மனித இனப்பெருக்கம் - மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் | 12th Zoology : Chapter 2 : Human Reproduction
மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் (Parturition and Lactation)
மகப்பேறு (Parturition) என்பது கர்ப்ப காலம் நிறைவடைந்து குழந்தை பிறத்தலைக் குறிக்கும் சொல்லாகும். கருப்பையிலிருந்து குழந்தை வெளிவரும்போது உடலில் ஏற்படும் வரிசைக்கிரமமான நிகழ்வுகள் மகப்பேறு வலி எனப்படும் (Labour pain) ஆகும். கர்ப்ப காலம் முழுமையுமே அவ்வப்போது இலேசான மற்றும் வலிமையான சுருக்கங்களை கருப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இச்சுருக்கங்கள் 'பிராக்ஸ்டர் ஹிக்ஸ்' சுருக்கங்கள் (Braxter-Hicks contractions) ஆகும். இச்சுருக்கங்கள் பொய்யான பிரசவவலியை ஏற்படுத்துகின்றன. கரு வளர வளர ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரித்து கருப்பைச் சுருக்கங்களையும் அதிகப்படுத்துகிறது. இச்சுருக்கங்கள் கரு உருப்பெறவும் கருகீழ்நோக்கி இடம்பெயரவும் உதவுகிறது. இந்த இடப்பெயர்ச்சியின் காரணமாக கருப்பை வாய் மற்றும் கலவிக்கால்வாய் ஆகியவை விரிவடைவதன் விளைவாக ‘நியூரோஹியூமோரல் அனிச்சைச் செயல்' (Neurohumoral reflex) நடைபெறுகிறது. இந்த அனிச்சைச்செயல் 'கரு வெளித்தள்ளல் அனிச்சைச் செயல்' (foetal ejection reflex) அல்லது 'ஃபெர்குஸன் அனிச்சைச் செயல்' (Fergusan reflex) என்றும் அழைக்கப்படும். இந்த அனிச்சைச் செயலின் விளைவால் நியூரோஹைபோஃபைசிஸ் உற்பத்தி செய்யும் ஹார்மோனான ஆக்ஸிடோசின், கருப்பையில் ஆற்றல் மிகுந்த சுருக்கங்களை உருவாக்கி பிறப்பு வழியின் வழியாக குழந்தை வெளியேறும் நிகழ்வை நிறைவு செய்கிறது. மேற்குறிப்பிட்ட இந்நிகழ்வுகள் அனைத்தும் சேர்த்து 'மகப்பேறு' அல்லது ‘குழந்தை பிறப்பு’ எனப்படுகிறது.
ரிலாக்ஸின் எனும் ஹார்மோன் தாய்சேய் இணைப்புத்திசுவால் சுரக்கப்படுகிறது. இது கார்பஸ் லூட்டியத்திலும் காணப்படுகிறது. இடுப்பு எலும்பு மூட்டுகளைத் தளர்வடையச் செய்து கருப்பை வாய்ப் பகுதியை வலிமையான சுருக்கங்களால் விரிவடையச் செய்து குழந்தை பிறத்தலை எளிதாக்கும் ஹார்மோன் ரிலாக்ஸின் ஆகும். பனிக்குடம் (ஆம்னியான் உறை) உடைந்து கலவிக் கால்வாய் வழியாக பனிக்குட திரவ வெளியேற்றத்தைத் தொடர்ந்து குழந்தை பிறப்பு நிகழ்கிறது. தாய்சேய் இணைப்புத்திசு, தொப்புள் கொடியின் எச்சங்கள் போன்றவை (After birth) குழந்தை பிறந்த பின் வெளித்தள்ளப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
அறுவை வழி மகப்பேறு (CAESAREAN)
கருப்பையில் குழந்தையின் நிலை (Position), தாய் சேய் இணைப்புத்திசுவின் தன்மை போன்ற காரணங்களால் பிறப்புக் கால்வாய்வழியாக இயல்பான குழந்தை பிறப்பு நடைபெற இயலாதபோது தாயின் வயிற்றுப் பகுதியிலும் கருப்பையிலும் அறுவை சிகிச்சை மூலம் சிறு வெட்டு ஏற்படுத்தி குழந்தை வெளியில் எடுக்கப்படுகிறது. இதற்கு 'வயிறு வழி மகப்பேறு’ (Abdominal delivery) அல்லது ‘அறுவை வழி மகப்பேறு' (caesarean section) என்று பெயர்.
பால் சுரப்பிகள் பாலை உற்பத்தி செய்யும் நிகழ்ச்சி 'பால் சுரத்தல்’ (Lactation) எனப்படும். ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும், கர்ப்ப காலத்தின் போதும், பாலூட்டும் போதும் பால் சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தின் இறுதியில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் மற்றும் மனித தாய்சேய் இணைப்புத்திசு லாக்டோஜென் (Human Placental Lactogen - hPL) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டு புரோலாக்டின் விடுவிப்பு காரணிகள் விடுவிக்கப்படுகின்றன. இவற்றால் தூண்டப்பட்ட முன் பிட்யூட்டரி பால் உற்பத்திக்குக் காரணமான புரோலாக்டின் ஹார்மோனைச் சுரக்கிறது.
பால் சுரப்பியின் மீச்சிறு கதுப்புகளிலிருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள ஆக்ஸிடோசின் உதவுகிறது. இது நிர்பந்த அனிச்சை செயல் (Let down reflex) எனப்படும். பாலூட்டும் காலத்தில், காலியான கருப்பையை தூண்டி சிறிது சிறிதாகச் சுருங்கச் செய்து கருப்பையை கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலைக்கு மாற்றும் வேலையையும் இந்த ஹார்மோன் செய்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு பால் சுரப்பிகள், மஞ்சள் நிற 'சீம்பாலைச்' (Colostrum) சுரக்கின்றன. இதில் லாக்டோஸ் குறைந்த அளவிலும், புரதம், வைட்டமின் A மற்றும் தாது உப்புக்கள் அதிக அளவிலும் காணப்படுகின்றன. சீம்பாலில் கொழுப்பு கிடையாது. மேலும் சீம்பாலில் அதிக அளவு IgA வகை எதிர்ப்பொருள்கள் காணப்படுகின்றன. இது குழந்தையின் உணவுப்பாதையில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றைத் தடுப்பதற்குப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய அனைத்துவித ஊட்டச் சத்துப் பொருட்களையும் கொண்ட மிகச்சரியான உணவாக தாய்ப்பால் உள்ளது. குழந்தையின் முதல் 6 மாத காலம் வரைத் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளர்வது உறுதி செய்யப்படுகிறது.
சீம்பால் (Colostrum)
குழந்தை பெற்றவுடன் உடனடியாக பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் சத்து நிறைந்த, நோயெதிர்ப்புப் பொருட்கள் கொண்ட, வளர்ச்சி மற்றும் திசுவில் பழுது நீக்கம் செய்யும் காரணிகள் நிரம்பிய திரவமே சீம்பால் ஆகும். இது குழந்தையின் நோய்த்தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டி அதனை முதிர்வடையச் செய்கின்ற. இயற்கை நுண்ணுயிர் எதிர்காரணியாக செயல்படுகிறது. இந்த முதல் தாய்ப்பால் தரும் இயற்கையான நல்ல பலன்களை வேறு எந்த செயற்கை உணவாலும் ஈடுகட்ட இயலாது. எனவே, பிறந்த குழந்தைகளுக்கு சீம்பாலை ஊட்டுவது மிகவும் அவசியம் ஆகும்.
உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் – ஆகஸ்ட் முதல் வாரம் (World Breast feeding Week- WBW)
'உலக தாய்ப்பால் ஊட்டும் செயல் கூட்டமைப்பு' (World Alliance for Breast feeding Action WABA), உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யுனிசெஃப் போன்ற நிறுவனங்கள் முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. மேலும் தொடர்ச்சியாக, இரண்டாண்டுகள் வரை குழந்தைகளுக்கு கூடுதலாக தாய்ப்பால் ஊட்டி தங்கள் குழந்தைகளை ஆரோக்கியத்துடன் வளர்க்கவும் புதிய தாய்மார்களை ஊக்கப்படுத்துகின்றன. புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை, நிமோனியா, காலரா போன்ற நோய்களையும் உயிரைக் கொல்லும் உடல் நலச்சிக்கல்களையும் இதன்மூலம் தடுக்கலாம். தாய்ப்பால் வங்கி மற்றும் பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்டும் அறை போன்ற திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வோராண்டும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நடத்தப்படுகின்றன.
ஆர்வமூட்டும் உண்மைகள்
1. அண்ட செல்லைக் கருவுறச் செய்ய இயலாத விந்து செல்களைக் கொண்ட ஆண்கள் மலட்டுத்தன்மை கொண்டவர்களாவர்.
2. ஆண்களில் விந்து செல்லை உற்பத்தி செய்ய இயலாத நிலை 'அசூஸ்பெர்மியா' (Azoospermia) எனப்படும்.
3. புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் 'புரோஸ்டேட்டைட்டிஸ்' எனப்படும். இதனால் சிறுநீர்கழித்தல் கடினமாகிறது.
4. அறுவை சிகிச்சை மூலம் விந்தகங்களை நீக்குதல் அல்லது ஆண் மலடாக்கம் 'ஆர்க்கிடெக்டமி' (Orchidectomy) எனப்படும்.
5. முதல் விந்து திரவ வெளியேற்றத்திற்கு ஸ்பெர்மார்க்கி (Spermarche) என்று பெயர்.