மாதவிடாய் ஏற்படாதிருத்தல் 'மாதவிலக்கின்மை’ (Amenorrhoea) எனப்படும். 18 வயது வரை பூப்படையாமல் இருந்தால் அந்நிலைமைக்கு ‘முதல் நிலை மாதவிலக்கின்மை’ (Primary amenorrhoea) என்று பெயர். தொடர்ச்சியாக, அடுத்தடுத்த மூன்று மாதங்களுக்கு மாதவிலக்கின்மை காணப்பட்டால் அது இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை (Secondary aimenorrhoea) என்று அழைக்கப்படும்.
மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 21 நாட்களுக்கும் குறைவாக இருந்தால் அந்நிலை ‘பல மாதவிடாய் நிலை’ (Polynenorrhoea) எனப்படும். முன் பிட்யூட்டரி சுரப்பியின் மிகையான செயல்பாட்டினால் அடிக்கடி அண்டம் விடுபடுதல், உளவியல் ரீதியான பாதிப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை இதற்கான காரணங்களாகும். கிளாமிடியாசிஸ் (chlamydiasis) அல்லது கொனோரியா (Gonorrhoea) போன்ற பால்வினை தொற்றுகளின் நீண்டநாள் தாக்கத்தால் கருப்பை வீக்கமடைந்து பல மாதவிடாய் நிலை தோன்றலாம்.
மாதவிடாயின் போது வலி ஏற்படுதல் ‘வலி மிகு மாதவிடாய்’ (Dysmenorrhoea) எனப்படும். இது பொதுவாக அதிகம் காணப்படும் மாதவிடாய் கோளாறு ஆகும். இதில் இரு வகைகள் உள்ளன. அவை, ‘முதல் நிலை வலிமிகு மாதவிடாய்’ (Primary dysmenorrhoea) மற்றும் இரண்டாம் நிலை வலிமிகு மாதவிடாய் (Secondary dysmenorrhoea). கருப்பையில் சுரக்கும் புரோஸ்டோகிளான்டின் சுரப்பினால் மாத விடாய்க்காலத்தில் ஏற்படும் வலி, பிடிப்புகள் முதல் வகையைச் சேர்ந்தவை. கருப்பை உட்சுவர் அழற்சி (Endometriosis) அல்லது கருப்பை நீர்க்கட்டிகள் / நார்த்திசுக்கட்டிகள் (Uterine fibroids) போன்றவற்றினால் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவை ஆகும்.
ஒரு பெண்ணின் இயல்பான அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு ஏற்படும் கடுமையான மற்றும் நீண்டநாள் மாதவிடாயானது 'மாதவிடாய் மிகைப்பு’ (Menorrhagia) எனப்படும். ஹார்மோன்களின் சமநிலை அற்ற தன்மை, அண்டகங்களின் செயல்பாடின்மை, கருப்பை நார்த்திசுக்கட்டிகள், அண்டகம், கருப்பை மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றில் தோன்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு காரணங்களால் மாதவிடாய் மிகைப்பு ஏற்படலாம்.
குழந்தைப்பேறு அடையும் வயதைக் கொண்ட பெண்களில் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் தாமத மாதவிலக்கு (Oligomenorrhoea) எனப்படும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் இயல்பானவை. ஆனால், 35 நாட்களுக்கு மேல் மாதவிடாய் ஏற்படாத நிலை காணப்பட்டால் அது தாமத மாதவிலக்கு நிலை எனக் கண்டறியலாம்
பெண்களின் ஆரோக்கியம், பொதுவான நல்ல உடல் நலம், கண்ணியம், அதிகாரம் செலுத்துதல், படைப்புத்திறன் போன்றவற்றிற்கு முக்கியமானதாக மாதவிடாய் சுகாதாரம் பேணுதல் திகழ்கிறது. மாதவிடாய் சுகாதாரத்தை சரியாகப் பேணாத பெண்கள் மாதவிடாயின்போது அதிக மன அழுத்தம், பயம் மற்றும் சங்கடத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால், படிக்கும் மாணவியர் ஒவ்வொரு மாதமும் மாத விடாயின்போது ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லாமல் செயல்பாடு குறைந்து வீட்டிலேயே தங்கி விடும் நிலை ஏற்படுகிறது.
தூய்மையான, பாதுகாப்பான உறிஞ்சும் தன்மையுடைய துணிகள், விடாய்க்கால அணையாடை (Sanitary napkins), விடாய்க்கால பஞ்சுப்பட்டை (Pads), விடாய்க்கால உறிபஞ்சு (Tampons) மற்றும் மாதவிடாய்க் கோப்பை (Menstrual cups) போன்ற பொருட்களைக் கொண்டு மாதவிடாயைக் கையாளலாம். தேவைக்கேற்ப 4 முதல் 5 மணி நேரங்களுக்கு ஒரு முறை விடாய்க்கால அணையாடைகளை மாற்றுவதால், தூய்மையும் நோய்க்கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பும் வசதியான உணர்வும் கிடைக்கிறது. இது பெண்களின் மாதவிடாய் காலங்களில் தரமான வாழ்க்கைக்கும் வழி கோலுகிறது. பயன்படுத்தப்பட்ட விடாய்க்கால அணையாடைகளை ஒரு தாளில் சுற்றி அழிக்க வேண்டும். திறந்த வெளிகளிலும் கழிவறைகளில் நீர் வெளியேறும் குழாய்களுக்குள்ளும் அவற்றைத் தூக்கி எறியக் கூடாது. கழிவுநீர்க் குழாய்களில் அவற்றைப் போடுவதால் கழிவு நீர் வெளியேற்றும் குழாய்கள் அடைபட்டு நீர் மாசு பட ஏதுவாகிறது.
விடாய்க்கால அணையாடை சுத்திகரிப்பு (Disposal of napkins)
அறிவியல் முறைப்படியும், சுகாதார நோக்கோடும், மாதவிடாய் கழிவுகள் அடங்கிய விடாய்க்கால அணையாடையை (Napkins) எரித்துச் சாம்பல் ஆக்குவதே சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையாகும். பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளில் எரித்துச் சாம்பலாக்கும் அடுப்புகளும் (Incinerators) விடாய்க்கால அணையாடை விற்கும் தானியங்கி கருவிகளும் நிறுவப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மாதவிடாய் நிறைவு என்பது பெண்களின் வாழ்வில், அண்டம் விடுபடுதல் நின்று மாதவிடாய் முற்றிலுமாக நின்று விடும் நிகழ்வாகும். சராசரியாக 45 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் இது நிகழ்கிறது. அண்டகத்தின் முதன்மைப் பணிகள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதை இது குறிக்கிறது.